விமர்சனம்: டியூட் - தீபாவளி சரவெடி!
ரேட்டிங்(3 / 5)
"சாரே, உங்கள் காதலி என் மனைவி ஆகலாம். ஆனால் உங்கள் மனைவி என் காதலி ஆக முடியாது" என்ற புகழ்பெற்ற டயலாக் அந்த ஏழு நாட்கள் படத்தில் இடம்பெறும். வேறொருவரை காதலிக்கும் பெண் மனைவியாகி அந்த மனைவி மீண்டும் பழைய காதலனை கைபிடிக்க முயற்சி செய்தால் என்னவாகும் என்று சொல்ல வந்திருக்கும் படம் டியூட். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் இப்படம் வந்துள்ளது.
டியூட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தாய்மாமன் சரத் குமாரின் ஒரே மகள் மமிதா பைஜூ. மமிதா தன் காதலை பிரதீப்பிடம் சொல்கிறார். ஆனால் தனக்கு மமிதா மீது எந்த வித ஈர்ப்பும் இல்லை என்று சொல்லி விடுகிறார். இதனால் சோகம் கொண்டு மமிதா மேற்படிப்பு கற்க வெளிநாடு செல்கிறார். மமிதா சென்ற பின் சில மாதங்கள் கழித்து தனக்கும் மமிதா மீது காதல் இருப்பதை புரிந்து கொள்கிறார். தாய்மாமன் சரத்குமாரிடம் சொல்லி மமிதாவை திருமணம் செய்து வைக்க சொல்கிறார்.
திருமணத்திற்கு வரும் மமிதா தான் வெளிநாட்டில் படித்த போது ஒருவரை காதலித்ததாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்கிறார். சரத்குமார் சாதியை காரணம் காட்டி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒரு திட்டம் போடுகிறார்கள். அதாவது அப்பாவுக்காக இருவரும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு விவாகரத்து செய்து விட்டு பிடித்த காதலனுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஐடியா செய்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சில மாதங்களில் மமிதா பைஜூ கர்ப்பமாகிறார். இதற்கு பிறகு நிலவும் குழப்பத்திற்கு விடை சொல்கிறது இந்த கதை.
படத்தின் முதல் காட்சியில் கல்யாண வீட்டில் பிரதீப் ரங்காநதனின் செய்யும் அட்ராசிட்டியுடன் தொடங்கும் படம் கலகலப்பான காட்சிகளுடன் நகர்கிறது. சாதி ஆணவ படுகொலைகளுக்கு பிரதீப் ரங்கநாதன் ஸ்டைலில் பதிலடி தந்துள்ளார் டைரக்டர். "இந்த 2025 வருஷத்திலும் தன் பெண்ணை லவ் பண்ணதுக்கு கொலை செய்ணும்னு நினைக்கறது தான் வல்கர். நான் நினைக்கிறது வல்கர் இல்லை" என்று பிரதீப் ரங்கநாதன் சொல்வது மிகவும் யதார்த்தம்.
நடிப்பில் பிரதீப் ரங்கநாதனை முந்துகிறார் மமிதா பைஜூ. காதல் புறக்கணிக்கப்படும் போதும், காதலை விட்டு தராமல் பேசும் போதும் சிறந்த நடிப்பை தந்துள்ளார். பிரதீப் அடுத்த சிவாகார்த்திக்கேயனா அல்லது தனுஷா? என்ற கேள்வி இங்கே இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தனக்கென புது பாணியை உருவாக்கி வருகிறார். துள்ளல், கோபம், சோகம் மூன்றிலும் சரியாக பொருந்தி போகிறார். சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சற்று பிசகினாலும் விரசமாக மாறக்கூடிய கதையை நேர்த்தியாக தந்ததற்காக பாராட்டலாம். டியூட்- தீபாவளி சரவெடி.