விமர்சனம்: 'ஃபேமிலி படம்' - தேவையற்ற ஜிகினாக்களுடன் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் ஓவர்!
ரேட்டிங்(2.5 / 5)
தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு. மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை திரையில் சொன்னால் மக்கள் ஆர்வமுடன் பார்ப்பார்கள். ஆனால் சினிமாக்காரர்கள் தாங்கள் திரைத்துறையில் சந்திக்கும் வலிகளையும், போராட்டங்களையும் திரையில் சொன்னால் மக்கள் ஆர்வமுடன் ரசித்து பார்க்க மாட்டார்கள். கடந்த காலங்களில் திரைத்துறை சார்ந்த பிரச்சனைகளை சொன்ன பல படங்களை மக்கள் பெரிய அளவில் ரசிக்க வில்லை. இதற்கு காரணம் சினிமாக்காரர்களின் வாழ்க்கை மிகவும் 'கலர் புல்லாக' இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருப்பதுதான். 'யார் எப்படி எண்ணினாலும் பரவாயில்லை; நான் சந்தித்த கஷ்டங்களை கண்ணடிப்பாக படமாக தருவேன்' என்ற முடிவுடன் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமுருகன் 'ஃபேமிலி படம்' தந்துள்ளார்.
நம்ம ஹீரோ தமிழ் (உதய் கார்த்தி), சினிமா டைரக்டராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் பல தயாரிப்பாளர்களை சந்திக்கிறார். முதலில் யாரும் வாய்ப்பு தரவில்லை. அதிர்ஷ்டவசமாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழுக்கு படம் இயக்க வாய்ப்பு தருகிறார். அட்வான்சாக ஒரு லட்சம் தந்து ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். அதோடு மட்டுமல்லாமல், பிரபல ஹீரோவாக இருக்கும் தன்னுடைய தம்பிதான் அப்படத்திற்கு ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கண்டிஷணும் போடுகிறார். வேண்டா வெறுப்பாக தமிழும் ஒப்புக் கொள்கிறார். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தயாரிப்பாளர், தமிழ் படத்தை இயக்க வேண்டாம், கதையை மட்டும் தந்தால் போதும் என்று கோரிக்கை வைக்கிறார். தமிழ் மறுத்து விடுகிறார். இதனால் தமிழுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
தமிழின் கனவை நிறைவேற்ற, அவரது சகோதரர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடும்பமாக படம் தயாரிக்க முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். இவர்கள் குடும்பமாக தயாரித்து இயக்கும் படம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த ஃபேமிலி படம்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமா கனவுடன் போராடும் சராசரி இளைஞன், அறிமுக இயக்குனரின் கனவை சிதைக்கும் தயாரிப்பாளர்கள், பந்தா காட்டும் ஹீரோ, பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பஞ்சரான வசனங்கள் என படத்தின் முதல் பாதி வெகு ஜன ரசிகனுக்கு தெரியாத சினிமா உலகத்தை காட்டி சபாஷ் போட வைக்கிறது. குடும்பமாக படத் தயாரிப்பில் இறங்கும் இரண்டாம் பாதி மிக சுமாராக, அதிகம் ஆழம் இல்லாமல் மிக சாதாரணமாக பயணிக்கிறது.
முதல் பாதியில் இருந்த டீடெயிலிங் இரண்டாம் பாதியில் இல்லை. சினிமா தயாரிப்பதை விட ரிலீஸ் செய்வது மிகக் கடினம். இங்கே தேவதூதன் போல் ஒருவர் வந்து படத்தை ரிலீஸ் செய்கிறார்.
தல அஜீத் படம் வெளியாகும் நாளில் இவர்கள் தயாரிக்கும் படமும் ரீலீஸ் ஆகி வெற்றி பெறுகிறது என்று காட்டுவதெல்லாம் ரொம்ப டூ மச். ஹீரோவுக்கு வழக்கம் போல் ஒரு காதலி இருக்கிறார். (சினிமா அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. ஆனா காதலி மட்டும் கிடைக்குது) இது போல் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதால் நல்ல யதார்த்த படமாக வர வேண்டிய இப்படம் தேவையற்ற 'ஜிகினாகளுடன்' வந்திருக்கிறது.
தமிழாக நடிக்கும் உதய் கார்த்தி ஏமாற்றம் தரும் வலியை சரியாக பிரதிபலிக்கிறார். இனி வரும் காலங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்தால் நல்ல இடத்திற்கு வரலாம். பேச்சாளர் மோகனசுந்தரம் தாத்தாவாக நடித்து நம்மை சிரிக்க வைக்கிறார்.
நாம் திரையியில் பார்த்து ரசிக்கும் நட்சத்திரங்கள், காட்சிகள் என அனைத்துமே இயக்குனரின் சிந்தனையிலிருந்து உருவாவது. இந்த இயக்குனர்கள், தங்கள் அங்கீகாரத்திற்காக போராடும் வாழ்க்கையை பதிவு செய்ததற்காக இப்படத்தின் டைரக்டரை பாராட்டலாம். முதல் பாதியை போல் இரண்டாம் பாதியிலும் கவனம் செலுத்தி இருந்தால் இது சூப்பர் ஃபேமிலி படமாக வந்திருக்கும்.