
தமிழ் திரைப்படத் துறையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றும் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. பல அதிரடியான வெற்றிப் படங்களைக் கொடுத்ததன் பலன் தான் இன்றும் அவர் உச்சத்தில் இருக்கக் காரணம். ரஜினியின் சினிமா பயணத்தில் பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. அதில் ஒன்று தான் பாட்ஷா. கடந்த 1995 இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா திரைப்படம், இன்றளவும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இருந்த ஒரு சிறு குறையால் தான் ரஜினிக்கு முத்து என்ற மற்றுமொரு வெற்றித் திரைப்படம் கிடைத்தது.
1995 இல் பொங்கல் வெளியீடாக பாட்ஷா திரைப்படம் தமிழகம் முழுக்க பட்டையைக் கிளப்பியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழிகளிலும் பாட்ஷா படம் ரீமேக் செய்யப்பட்டது. பாட்ஷா படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்த்து விட்டு, அன்றைய தினமே ரஜினிகாந்தை சந்தித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருக்கிறார். அப்போது, 'படம் அதிரடியான ஆக்ஷனில் அருமையாக இருக்கிறது. படத்தின் கிளைமேக்ஸில் வில்லன் ரகுவரனுக்கு மட்டும் வயதாகி விட்டது. ஆனால் உங்களுக்கு மட்டும் வயதாகவில்லை. இளமையான தோற்றத்திலேயே நடித்திருக்கிறீர்கள்' என்று கூறினார்.
படத்தைப் பார்த்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு தோன்றிய இந்தக் குறையை யாரெல்லாம் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும், 'அதெல்லாம் அப்படியே போய் விடும். ரசிகர்கள் இதனைப் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள்' என ரஜினிகாந்த் சமாளித்து விட்டாராம். பாட்ஷா படம் வந்த காலகட்டத்தில் ரஜினி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் படத்தைப் பலரும் பாராட்டும் வேளையில், அதிலிருந்த குறையை பயப்படாமல் ரஜினியிடமே சொன்னார் கே.எஸ்.ரவிக்குமார்.
இருப்பினும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரஜினி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவரிடமே வழங்கினார். அந்தப் படம் தான் முத்து. பாட்ஷா படத்தின் குறையை கே.எஸ்.ரவிக்குமார் சொல்லி விட்டு வந்த இரண்டாவது வாரத்திலேயே அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினார் ரஜினி. அப்போது 'ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள்; அடுத்த படத்தில் நாம் இருவரும் இணையலாம்' என்று சொன்னாராம்.
ரஜினியே வந்து படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்ததால், அந்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இறங்கினார். அதற்கேற்ப அந்த ஆண்டின் இறுதியிலேயே முத்து திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"அன்று நான் பாட்ஷா பட குறையை சொன்னதால் தான், முத்து படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு ரஜினி சார் வழங்கினார்" என பேட்டியொன்றில் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்து திரைப்படமும் இந்தி, தெலுங்கு மற்றும் ஜப்பான் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ‘முத்து’ என்பது குறிப்பிடத்தக்கது. முத்து திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் ரஜினி வென்றிருந்தார்.