
சினிமாவில் சண்டைக் காட்சிகள் நிறைந்த அதிரடி திரைப்படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அதிரடி படங்களில் நடித்திருந்தாலும், ஆக்ஷன் கிங் அர்ஜூன் மட்டும் தனித்து நிற்கிறார். திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் அர்ஜூன். இவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவார். உடலை நன்றாக பராமரித்து சிக்ஸ் பேக் வைப்பது தொடர்பான சில அறிவுரைகளை தற்போது இளைஞர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
இன்றைய காலத்து இளைஞர்கள் பலரும் பாடி பில்டிங்கை உருவாக்கி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக பலரும் உடற்பயிற்சி கூடங்களைத் தான் அதிகம் நம்பியிருக்கின்றனர். இருப்பினும் ஒருசிலர் வெகு விரைவிலேயே உடலில் சிக்ஸ் பேக்கை வரவழைக்க, குறுக்கு வழியில் சில புரோட்டின் பவுடர்களை சாப்பிடுகின்றனர். இது அப்போதைக்குத் தான் பலனளிக்கும். ஆனால் இந்த மாதிரி பவுடர்களால் பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதி.
உடலில் சிக்ஸ் பேக் வைப்பது மிகவும் கடினமான செயல் தான். இருப்பினும் அதற்காக கடுமையாக உழைத்தால், நிச்சயமாக நல்ல முறையில் சிக்ஸ் பேக்கை வரவழைக்கலாம். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள குறுக்கு வழியை இளைஞர்கள் நாட வேண்டாம் என ஆக்ஷன் கிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் இப்போது ஒரு வாரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தாலே எனக்கு சிக்ஸ் பேக் வந்து விடும். தொடக்கத்தில் இருந்தே அதற்கு ஏற்றாற் போல் கடுமையாக உழைத்து என் உடலை தயார் செய்து வைத்துள்ளேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் பலரும் கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு குறுக்கு வழியைத் தேடுகின்றனர். இது இப்போதைக்கு நன்றாக இருக்கும். ஆனால் வருங்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தி, அவர்களை நோயாளிகளாக மாற்றி விடும். யாராக இருந்தாலும் கஷ்டப்பட்டு உடலைக் கொண்டு வந்தால் தான் என்றைக்குமே நிலைக்கும். இப்படிச் செய்தால் தான் நாம் சொல்வதை நம் உடல் கேட்கும்” என அர்ஜூன் அறிவுரை வழங்கியுள்ளார்.
கதாநாயகர்கள் பலரும் உடல் சார்ந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். இதில் சிலர் மட்டுமே சிக்ஸ் பேக் வைக்கும் அளவிற்கு தொடர்ந்து உடலை கவனித்து வருவார்கள். இந்தப் பட்டியலில் அப்போதே முன்னணியில் இருந்தவர் தான் அர்ஜூன்.
கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைந்த அர்ஜூன், சில படங்களை இயக்கியும் உள்ளார். ஜெய்ஹிந்த், முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் உள்ளிட்ட மெகா ஹிட் படங்கள் இவரது சினிமா பயணத்தில் முக்கியமானவை. இதில் முதல்வன் படத்தில் முதலில் விஜய் நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது. சில காரணங்களால் இப்படத்தில் விஜய் நடிக்காமல் போகவே, அர்ஜூன் நடித்து பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் லியோ மற்றும் அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்திருந்தார். தன்னுடைய முத்திரையை சினிமாவில் ஆழப் பதித்திருக்கும் அர்ஜூன், சினிமாவில் என்றுமே ஓர் அங்கமாகத் திகழ்வார்.