
பாலிவுட்டின் பிரபல நடிகர் சையீப் அலி கான். இவர் தாய் ஷர்மிளா தாகூர் அந்தக் கால பிரபல நடிகை, இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் குஜராத் நவாப்பின் வம்சாவளியை சேர்ந்தவர். சையீப் அலி கான் 'ஹம் தும், கல் ஹோ நா ஹோ, லவ் ஆஜ் கல், ரேஸ், ரேஸ் 2 தில் சாத்தா ஹை, ஆதி புருஷ், தேவாரா' போன்ற வெற்றிப் படங்களி நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவரது மகள் சாரா கான் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சையீப் அலி கானை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சையீப் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவரை கண்டுபிடித்துள்ளார்.அதன் பின் இருவருக்கும் நடந்த கைகலப்பில் மர்ம நபர் ஆறு முறை சையீப் அலியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பின் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பியோடி விட்டான்.இதில் பலத்த காயமடைந்த சையீப் அலி கான் நள்ளிரவில், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பலத்த காயங்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆழமான காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய மர்மநபர் திருடும் நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாரா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றி காவல்துறை விசாரணை நடந்து வருகிறது .தாக்குதல் நடத்திய நபர் சையீப் வீட்டில் இரவு முழுவதும் பதுங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மர்ம நபர் நள்ளிரவு 2 மணியளவில் சையீப் வீட்டில் நுழைந்து பெண் ஊழியர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த சையீப் அலிகான் அந்த இடம் நோக்கி விரைந்துள்ளார். அதன் பின்னர் இந்த கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் அவர் வீட்டு பணிப்பெண் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சையீப் தாக்கப்பட்ட செய்தி வெளியானதால், பாலிவுட் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தாக்குதல் குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். "சையீப் சார் மீதான தாக்குதலைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், வருத்தமடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“அதிர்ச்சியூட்டும் மற்றும் அச்சமூட்டும் சம்பவம். சையீப் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக", பாலிவுட் திரைப்பட இயக்குனர் குணால் கோஹ்லி தனது X இல் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவியும் தனது கவலையை தெரிவித்துள்ளார். சையீப் அலி கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.