
சினிமாவில் ஒரு படத்தைத் தயாரிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அப்படியே தயாரித்தாலும், அதில் இலாபம் ஈட்டுவது கடினம். மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றால் மட்டுமே ஒரு படம் இலாபத்தை நோக்கி நகர முடியும். படம் வெற்றியடையாமல் தோல்வி அடைந்து விட்டால், மொத்த இழப்பும் தயாரிப்பாளருக்குத் தான்.
தயாரிப்பு பணியை மட்டுமே தொழிலாக கொண்டவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு படத்தில் இழந்ததை அடுத்த படத்தில் மீட்டு விடுவார்கள். ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை படத் தயாரிப்புக்கு செலவு செய்து நஷ்டத்தை சந்தித்தால், அதிலிருந்து மீண்டு வருவது கடினம். தமிழ் சினிமாவில் படத்தை தயாரிக்க முன்வந்து, அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த மகனுக்கு உதவ பாட்டுப் பாடி கடனை அடைத்துள்ளார் பிரபல பாடகர்.
அந்தப் பாடகர் யாராக இருக்கும் என நீங்கள் சிந்திக்கிறீர்களா? அவர் தான் பாடும் நிலா என அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களில் தலை சிறந்தவர் எஸ்பிபி. 80, 90-களின் காலகட்டத்தில் தனது குரலால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த பாடகர் எஸ்பிபி. இவர் மறைந்தாலும், இவரது பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அப்பேற்பட்ட பாடகரான எஸ்பிபி, பாட்டுப் பாடி வட்டியைக் கட்டினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை இதுதான்.
எஸ்பிபி-யின் மகனான சரண், தமிழ் சினிமாவில் படங்களைத் தயாரிக்க முனவந்த போது, ஏராளமான சிரமஙக்ளைச் சந்தித்தார். பாடகராக இருந்தாலும், ஒருசில படங்களைத் தயாரித்து தன்னை ஒரு தயாரிப்பாளராக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார். ஆனால் இவர் தயாரித்த சில படங்கள் நஷ்டத்தைக் கொடுத்ததால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்தார்.
தனது மகனின் கஷ்டத்தைப் போக்க களத்தில் இறங்கினார் எஸ்பிபி. வெளிநாடுகளில் சில பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தனது மகன் பெற்ற கடனுக்கு வட்டி கட்டினார்.
எஸ்பிபி சரண் கடந்த 2007 இல் ‘சென்னை 600028’ என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் இலாபத்தை ஈட்டியது.
முதல் படம் கொடுத்த உத்வேகத்தில் நாணயம், ஆரண்ய காண்டம், மழை, திருடன் போலீஸ், குங்கப்பூவும் கொஞ்சும் புறாவும், மூனே மூனு வார்த்தை மற்றும் உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். ஆனால் முதல் படம் கொடுத்த வெற்றியைப் போல் மற்ற படங்கள் கொடுக்கவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததோடு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார் சரண்.
அந்நேரத்தில் தான் எஸ்பிபி பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி, தனது மகனின் கடனுக்கு வட்டி கட்டி, கடனையும் அடைத்தார். பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் கூட படத் தயாரிப்பில் களம் கண்டு, நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.