
ஜான்விக் படம் பார்த்திருப்போம். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து நாயகனைக் கொல்ல மூலை முடுக்கில் இருந்தெல்லாம் கொலைகாரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அப்படி நாயகன் (ஜோஷ் ஹார்நெட்) பயணம் செய்யும் விமானம் முழுதும் கொலைகாரர்கள். வித விதமான கொலை ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள். கோஸ்டின் தலைக்கு இவ்வளவு எனப் பரிசுப் பணம் காத்திருக்கிறது. இப்பொழுது அந்தத் தேடப்படும் குற்றவாளியைக் காப்பாற்றுவதுடன் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் நாயகனுக்கு. கேட்க வேண்டுமா. நீங்கள் மட்டும் அல்ல நானும் விதவிதமாகக் கொலை செய்வதில் பயிற்சி எடுத்திருக்கிறேன் என்று கொன்று தீர்க்கிறார் நாயகன். அவருக்கு உதவியாக ஏர்ஹோஸ்டஸ் இஷா (சரித்ரா சந்திரன்) களத்தில் இறங்குகிறார். இருவரும் இணைந்த பிறகு சண்டைக்காட்சிகள் மேலும் மூர்க்கமாகின்றன.
அவ்வளவு பெரிய விமானத்தில் முதல் வகுப்பு, எகானமி வகுப்புகள், லக்கேஜ் அறையென அவ்வளவு இடத்திலிருந்தும் கொலையாளிகள் கிளம்பி வருகிறார்கள். கராத்தே வீரர்கள், கத்திச் சண்டை வீரர்கள், குங்க்பூ கொலையாளிகள் எனப் பலர் அதில் பயணம் செய்கிறார்கள். ஒரு விமானம் மட்டுமே கதைக்களம் என்பதால் அந்தக் குறுகிய இடத்தில் தான் முழுப் படமும். இதில் சண்டைக்காட்சிகளை அமைப்பதில் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் இணைந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். நாயகன் அனைவரையும் ஒற்றைக் கையால் டீல் செய்வது போலக் காட்டாமல் அவரும் செம்மையாக அடி வாங்குகிறார். கத்திக் குத்து பெறுகிறார். தயங்காமல் உதவி கேட்கிறார்.
சண்டைக்காட்சிகளில் வன்முறை கலந்து ரத்தம் தெறித்தாலும் அதில் ஒரு நகைச்சுவையும் கலந்து கொடுத்ததில் தான் இந்த அணியின் வெற்றி இருக்கிறது. ஒரு தவளை விஷத்தைக் குடித்து விட்டு நாயகன் நடந்து கொள்ளும் விதம் ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு விதமான மாயத் தோற்றம் கண்ணை மறைக்க, அவர் சண்டையிடும் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும், அவர் நடிப்பும், இணைந்து சபாஷ் சொல்ல வைக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியைச் சொல்லலாம். மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு ஹெக்சா ப்ளேட் ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. கத்திக்குப் பதிலாக இது. யோசித்துப் பாருங்கள். கைகள், கால்கள், கழுத்து என அறுத்து எறிகிறார். நாயகன் உள்பட படத்தில் நல்லவர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு பாத்திரம் கூட இல்லை.
நாயகனுக்கு ஒரு கட்டத்தில் உண்மையான குற்றவாளி யார், என்ன நடக்கிறது என்ற உண்மை தெரியவர, அடுத்த பாகத்திற்கான ஒரு லீடோடு படத்தை முடித்திருக்கிறார்கள்.
ஆக்சன் படப்பிரியர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். அதீத வன்முறைக்காகக் குழந்தைகள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாமா என்று கேட்டால்... கட்டாயமாக என்பதே பதில்.