
மூன்று மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் ஓடும் படத்தில் ரசிகர்கள் அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள். அதில் கடைசியில் இயக்கம் சுகுமார் என்ற டைட்டில் கார்டு வந்தும், மக்கள் எழவில்லை. 'பார்ட் 3 லீடு பாத்துட்டுப் போலாம்டா' என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒரு படம் ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாகச் சொல்லும்போது மக்கள் ரசிக்கிறார்கள். நேரம் ஒரு சாக்கு தான் என்பது மட்டுமே. இவ்வளவு நேரம் ஓடும் படத்தில் மொபைலை நோண்டக்கூட நேரம் குறைவாகவே இருந்தது என்பதே வரவேற்கத் தக்க விஷயம்.
முதல் பாகம் வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு தேசிய விருதும் கிடைத்து விட்டது. இரண்டாம் பாகம் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. இயக்குனருக்கும் ஹீரோவிற்கும் பிரச்சினை. படப்பிடிப்பில் தடங்கல். இசைமைப்பாளர் தன் பிரச்சினையைப் பொது வெளியில் கொட்டியது எனப் பலவிதமான சுவாரசியங்கள் படம் வருவதற்கு முன்பே வந்தது. இதைத் தவிர, இரண்டாம் பாகம் ஓடாது. மூன்று மணி நேரங்களுக்கு மேல் இருந்தால் படம் அவுட் எனச் சினிமா சென்டிமென்டுகள் வேறு. இதையெல்லாம் மீறி நேற்று உலகமெங்கும் ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கும் படம் தான் புஷ்பா 2 தி ரூல்.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், ராவ் ரமேஷ், ஆடுகளம் நரேன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வந்துள்ளது இந்தப் படம். முதல் பாகத்தில் ஒரு கூலித்தொழிலாளியாக ஆரம்பித்துச் செம்மரக்கடத்தல் தலைவனாக மாறும் புஷ்பா என்ற ஒரு தனி மனிதனைப் பற்றிய கதை, இதில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. அந்தப் பாகத்தில் இவனைப் பிடிப்பதை முழு நேரத் தொழிலாகக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலச் சுற்றும் ஒரு எஸ்பியாக ஷெகாவத் என்னும் பாத்திரத்தில் பகத் பாசில். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தக் கதை என்று சொல்ல ஆசை தான். ஆனால் அது ஒரு பகுதி தான். இதில் முடிச்சு என்பது வேறு.
முதல்வருடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு வா என்று தன் கணவன் புஷ்பராஜிடம் ஆசைப்படுகிறாள் அவன் மனைவி ஸ்ரீ வள்ளி. அந்த இடத்தில் ரவுடியுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர் அவமானப் படுத்த ஒரு குறிப்பிட்ட நாளில் முதல்வர் தனது வீட்டில் விருந்துண்ண வருகிறார் என்று பேட்டி கொடுக்கிறார் புஷ்பா. சொன்ன படி நடந்ததா? அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? மாநில அளவில் தாதாவாக இருந்த ஒருவர் எப்படி சர்வதேச அளவில் ஒரு டானாக மாறுகிறார்? தன் பிறப்பிற்கு ஒரு அர்த்தம் புஷ்பாவிற்குக் கிடைத்ததா? என்பதை இருநூற்றி இரண்டு நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கு படங்களுக்கே உண்டான பாட்டுக்கள், சண்டைக்காட்சிகள் இதைத் தவிர குடும்ப செண்டிமெண்ட் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
தனது மனைவி கர்ப்பமாக இருப்பதைக் கேள்விப்படும் புஷ்பா பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார். அடுத்து ஒரு டூயட் போன்ற ஒரு பாடல். இது இரண்டும் முடிந்தவுடன் அங்கு நடக்கும் ஒரு பிரச்சினையில் ஒரு பெண் தெய்வம்போல ரவுடிகளைப் பந்தாடுகிறார். இந்த ஒரு சீக்வன்ஸ் போதும் ரசிகர்களைக் கட்டிப் போட. இந்த அரைமணி நேரம் ஒரு தனிப்படமாகவே எடுக்கலாம் என்பதற்கான ரைட்டிங் என்று கூறலாம். இதற்காகவே இயக்குநருக்கு ஒரு சபாஷ்.
இரண்டு கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுவிடுகின்றனர். கழுத்தையும், வாயையையும் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சண்டைக்காட்சி. இதை யோசித்த விதத்திற்கும் அதைக் கொண்டு வந்த விதத்திற்கும் ஒரு மிகப் பெரிய கைதட்டல். நம்புவதற்கு இயலாது தான். ஆனால் திரையில் நடக்கும் மேஜிக் ஏன் வணிக சினிமா உருவாக்கத்தில் அக்கட தேசத்தவர் தனித்துத் தெரிகிறார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அகண்டாவிற்கே சவால் விடும் சண்டைக்காட்சி அது.
செம்மரக்கட்டைகளை லாரியில் கடத்திப் போகும் காட்சியிலும் படகில் கடலில் கடத்திப் போகும் இன்னொரு காட்சியிலும் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்துத் துறையினரின் உழைப்பும் கண்கூடாகத் தெரியும். மதன் கார்க்கியின் வசனமும் ஒரு பலம். கால்மேல் கால் போட்டு அமர்வதை விட நிற்பதே நல்லது என ராவ் ரமேஷ் சொல்ல, என்னையே தாங்குதுல்ல அது தான் நான் உக்காரும்போது பெருமைல கால் தன்னால மேல போகுது என்று சொல்வார் புஷ்பா. இது போன்ற பல இடங்களில் வசனங்கள் மிக இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.
