
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கட்டு மஸ்தான உடலுடன் நடித்துள்ளனர். இருப்பினும் ஒருசில படங்களில் சில நடிகர்கள் மட்டுமே சண்டைக் காட்சிகளில் சிக்ஸ் பேக்குடன் நடித்துள்ளனர். இந்நிலையில் முதலில் சிக்ஸ் பேக் வைத்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்வி சமீபத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணமே நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் தான். அண்மையில் நடந்த ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவில், சூர்யா தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்த தமிழ் நடிகர் என அவர் பெருமையாக பேசினார். இதற்கு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கி விட்டனர்.
பொதுவாக படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே நடிகர்கள் சிக்ஸ் பேக் வைப்பார்கள். அதிலும் சண்டைக் காட்சிகளில் தான் சிக்ஸ் பேக் திரையில் காட்டப்படும். இதற்காக நடிகர்கள் பல நாட்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள். தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தொடர்ந்து சிக்ஸ் பேக்கை பராமரித்து வருகிறார். ஆனால், முதலில் இவர் தான் சிக்ஸ் பேக் வைத்தாரா என்றால், இல்லை என்பது தான் பதில்.
சிக்ஸ் பேக் விவகாரம் இணையத்தில் வெடிக்க, மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சிவகுமாரை கிண்டலாக பேசியுள்ளனர். அதில் சிலர் விக்ரம், விஷால் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா எனக் கேட்டுள்ளனர். நடிகர் விஷால் சத்யம் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்தார். இப்படத்தில் விஷால் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருப்பார். இதனை முன்னிறுத்தி இவரது ரசிகர்கள், சூர்யாவுக்கு முன்பே விஷால் சிக்ஸ் பேக்குடன் நடித்துள்ளார் என தெரிவித்தனர்.
சிக்ஸ் பேக் தொடர்பான காரசாரமான விவாதத்தில் தனது பெயரும் அடிபடுவதைக் கண்ட விஷால், இதற்கு தரமான பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து விஷால் கூறுகையில், “தமிழ் சினிமாவில் எனக்கு முன்பாகவே தனுஷ், 'பொல்லாதவன்' படத்தில் சிக்ஸ் பேக் வைத்து விட்டார். அவருக்குப் பிறகு தான் நான் 'சத்யம்' படத்தில் சிக்ஸ் பேக்குடன் நடித்தேன். அதனைத் தொடர்ந்து மதகஜராஜா படத்திலும் சிக்ஸ் பேக்குடன் நடித்தேன். பல ஆண்டுகள் கடந்து விட்டதால் ரசிகர்கள் இதனை மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என அவர் கூறினார்.
நடிகர் தனுஷூக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் பொல்லாதவன். இப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிக்ஸ் பேக்குடன் சண்டை செய்வார் தனுஷ். அதன் பிறகு படிக்காதவன் படத்திலும் சிக்ஸ் பேக் வைத்தார்.
அடுத்ததாக 2008 ஆகஸ்ட் மாதம் வெளியான சத்யம் படத்தில் விஷால் சிக்ஸ் பேக்குடன் நடித்தார். இப்படத்திற்கு பிறகு அதே ஆண்டில் நவம்பர் மாதம் வாரணம் ஆயிரம் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் தான் சூர்யா முதன்முதலில் சிக்ஸ் பேக்குடன் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் சூர்யாவுக்கு மிகப்பெரும் வெற்றிப் படமாகவும் இது அமைந்தது.
நடிகர் விகரம் 2015 ஆம் ஆண்டு வெளியான ஐ படத்தில் சிக்ஸ் பேக்குடன் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைக்கத் தொடங்கி விட்டனர். இருப்பினும் தொடர் உடற்பயிற்சியின் மூலம் சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்களாக பராமரித்து வருகிறார் சூர்யா.