விமர்சனம்: ஏக் தின் (2026) - ஹிந்தி - ரொமாண்டிக் ட்ராமா!

EK DIN
EK DIN
Updated on
ரேட்டிங்(3 / 5)

பிரேமம் மலர் டீச்சருக்கு (சாய் பல்லவி) கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சாய் பல்லவி நடித்த ஹிந்திப் படமான ஏக் தின் (EK DIN) ஒரு feel good ரொமாண்டிக் மூவி.

மே 1 முதல் மும்பையில் வெளியான இந்தப் படம் இப்போது மே 8 முதல் தமிழகம் முழுக்க ஆங்கில சப்-டைட்டிலுடன் முக்கியத்திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில ஊர்களில் தமிழ் டப்பிங்கில் 'ஒரு நாள்' என்ற டைட்டிலில் வெளியாகி இருக்கிறது.

15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஒரு வாரத்தில் 5 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.

தாய்லாந்தில் வெளியான ஒன் டே (2016) என்ற படத்தின் அபிசியல் ரீமேக் இது. படத்தின் டைட்டில், திரைக்கதை என எதையும் மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு ஐடி கம்பெனியில் டெக்னிகல் அசிஸ்டெண்ட் ஆகப் பணி ஆற்றுகிறான். அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவன். அவனை, அவன் பெயரை கம்பெனியில் பெரும்பாலான நபர்களுக்குப் பரிச்சயம் இல்லை. 'இருக்கற இடம் தெரியாம வாழ்ந்துட்டுப் போயிடனும்' என்பது மாதிரி நாயகன் இருக்கிறான்.

நாயகி அதே கம்பெனியில் தான் வேலை செய்கிறாள். நாயகன் நாயகி மீது ஒருதலையாகக் காதல் கொள்கிறான்.

வில்லன் இந்த கம்பெனியின் எம்.டி. இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கிறாள். ஆனால் நாயகியிடம் வில்லன் நெருக்கமாகப் பழகுகிறான். நாயகிக்கு வில்லனின் திருமண விஷயம் தெரியும். விரைவில் மனைவியை டைவர்ஸ் பண்ணி விடுவேன் என்று பொய் சொல்லி நாயகியைக் காதல் வலையில் விழ வைத்து விட்டான்.

ஒரு நாள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் ஒரு மீட்டிங் நடக்க இருப்பதால் கம்பெனியில் பணி ஆற்றும் அனைவரும் வெளிநாடு போகிறார்கள். அங்கே பனிமலையில் நடக்கும்போது எதிர்பாராதவிதமாக நாயகிக்கு தலையில் அடிபட்டு நினைவுகளை இழக்கிறாள்.

நாயகிக்கு ஒரு நாள் மட்டுமே நினைவு இருக்கும், பழைய நினைவுகள் இருக்காது. அடுத்த நாள் முன் தின நிகழ்வுகளை மறந்து விடுவாள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகன் நாயகியிடம் நாம் இருவரும் காதலர்கள் என்று பொய் சொல்கிறான். நாயகியும் அதை நம்பி விடுகிறாள்.

நாயகன், நாயகி இருவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள், பழகுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகனை நாயகிக்கு மிகவும் பிடித்துப்போய் உடல் ரீதியான நெருக்கத்துக்குத் தயார் ஆகிறாள்.

இதற்கு மேல் எதையும் மறைக்க விரும்பாத நாயகன் நாயகியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகிறான்.

இதற்குப்பின் நாயகி எடுத்த முடிவு என்ன? வில்லனுடன் சேர்ந்தாளா? நாயகன் உடன் சேர்ந்தாளா? என்பது மீதித் திரைக்கதை.

நாயகி ஆக சாய் பல்லவி அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். மொத்தப் படத்தையும் இவர் ஒருவர்தான் தோளில் தாங்குகிறார். பனிமலைப் பிரதேசங்களில் இவரது குளிர்ச்சியான முகம், அவரது க்யூட் எக்ஸ்பிரசன்ஸ் அனைத்தும் பிரமாதம்.

