
சினிமா துறையில் சிலரது குரல் தனித்துவம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாஸின் குரல் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவரது மிடுக்கான குரலுக்கு ரசிகர்கள் மட்டுமல்ல திரைத்துறையை சேர்ந்த பலரும் அடிமையாக உள்ளனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸின் குரலை பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பாராட்டி உள்ளார்.
2012-ம் ஆண்டு பெருமான் என்கிற திரைப்படத்தில் அறிமுகமான அர்ஜுன் தாஸ், அதனை தொடர்ந்து அந்தகாரம் படத்தில் நடித்த பின், ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ரீஎன்டரி கொடுத்தார் நடிகர் அர்ஜுன் தாஸ்.
அந்த படத்தில் அவருடைய மிடுக்கான குரல் அவருக்கு மிகவும் பிளஸ் பாயின்ட்டாக அமைந்ததுடன் தமிழக மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். அதுமட்டுமின்றி அந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார்.
பின்னர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து விக்ரம், புட்டபொம்மா (தெலுங்கு), அநீதி, ரசவாதி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக குட் பேட் அக்கி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர் இணைந்து நடனமாடிய `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் இணையத்தில் வைரலானதுடன் அர்ஜுன் தாஸின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமா மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள அர்ஜுன் தாஸ், முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக தமிழில் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி தெலுங்கு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும், விஷால் வெங்கட் இயக்கத்தில் பாம் (BOMB) என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் வரும் 24-ம்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் அர்ஜுன் தாஸின் பின்னணிக் குரல் டிரெய்லருக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அது குறித்து அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘நீங்க அரிதாகவே ஏதாவது உதவி கேட்கிறவங்கன்னு எனக்குத் தெரியும். அந்த அரிய உதவிக்கு என்னை கேட்கத் தேர்ந்தெடுத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்க விஷயத்துல நான் எப்பவும் ஒரு போன் அல்லது மெசேஜ் தூரத்துலதான் இருப்பேன். இது உங்களுக்கானது சார்’ என அவரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு பவன் கல்யாண் ‘அன்பு சகோதரா, அர்ஜுன் தாஸ், நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக அரிதாகவே, நான் ஒரு உதவி கேட்பேன். என்னுடையதைக் கருத்தில் கொண்டதற்கு நன்றி. உங்கள் குரலில் மந்திரமும் மேஜிக்கும் இருக்கிறது’ என்று பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்..