விமர்சனம்: ஹாட்ஸ்பாட் 2 மச் - பார்க்கலாமா? வேண்டாமா?
ரேட்டிங் (3 / 5)
ஒரு வருடத்திற்கு முன்பு ஹாட்ஸ்பாட் என்ற படத்தில் நான்கு வித்தியாசமான கதைகள் சொல்லி 'மாறுபட்ட முயற்சி' என்ற பாராட்டை பெற்றவர் இப்படத்தின் டைரக்டர் விக்னேஷ் கார்த்தி. தற்போது இவர் 'ஹாட்ஸ்பாட் 2 மச்' (Hotspot 2 Much) என்ற படத்தை தந்துள்ளார். இந்த 2 மச் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பிரியா பவானி சங்கர் சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர். ஒரு தயாரிப்பாளரிடம் சென்று தன்னிடம் இருக்கும் மூன்று கதைகளை சொல்கிறார்.
ரசிகனின் முட்டாள் தனத்தை சொல்லும் முதல் கதை:
இரண்டு இளைஞர்கள் இரண்டு சினிமா ஹீரோகளுக்கு தீவிரமான ரசிகர்களாக இருக்கிறார்கள். இருவரும் தனித் தனி குழுக்களாக பிரிந்து உன் ஹீரோ பெரியவரா? என் ஹீரோ பெரியவரா? என்று சண்டை போட்டு கொள்கிறார்கள். ஒரு மர்ம மனிதன் இந்த இரண்டு இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கடத்தி விடுகிறான். இந்த மனிதன் இரண்டு இளைஞர்களிடமும் ஒரு வித்தியாசமான டிமாண்ட் வைக்கிறான். இந்த டிமாண்ட் என்ன? இந்த டிமாண்டை இந்த இளைஞர்கள் நிறைவேற்றினார்களா? என்று சொல்கிறது இந்த கதை.
ஆடை சுதந்திரத்திற்கும், ஆடை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லும் இரண்டாம் கதை:
தம்பி ராமையாவின் செல்ல மகள் சஞ்சனா திரிவேதி. அமெரிக்காவில் படித்து விட்டு சென்னை வரும் சஞ்சனா மிகவும் மாடனாக, கவர்ச்சியாக உடையணிகிறார். இது அப்பா தம்பி ராமையாவுக்கு கவலை தருகிறது. மகளை மாற்ற முயற்சி செய்கிறார். எதுவும் பயன் தரவில்லை. மகளை திருத்த அதிரடியாக ஒரு விஷயம் செய்கிறார். இந்த விஷயம் என்ன என்று இந்த இரண்டாம் கதை சொல்கிறது.
குழப்பமான மூன்றாம் கதை:
அஸ்வின் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். தொலைபேசி வழியாக பவானியின் நட்பு கிடைக்கிறது. திருச்சியில் இருக்கும் பவானியை சந்திக்க செல்லும் அஸ்வின்க்கு அங்கே பவானி 2050ஆம் ஆண்டில் இருந்து பேசி இருக்கிறார் என்று தெரிய வருகிறது.
இந்த மூன்று கதைகளில் முதல் இரண்டு கதை புதுமையாகவும், காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. ஆடை சுதந்திரம் என்பது இடம், பொருளுடன் தொடர்புடையது என தம்பி ராமையா சொல்லும் இடம் சபாஷ் சொல்ல வைக்கிறது. பிரியா பவானி சங்கர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் காட்சிகள் சிரிப்புக்கு கியாராண்டி தருகிறது. டைரக்டர் முதல் இரண்டு கதைக்கு தந்த முக்கியத்துவம் மூன்றாவது கதைக்கு தரவில்லை. அஸ்வின் பவானி காதல் 2024, 2026 என்று மாறி, மாறி சென்று குழப்பத்தை தருகிறது.
படத்தில் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் ஒளிப்பதிவு தான். சிறிது நாடக பாணி கதை கொண்ட இப்படத்திற்கு அளவாக ஒளிப்பதிவு இருந்தால் போதும் என்று முடிவு செய்யாமல், அழகாக தந்துள்ளார் கேமரா மேன் பிரசன்னா.
எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் வழக்கம் போல சபாஷ் வாங்குகிறார். தற்கால சினிமா ரசிகன் பற்றி வசனங்கள் பலே சொல்ல வைக்கிறது. இவரது மகன் ஆதித்யா பாஸ்கரும் இந்த படத்தில் நடித்துள்ளார். ஒரு 'வெறி கொண்ட சினிமா ரசிகனை' கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.
மூன்று ஹீரோயின்களில் நடிப்பில் முன்னணியில் இருப்பது பவானி ஸ்ரீ தான். விடுதலைக்குபின் பவானி ஸ்ரீக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளார்.
அஸ்வின் சாதாரணமாக பேச வேண்டிய இடத்தில் கூட சத்தம் போட்டு பேசுகிறார். விக்னேஷ் இரண்டாண்டுகளுக்கு முன் இயக்கிய ஹாட்ஸ்பாட் படத்தில் நான்கு கதைகளையும் நேர்த்தியாக சொல்லி இருப்பார். அந்த அளவுக்கு நேர்த்தி இந்த ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தில் இல்லையென்றாலும் ஓரளவு ரசிக்கும் படி உள்ளது.

