விமர்சனம்: EMI (மாத தவணை)!
ரேட்டிங்(3 / 5)
'இது வேற ஒண்ணுமில்ல, நாம பட்ற பாடுதான்.' பல நடுத்தர குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் கடினமாக கடந்து போகக்கூடிய விஷயம் EMI என்னும் மாத தவணை. வீட்டுக்கு EMI, வாகனங்களுக்கு EMI, செல்போனுக்கு EMI என நம்மில் பலர் EMI யில் பொருட்கள் வாங்கி கொண்டுள்ளார்கள். இப்படி EMI பணத்தில் பொருட்கள் வாங்கி ஒருவர் படும் அவஸ்தையை சொல்லும் படம் தான் EMI (மாத தவணை).
இந்த படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் சதா சிவம். மாத சம்பளகாரரான நம்ம ஹீரோ சிவா (சதா சிவம்) நினைக்கும் பொருட்கள் அனைத்தையும் EMI யில் வாங்குபவர். தன் காதலி ரோஸிக்கு (சாய் தன்யா) EMI யில் கார் வாங்கி தருகிறார். இதனால் இம்பரஸ் ஆகும் ரோஸி, தன் அப்பாவின் பேச்சை மீறி சிவாவை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே சிவாவுக்கு வேலை போய் விடுகிறது. இதனால் சிவாவால் மாத தவணை சரியாக செலுத்த முடியவில்லை. EMI தந்த பைனான்ஸ் கம்பெனிகாரர்கள் சும்மா விடுவார்களா? பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். சிவா எஸ்கேப் ஆகி கொண்டே இருக்கிறார். பைக் EMI தந்த நிறுவனமும், கார் EMI தந்த நிறுவனமும் தங்கள் அடியாட்களை வீட்டுக்கு அனுப்பி சிவாவின் மனைவியையும், அம்மாவையும் அசிங்கமான வார்த்தைகளை பேசி அவமானப்படுத்துகிறார்கள். இதனால் சிவா குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த மன உளைச்சலால் சிவாவின் அம்மா விபத்துகுள்ளாகிறார். அம்மாவின் சிகிக்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கிறார் சிவா. அம்மா பிழைத்தாரா? சிவா கடனில் இருந்து எப்படி மீண்டார் என்று சொல்கிறது இந்த படம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் EMI வாங்கி நம்மில் பலர் விழி பிதுங்கி நிற்பது மனதில் வந்து போகிறது. கார் பைனான்ஸ் காரர்கள் வீட்டிற்கு வந்து செய்யும் அடாவடி, சாட்சி கையெழுத்து போட்ட நண்பர்களே சிவாவுடன் சண்டை போடுவது, கிளைமாக்ஸ் காட்சி என பல காட்சிகள் டச்சிங்காக இருக்கிறது. "போன கூட EMI ல் வாங்கணுமா"? என சிவா வின் மனைவி கேட்கும் போது "எல்லா features இருக்கற மாதிரி போன் வேணும்னு கேட்டது நீ. நீ கேட்ட போன் ஐம்பதாயிரம். நான் எங்க போவேன்?" என சிவா பதில் சொல்லும் போது இது நம்ம வீட்டு கதை போல் இருக்கே என சொல்லத் தோன்றுகிறது.
கதையை அங்கே இங்கே தேடாமல் நாம் சந்திக்கும் ஒரு சாதாரண பிரச்சனையை களமாக வைத்து படம் தந்துள்ளார் சாதா சிவம். இவரே ஹீரோவாக நடித்துள்ளத்தால் புரிந்து, உணர்ந்து நடித்திருக்கிறார். இது வரை இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த சாய் தான்யா தனி ஹீரோயினாக முதன் முதலாக நடித்துள்ளார். மெயின் ஹீரோயினாக நடிக்க தனக்கு திறமை இருப்பதை நடிப்பின் மூலம் நிரூபித்து உள்ளார்.
அங்காடி தெரு பிளாக் பாண்டி மீண்டும் கம் பேக் தந்து சிரிக்க வைக்கிறார். பெரிய பேனர் இல்லாமல், ஒரு சிறிய ஆனால் சமூக பிரச்சனையை சொல்லி நம்மை திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்த EMI. நம் கனவுக்கும், யதார்த்ததிற்கும் இடையே உள்ள இடைவெளி இந்த மாத தவணை என்று புரிய வைக்கிறது இந்த படம். இந்த படம் பார்த்த பின் "உங்களுக்கு லோன் வேணுமா என்று போன் வந்தால், ஆளை விடுங்கடா சாமி" என்று சொல்வீர்கள்.