
சினிமா துறையில் நடிகர்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டுமானால் வெற்றிப் படங்களை அதிகளவில் கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு படம் வெற்றி பெற்றால் தான் அடுத்த படத்திற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தோல்விப் படங்களையே கொடுத்து வந்தால், உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு கூட மார்க்கெட் சரிந்து விடும்.
படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், ஒரு நடிகர் கதைத் தேர்வில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கதைத் தேர்வில் சிறந்தவராக விளங்கினால் வெகு விரைவிலேயே சினிமா துறையில் உச்சத்தைத் தொட முடியும். தற்போது இதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் துல்கர் சல்மான்.
மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான், தற்போது பான் இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிட்சையமான நடிகராகி விட்டார். இதற்கு முக்கிய காரணமே இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சீதா ராமம் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான். கதைத் தேர்வில் நேர்த்தியாக செய்லபட்டதன் பலனாகத் தான், 2 வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான செகண்ட் ஷோ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து தீவரம் மற்றும் பட்டம் போலே போன்ற படங்களில் நடித்தார். 2020 இல் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் தான் தமிழ் சினிமாவிற்கு இவரை நன்கு பரிட்சையமாக்கியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.
துல்கர் சல்மானின் எதார்த்தமான நடிப்பு மட்டுமல்ல இவரது கதைத் தேர்வு உத்தியும் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இருபெரும் இயக்குநர்களின் படங்களை நிராகரித்து விட்டுத் தான் சீதா ராமம் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களைத் தேர்வு செய்தார் துல்கர்.
சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் துல்கர் சல்மானைத் தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் இப்படத்தை நிராகரித்து விட்டு சீதா ராமம் படத்தில் நடித்தார். இந்தியன் 2 தோல்வியடைய, சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதோடு பான் இந்திய அளவிலும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கும் துல்கர் சல்மானைத் தான் முதலில் அணுகினர். ஆனால் இந்தக் கதையையும் அவர் நிராகரித்து விட்டு அந்நேரத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி அடைந்தது. துல்கர் நிராகரித்த தக் லைஃப் படம் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவும், சங்கர் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் பல நடிகர்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் இந்த அரிய வாய்ப்பை ஒரு இளம் நடிகர் நிராகரிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. இருப்பினும் அவர் துணிச்சலாக நிராகரித்ததால் தான் இரண்டு நல்ல படங்களைக் கொடுத்துள்ளார் துல்கர். இதன் மூலம் கதைத் தேர்வும் ஒரு சிறந்த கலை தான் என்பதை நிரூபித்து இருக்கிறார் துல்கர் சல்மான்.