
பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியால், அராஜகம் செய்யும் ஆளாக இருந்தால் தான் மதிப்பு எனக் கல்லூரியில் ரவுடியாக வலம் வரும் நன்கு படிக்கும் மாணவன். நாற்பத்தியெட்டு பாடங்களிலும் அரியர் வைத்துத் தேர்வு ஆகாமல், வேலைக்குப் போவதாகப் பெற்றோரிடம் பொய் சொல்லி ஏமாற்றும் அவன், ஒரு கட்டத்தில், 'நீ ஒரு பெய்லியர்' என்று தனது காதலியால் உதறப்படுகிறான். வாழ்க்கையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதற்கு என்ன தகிடுதத்தங்கள் வேண்டுமானால் செய்யலாம் என்று முயன்று ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலையும் வாங்கிவிடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது பழைய கல்லூரி முதல்வரால் மாட்டிக் கொள்ளும் சூழல் வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது. அவன் திருந்தினானா. அவனது காதல் என்ன ஆனது என்பதுதான் டிராகன். இந்த டிராகன் என்பதற்கு அவர்கள் தரும் பெயர்க்காரணம் "சாரி பாஸ் இன்னும் கொஞ்சம் பெட்டராக யோசித்திருக்கலாம்" என்றே தோன்ற வைக்கிறது.
ரவுடித்தனம் செய்யும் மாணவனாகப் பிரதீப் ரங்கநாதன். முதல் அரை மணி நேரம் இவர் நடவடிக்கையைப் பார்த்து நமக்கே அவர்மேல் ஒரு வெறுப்பு வருகிறது. இவரது பெற்றோர்களாக மரியம் ஜார்ஜும் இந்துமதியும். காதலியாக அனுபமா பரமேஸ்வரன். முதல்வராக மிஷ்கின். இதைத் தவிர கே எஸ் ரவிக்குமார், ஹயாது, சித்து, கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ட்ரைலர் பார்த்தவர்கள் இது டான் படத்தை நினைவூட்டுவதாகக் கூறியிருந்தாலும் ரவுடிப் பாத்திரத்தோடு மட்டுமே அது நின்று விடுகிறது. சற்றே மெதுவாக நகரும் முதல் அரை மணி நேரத்தைக் கடந்து விட்டால் அடுத்த இரண்டு மணி நேரம் லாஜிக் மீறிய கொண்டாட்டம் தான். தனுஷை அப்படியே நினைவூட்டும் பிரதீப் சண்டையெல்லாம் போட்டு 'நான் அடுத்தக் கட்டத்திற்குத் தயாரெ'ன நிரூபித்திருக்கிறார். பார்த்துப் பழகிய ஒரு கதையைச் சுவாரசியமான திரைக்கதையுடன் கூடிய காட்சியமைப்புகளால், கூடிய வரை போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
ஒரு தவறான முடிவால் கிடைத்த வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்தாமல் உழைத்து முன்னேறவும் செய்கிறார் பிரதீப். அதில் அவருக்கு இரண்டாவது காதலும் அமைகிறது. காதலையும் தனது மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள இவருக்கும் மிஷ்கினுக்கு நடக்கும் ஆட்டம் தான் இரண்டாம் பகுதி. இதில் போதாதற்கென்று பழைய காதலியே ப்ரொபஸராக வேறு வந்து சேர்கிறார்.
இப்படித் தான் முடியும் என்று நினைக்கும்போது 'இல்லை நான் வேறொரு முடிவு வைத்திருக்கிறேன்; காத்திருங்கள்' என்று இன்னும் ஒரு பத்து நிமிடம் கடத்துகிறார் இயக்குனர். கடைசி காட்சியில் ஒரு நடிகையின் கேமியோவுடன் நிறைகிறது படம்.
ரசிகர்களுக்குத் தேவையானது எண்டர்டெயின்மெண்ட். அதற்கு நாங்கள் கியாரண்டி என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறது இந்த டீம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும் லியோன் ஜேம்ஸின் இசையும் மிகப்பெரிய பலம். ஆனால் பின்னணி இசை லவ் டுடேவை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. இரண்டு பாடல்கள் பரவாயில்லை.
ஒரு கட்டத்தில், தன்னையே இன்னொரு மாணவனிடம் பார்க்கும் பிரதீப், 'இவ்வளவு கேவலமாகவா நான் இருந்திருக்கிறேன். நான் உனக்கு ஏற்றவனில்லை' என்று பழைய காதலியிடம் சொல்லும் தருணம் அழகு. நான் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் இன்னொருவன் வாழ்க்கையைக் கெடுத்து நான் வாழ வேண்டும் என்ற அளவு கெட்டவனில்லை என்று ஹீரோ சொல்வது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதுவரை அவர் வளர்ந்து வந்ததும் இன்னொருவருக்கு சென்றிருக்க வேண்டிய வாய்ப்பு தானே என்று தோன்றத்தான் செய்கிறது.
ஒரு படம் வெற்றி பெரும் சூத்திரம் யாருக்கும் சுலபமாகக் கைவருவதில்லை. இதே போல இன்னொரு படம் கடந்த வாரம் வந்திருந்தாலும், டிராகன் பெற்றிருக்கும் வரவேற்பு யாரும் எதிர்பாராதது. மிக இயல்பாகப் படம் முழுதும் உபயோகப்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகள், குடிக்கும் காட்சிகள், காலேஜ், பள்ளியில் நடக்கும் அராஜகங்கள் என இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் குடும்பமாக வரும் ரசிகர்களைக் கவர கடைசியில் இரண்டொரு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. படம் முழுதும் தவறுகள் செய்துவிட்டு கடைசியில் திருந்துங்கப்பா என்று சொல்லும் அதே பார்முலா தான். இளைஞர்கள் நல்லதை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
லாஜிக், கதை, கத்தரிக்காய் என்றெல்லாம் பெரிதாக இருக்க வேண்டாம். போனோமா பார்த்தோமா சிரித்தோமா ரசித்தோமா என்ற படம் போதும் என்று நினைப்பவர்களை டிராகன் ஏமாற்றாது. ஆவரேஜ், பரவாயில்லை, ஸோ ஸோ என்றெல்லாம் பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும்பொழுது, மக்களின் வரவேற்பிலும் வசூலிலும் மற்றொரு இலக்கைத் தொட்டிருக்கும் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்பதுதான் உண்மை.