

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் நடித்த கடைசி படமாக வந்துள்ளது ஈகோ ராமன் (Ego Raman). இப்படத்தை கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ளார். இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். வழக்கமாக இருக்கும் பச்சை பசேல் என்று இருக்கும் கிராமத்தைப் போல இல்லாமல் சற்று வறண்ட பூமியாக இருக்கிறது அந்த கிராமம். அந்த கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கிறார் ரோபோ சங்கர். ராமன் என்ற பெயர் கொண்ட இவர் சற்று ஈகோ பிடித்தவர். ஈகோ என்றால் அந்த பள்ளியில் அல்லது அந்த பகுதியில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வாகனம் வைத்திருந்தால் அதைவிட சற்று கூடுதலான விலைக்கு ஒரு வாகனம் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு ஈகோ பிடித்தவர். தன்னைவிட யாரும் சிறப்பாக இருக்கக் கூடாது என்று எண்ணும் தலைமை ஆசிரியர்தான் நமது ஹீரோவான ஈகோ ராமன்.
அந்தப் பகுதியில் இருக்கும் ஒருவர் மிகவும் மாடர்ன் யமஹா பைக்கை வாங்குகிறார். ஈகோ கொண்ட நமது இராமனும் அதே பைக்கை வாங்குகிறார். ஒரு நாள் அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் வளர்க்கும் நாய் நமது ஈகோ ராமன் பைக்கில் செல்லும்போது துரத்துகிறது. இதனால் பைக்கில் இருந்து கீழே விழுகிறார். இவருக்கு அடி விழுகிறது. இவரது பைக்கும் சேதம் ஆகிறது. இதனால் கோபம் கொள்ளும் நமது ஈகோ ராமன் அந்த நாயை தேடிச்சென்று அடித்துக் கொள்கிறார். வேறொரு யமாஹா பைக்கை வாங்குகிறார்.
சில நாட்கள் கழித்து அந்த நாயின் உரிமையாளர் தனது முன்னாள் மாணவன் என்று தெரிகிறது. அந்த மாணவன் ஈகோ ராமன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். தனது நாயைக் கொன்றது தனது முன்னாள் ஆசிரியர் தானா என்று ஒரு சந்தேகம் கொள்கிறான் அந்த இளைஞன். நாயை கொன்றது ஆசிரியர் என்று தெரிந்ததா? ஈகோ ராமன் அந்த பைக் உடன் நிம்மதியாக வாழ்ந்தாரா? என்று சொல்கிறது மீதி கதை.
ரோபோ சங்கர் இதுவரை நடித்த பெரும்பான்மையான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமே எடுத்து நடித்திருக்கிறார். முதல் முறையாக கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் ஒரு சில இடங்களில் சிறிது செயற்கைத்தனம் தெரிந்தாலும் பல காட்சிகளில் நன்றாகவே நடித்து இருக்கிறார். குறிப்பாக அந்த கிளைமேக்ஸ் காட்சியில் கண்கலங்கும் இடத்தில் ரோபோ சங்கர் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை தந்திருக்கிறார். ஒரு ஈகோ கொண்டவராகவும் ஜாதி உணர்வு கொண்டவராகவும் நடிக்கும் இடத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இதற்கு முன் நாம் ரோபோ சங்கரை இப்படி ஒரு நெகடிவ் கேரக்டரில் பார்த்ததில்லை. இவரின் நடிப்பை பார்க்கும் பொழுது இன்னும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல நல்ல கேரக்டரில் நடித்திருப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது.
இவருக்கு அடுத்தபடியாக இந்த படத்தில் நன்றாக நடித்திருப்பது சிபி பவனச்சந்திரன். எதார்த்தத்திற்கும் கனவிற்கும் இடைப்பட்ட இடத்தில் வாழும் ஒரு மனிதனாக நடித்திருக்கிறார் இவர்.
படம் மிக வேகமாக நகரவில்லை மெதுவாகத்தான் நகருகிறது. படம் பார்க்க செல்லும் முன்பே நாம் இந்த உணர்வை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது பரபரப்பாக கதை சொல்லும் நுட்பம் கொண்ட திரைக்கதை அல்ல. மாறாக ஒரு தனி மனிதனின் ஈகோ எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது என்று சொல்லக்கூடிய ஒரு கதை. காட்சிகள் நகர நகர தான் நாம் இதை ரசிக்க முடிகிறது. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கிறது. படத்தில் ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது இந்த மெசேஜ் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்று. வழக்கமான அதிரடி காதல் என்று செல்லும் படங்களுக்கு மத்தியில் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டுமென்று நினைத்ததற்காக இந்த படத்தை நாம் பாராட்டலாம்.
இந்த படத்தில் பெரும்பான்மையான காட்சிகளில் குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட நடிகர்களை நடத்தி இருக்கிறார்கள். லொகேஷன் கூட மிக குறைவான வீடுகள் இருப்பதை போல தான் இருக்கிறது.
மிக அதிகமான கேரக்டர்கள் மாறி மாறி வரும் லொகேஷன்கள் என்று வந்து நம்மை அயற்சி கொள்ள செய்யும் தமிழ் சினிமாவிற்கு மத்தியில் இது போன்ற குறைந்த எண்ணிக்கையிலான நடிகர்களும், லொகேஷனும் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது. இன்னும் ஸ்கிரிப்ட்டை சற்று கூர்மையுடனும், நேர்த்தியாகவும் தந்து இருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பான ஒரு படமாக வந்திருக்கும்.
ரெய்மான் ரெட்ரிக் பின்னணி இசை இரைச்சல் இல்லாமல் ரசிக்கும்படி இருக்கிறது. ஹீரோயின் கீர்த்தனா நம் வீட்டு பெண்ணை போல தான் இருக்கிறார். இவரது நடிப்பும் பேச்சும் ஹீரோயின் போல் இல்லாமல் மிக சாதாரணமாக தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல நடிகை என்று பெயர் வாங்கலாம்.
பரபரப்பான படங்கள் வரும் மத்தியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு அமைதியான படமாக குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது.
ஈகோ ராமன் படம் விட்டு நாம் வெளியில் வரும்போது ரோபோ சங்கரின் நினைவு நம் மனதில் நீண்ட நேரம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் தேவையில்லை, பிரம்மாண்டமான கேமரா ஒர்க் வேண்டியதில்லை, குரூப் டான்ஸ் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை தாராளமாக ரசிக்கலாம். ஈகோ ராமன் - ரோபோ சங்கருக்கு ஒரு அஞ்சலி.