'எதற்காக இந்தப் படம் பார்க்க வேண்டும்' என்று கேட்டால், சண்டைக்காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் என்று தைரியமாகச் சொல்லலலாம். ஸ்ரீ லீலா நடனம் போதாதென்று ராஷ்மிகாவே ஒரு குத்தாட்டம் போடுகிறார். குழந்தைகளைக் கண்களை மூடச் சொல்லிவிட்டு பெற்றவர்கள் ரசிக்கலாம் இந்தப் பாடல்களை. படத்தின் பாடல் வரியையும் கேட்டு விடுங்கள். சப்புன்னு அறைவேன் மாமா சப்புன்னு அறைஞ்சிடுவேன். இது எப்படி இருக்கு? ஒவ்வொரு பாடல்களுக்கான லீட் நன்றாகவே எழுதியுள்ளார் இயக்குனர் சுகுமார். கிஸ்ஸிக் பாடலுக்கான லீடில் தான் கதையே ஆரம்பிக்கிறது.
சீக்வன்சாகப் பார்த்தால் புஷ்பா, எஸ்பியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சி, காவல் நிலையத்தில் புஷ்பா காவலர்களைக் கையாளும் காட்சி, தன் கணவனை அவமானப்படுத்தும் இடத்தில் பொங்கி எழுந்து ராஷ்மிகா பேசும் நீளமான வசனமும் சிங்கிள் டேக்குமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சியெனப் பல காட்சிகளைச் சொல்லலாம். தனியொரு ஆளாக மொத்தப் படத்தையும் தாங்குகிறார் அல்லு அர்ஜுன். இவரது மேக்கப், உடல் மொழி, சண்டைக்காட்சிகளில் இவர் எடுத்திருக்கும் முயற்சிகள், நடனம் எனப் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். இவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சேகர் தரமான டப்பிங் குரலாக ஜெயித்திருக்கிறார்.
பிரச்சினைகள் என்று இல்லாமல் இல்லை. தொடக்கத்தில் வரும் தேவையே இல்லாத சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளுக்காக இவர்கள் தேடிய காரணங்கள், ஒரு கடத்தல் காரனுக்கு ஊரே ஆதரவாக இருப்பதும் அவனைவிட மோசமான ஒரு எஸ்பியும் தெலுங்கு படங்களில் மட்டுமே காண இயலும் அற்புதங்கள். என்ன தான் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தாலும் சற்றே எல்லை மீறிப் போகும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா கெமிஸ்ட்ரி (என்ன கொடுமையோ இந்த வார்த்தை படாத பாடு படுகிறது). பாடல் காட்சிகள் (இசை தேவிஸ்ரீ பிரசாத்) நன்றாகப் படமாக்கப் பட்டிருந்தாலும் வரிகள் சுத்தமாகப் புரியவே இல்லை. இது போன்ற நேரத்தில் மூலத்தில் இருந்த மொழியிலேயே (தெலுங்கில்) பாடல்கள் இருந்து தொலைத்தால் என்ன என்று தான் தோன்றுகிறது. இதைத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சற்று கவனிக்கலாம்.
இது போன்ற குறைகள் எல்லாம் விமர்சகர்கள் யோசிக்க, கவனித்து எழுத மட்டுமே. ரசிகர்களுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் நேரம், கொடுத்த பாப்கார்ன் காசு பார்க்கிங் கட்டணம் போன்றவை செரித்தால் போதும். இந்தப் படத்தில் அது கிட்டத்தட்ட நிறைவேறி மூன்றாம் பாகத்திற்கான பசியுடன் திரையரங்கை விட்டு வெளியே செல்கிறார்கள். படத்தின் நீளம் பற்றிப் பலரும் பேசினாலும் வெட்டலாம் என்று யோசித்தால் முதல் சண்டைக்காட்சியையும், ஒரு டூயட்டையும் என்று தான் நான் சொல்வேன். அதே போல் மூன்றாம் பாகத்திற்கான லீட் எந்தவிதமான பதைபதைப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.
மற்றபடி மூளையை வெளியே கழற்றி வைத்து விட்டு உள்ளே சென்று பல படங்களை நாம் ரசித்திருக்கிறோம். அந்த விதத்தில் இந்தப் புஷ்பாவையும் ரசித்துப் பார்த்து விட்டு வெளியே வரலாம். டெக்னீக்கலாக ஒரு நல்ல திரையனுபவத்தை இந்தப் படம் கண்டிப்பாகத் தரும். சண்டைக்காட்சிகளே எனக்குப் பிடிக்காது. அமைதியான, உண்மைக்கு நெருக்கமான படங்கள் மட்டுமே எங்கள் சாய்ஸ் என்று அடம் பிடிப்பவர்கள் மாற்றுப் பாதை வழியே சென்று விடவும்.
புஷ்பா 3 யை எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டால் why not கண்டிப்பாக என்பதே பதிலாக இருக்கும்.