நாயகன் ஆக ஜுனைத்கான் நடித்திருக்கிறார். இவர் நமக்கு பரிசசயம் இல்லாத முகம் என்பதால் அந்நியப்பட்டுதான் தெரிகிறார். அப்பாவித்தனம், நேர்மை போன்ற குணங்களில் கவர்கிறார்.

வில்லன் ஆக குணால் கபூர் நடித்திருக்கிறார். நயவஞ்சக நடிப்பை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகன் வில்லன் இருவருக்கும் மோதல் அல்லது க்ளைமாக்ஸ் பைட் இல்லாதது ஒரு ஆறுதல்.

ராம் சம்பத்தின் இசையில் 6 பாடல்கள், அனைத்தும் இனிமை. பின்னணி இசையும் கச்சிதம்.

மனோஜ் லோபோவின் ஒளிப்பதிவில் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல பிரமாதமான ஷாட்ஸ், இயற்கை அழகை அள்ளி இருக்கிறது. நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ், சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களை எல்லாம் நுணுக்கமாக வெளிப்படுத்தி இருக்கிறது.

பால்டூ சலூஜாவின் எடிட்டிங்கில் படம் 125 நிமிடங்கள் ஓடுகிறது.

சினேகா தேசாய், ஸ்பந்தன் மிஸ்ரா ஆகிய இருவரும் திரைக்கதை அமைக்க சுனில் பாண்டே இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 29 (2026) - ரொமாண்டிக் டிராமா!
EK DIN

சபாஷ் டைரக்டர்

  • நாயகி நாயகனிடம் ஏதாவது வேண்டிக்கொள், இந்த இடத்தில் பிராரத்தனைகள் பலிக்கும் என்று சொன்னதும் நாயகன் தனக்காக வேண்டிக்கொள்ளாமல் நாயகிக்காக வேண்டிக்கொள்ளும் காட்சி கிளாசிக்.

  • லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு இரண்டும் கலக்கல் ரகம். இந்தக்கோடை வெய்யிலுல் பனிக்கட்டிப் பிரதேசத்தில் உலாப்போன அனுபவம் ஆடியன்சுக்கு.

  • நாயகியுடன் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் நாயகன் நாயகியுடன் நெருக்கமாகும் தருணம் வாய்க்கும்போது உண்மையை சொல்லி விலகும் நேர்மை மனதைத் தொடுகிறது. நாயகி, நாயகன் இருவரும் எப்படியாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது நல்ல எமோஷனல் கனெக்ட் இருப்பதால் தான்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: PATRIOT (2026) - மலையாளம் - சைபர் க்ரைம் ஸ்பை ஆக்சன் திரில்லர்!
EK DIN

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • பிரமாதமான அழகி ஆன நாயகி ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பது தெரிந்தும் வில்லனைக் காதலிப்பது எப்படி? வசதியானவன் என்பதாலா? வேறு இணை சிக்கவில்லை என்பதாலா? தெளிவாக சொல்லப்படவில்லை.

  • வில்லனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பது நாயகனுக்கும், கம்பெனியில் பணியாற்றுபவர்களுக்கும் தெரிகிறது. ஆனால் நாயகிக்குத் தெரியவில்லை.

  • நாயகன் நாயகியுடன் சுற்றுவதைத்தடுக்க அல்லது பிரிக்க வில்லன் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

  • கவித்துவமாக இருக்கட்டும் என்பதற்காக க்ளைமாக்சை அப்படி வைத்து விட்டார்கள். ஆனால் நம் மனம் க்ளைமாக்சை ஏற்கவில்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16 +

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - மிக மெதுவாக நகரும் திரைக்கதை அமைப்பு, சாய் பல்லவி ரசிகர்கள், கேமரா லவ்வர்ஸ், காதலர்கள் பார்க்கலாம்.

பி.கு: இது வணிக ரீதியான வெற்றியைப்பெறாத படம் என்றாலும் நல்ல படம்.

logo
Kalki Online
kalkionline.com