விமர்சனம்: பைர் பிரேக் (Fire Break) - நெருப்பா? குழந்தையா? – ஒரு குடும்பத்தின் போராட்டம்!

Fire Break
Fire Break
Published on

சில படங்கள் ஐந்தே நிமிடங்களில் தங்களுக்குள் இழுத்துவிடும். படத்தின் கதைக்குள் பயணம் செய்யத் தொடங்கி விடுவோம். அதுவும் அந்தப் படம் இயற்கைப் பேரழிவுப் படமாக இருந்தால் போதும். இன்னும் ஆர்வம் அதிகரித்து விடும். அப்படியொரு படம் தான் பைர் பிரேக் (Fire Break).

மின் கம்பத்திலிருந்து விழும் ஒரு சிறிய பொறி. அது காட்டுத் தீயாக மாறி ஊரை நோக்கி வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி அது பரவாது. அதைத் தான் பைர் பிரேக் என்று சொல்கின்றனர். அந்தப் பகுதிக்கு அருகில் காட்டில் வசிக்கும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தலைவர் இறந்துவிடுகிறார். அந்த வீட்டை விற்று விட்டு வெளியேற நினைக்கிறார் அவருடைய மனைவி. தன்னுடைய மகள், மைத்துனர் குடும்பத்துடன் கடைசியாக ஒரு முறை வருகிறார். வந்த இடத்தில் தான் இந்த தீ விபத்து குறித்துத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் மகள் கடைசியாகத் தந்தை அமைத்த ஒரு மரவீட்டைப் பார்க்கப் போகிறார். இதில் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தக் குடும்பம் படும் பாடு தான் படம்.

பொதுவாக இந்த மாதிரிப் படங்களில் தீயினால் ஏற்படும் அழிவுகள் பிரதானமாக இருக்கும். இதில் மொத்தமாக மாற்றி விட்டார்கள். காணாமல் போன சிறுமி. அதைக் கண்டுபிடிக்க நிகழும் போராட்டம். சந்தேகமும், சுயநலமும் மனிதர்களை எப்படி மாற்றும். குடும்பம் என்று வரும் பொழுது மக்கள் எப்படித் துணிகிறார்கள். இதைப் பதைபதைப்புடன் சொல்கிறார் இயக்குநர் டேவிட் விக்டோரி.

அம்மா பேச்சைக் கேட்காமல் அந்தப் பெண் நடக்கும் விதம் கடுப்பைக் கொடுக்கிறது. சந்தேகம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் மீது திரும்புகிறது. தீ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. ஒருவரை விட்டு ஒருவர் விலகாத நிலை. பரவி வரும் தீயால் காட்டில் பெண்ணைத் தேட முடியாது. அடங்கியவுடன் வருகிறோம் என்று சொல்லி விடுகிறது காவல்துறையும், தீயணைப்புத் துறையும்.

பத்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கிறது ஒரு பதற்றம். கடைசி வரை அது குறைவதே இல்லை. பிரச்சினை தீயால் இல்லாமல் மனிதர்களால் என்று மாறும் போது வேறு வடிவம் எடுக்கிறது. சிறுபிள்ளைத்தனமான சில முடிவுகள் டென்ஷனை கூட்டுகின்றன. கடைசியில் என்ன ஆனது.

இதையும் படியுங்கள்:
MERCY(2026) - சினிமா விமர்சனம் : 90 நிமிட கெடு.. மரண தண்டனையில் இருந்து தப்புவாரா கிறிஸ் பிராட்?
Fire Break

நான்கே நான்கு பாத்திரங்கள், ஒரு காடு. இரண்டு மரவீடுகள். இவற்றை மட்டும் வைத்து பரபரவென்று ஓடும் ஒரு திரில்லரை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் கைகோத்துக் கொண்டு செயல்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் பார்ப்பவர்கள் பரிதாபம் மாறிக் கொண்டே இருக்கிறது. பெண்ணின் மீது, அவள் அம்மா மீது, அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் மனிதர் மீது. இது தான் இந்தத் திரைக்கதை சாமர்த்தியம்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அதன் பரபரப்புக் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன. இப்படித் தான் முடியும் என்ற திரைக்கதை அமைப்பு தான் பிளஸ் மைனஸ் இரண்டுமே. ஆனாலும் இது போன்ற படங்கள் நாம் கவனத்தைக் குவிக்கின்றன. த லாஸ்ட் பஸ் என்ற ஒரு படம் சமீபத்தில் வந்தது. அதுவும் இதே போலக் கதை தான். இரண்டு படங்களின் ஆரம்பக் காட்சிகளும் ஒன்று போலவே இருக்கின்றன. சம்பந்தமே இல்லாமல் பக்கத்து வீட்டுக் காரர் மேல் சந்தேகம் வருவது, அவர் என்ன செய்கிறார் என்பதைத் தெளிவாகச் சொல்லாமல் விட்டது. இவை இரண்டும் கவனித்துச் செயல்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள். கோட்டை விட்டு விட்டார்கள். சர்வைவல் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கலாம். ஸ்பானிஷ் மொழிப் படமான இது ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

மிக யதேச்சையாகப் பார்க்க ஆரம்பித்து கண் எடுக்காமல் பார்க்க வைத்த படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com