
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். பான் இந்தியப் படமாக வெளிவந்த ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக நடித்த விநாயகன், தனது கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
ரஜினிக்கு அடுத்து, வில்லனுக்கும் இப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லன் விநாயகத்தின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இருப்பினும் இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் இல்லையாம். வேறொரு பிரபலமான மலையாள நடிகராம்.
ஜெயிலர் படம் திரைக்கு வருவதற்கு முன்பு, இசை வெளியீட்டு விழாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபலமான நடிகரை அணுகினோம் என்று ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யார் என்ற தகவலை மட்டும் சொல்லாமல், தனது நண்பர் என்பதை மட்டும் சொல்லியிருந்தார் ரஜினி. இதனால் அவர் சிரஞ்சீவியா அல்லது மம்முட்டியா என ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில் தற்போது அந்த பிரபலமான நடிகர் யாரென்ற தகவல் கசிந்துள்ளது.
படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருந்த வசந்த் ரவி, இந்தத் தகவலை தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெயிலர் படத்தைத் தொடங்குவதற்கு முன்பு வில்லனாக நடிக்க யாரை அழைக்கலாம் என்று படக்குழுவினர் தீவர ஆலோசனையில் ஈடுபட்டனர். பான் இந்தியப் படம் என்பதால் வேற்று மொழி நடிகர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்.
ரஜினிக்கு வில்லனாக நடிக்க கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி பொருத்தமாக இருப்பார் என தீர்மானிக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடந்தது. ரஜினியின் நண்பரான மம்முட்டி வில்லனாக நடித்தால், இருவருக்கும் இடையில் சில சங்கடமான சூழல் நிலவும் என்பதைக் கருத்தில் கொண்டு இருவருமே வேண்டாம் என ஒருமனதாக முடிவெடுத்தனர். அதற்குப் பின் தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் விநாயகனைத் தேர்வு செய்தோம்” என வசந்த் ரவி கூறினார்.
தமிழக சூப்பர் ஸ்டாரும், கேரளா சூப்பர் ஸ்டாரும் மீண்டும் ஒருமுறை இணைய வாய்ப்பு கிடைத்தும் அது நடக்காமல் போனது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் மம்முட்டி - ரஜினி இணைந்து நடித்த தளபதி திரைப்படம் பிளாக் பஸ்டராக வெற்றியடைந்தது. தளபதி படத்திற்குப் பின் ஜெயிலர் படத்தில் மம்முட்டி நடித்திருந்தால் இருவரின் காம்போவையும் திரையில் பார்த்திருக்கலாம்.
ஜெயிலர் 2 படம் உருவாகி வருவதால், அதிலாவது ரஜினியுடன் மம்முட்டி இணைந்து நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நடக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெயிலர் 2 படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் அடுத்த ஆண்டுதான் திரைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.