Flashback: சென்னை 600028: மாபெரும் வெற்றி தந்த தலைப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்!

Chennai 600028 Movie
Tamil Movie
Published on

தமிழ் சினிமா வரலாற்றில் கிரிக்கெட் தொடர்பான படங்கள் மிகவும் குறைவு தான். பொதுவாக கிரிக்கெட் கதையை மையக் கருவாக கொண்ட திரைப்படங்கள் இளைஞர்களுடன் சரியாக ஒத்துப்போகும் என்பதால், இளசுகளின் ஆதரவு அமோகமாக இருக்கும். இப்படி சென்னை நகரத்து இளைஞர்களின் வாழ்க்கையை கிரிக்கெட் கலந்த காமெடியுடன் சொல்லியிருக்கும் படம் தான் சென்னை 600028.

எஸ்பிபி சரண் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், பிரேம்ஜி மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது சென்னை 28 திரைப்படம். யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்தனர்.

படத்தின் வெற்றிக்கு கதை மட்டும் நன்றாக இருந்தால் போதாது; படத்தின் தலைப்பும் ரசிகர்களைக் கவரும் படியாக இருக்க வேண்டும் என்பதற்கு ‘சென்னை 28’ திரைப்படத்தை சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம்.

இளசுகளை கவரும் கிரிக்கெட் கதையாக இருந்தாலும், இப்படத்தின் தலைப்பு தான் முதலில் ரசிகர்களைக் கவர்ந்தது எனலாம். சொல்லப்போனால் இப்படத்தின் பாதி வெற்றிக்கு காரணமே தலைப்பு தான். அதுவும் இந்தத் தலைப்பைப் பரிந்துரைத்தவர் மாபெரும் கவிஞரான வாலி என்பது பலரும் அறியாத தகவல். அப்படியென்றால் இப்படத்தின் வெற்றிக்கும், கவிஞர் வாலிக்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளதா என நீங்கள் நினைக்கலாம். ஆம் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, இப்படத்தில் ஒரு பாடலையும் வாலி எழுதியிருக்கிறார்.

வெங்கட் பிரபு படத்தை இயக்கி முடித்த போது, ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று தான் தலைப்பை வைத்திருந்தார். இருப்பினும் இந்தத் தலைப்பு சரியாக இருக்குமா என கவிஞர் வாலியிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். படத்தின் தலைப்பைக் கேட்ட வாலி, இந்தத் தலைப்பை வைத்தால் யாருமே படத்தை வாங்க முன்வர மாட்டார்கள் என்று ஆலோசனை கூறினார். அதோடு படத்தின் கதையைக் கேட்டறிந்த பிறகு, ‘சென்னை 600028’ என படத்தின் தலைப்பை மாற்றுமாறு அறிவுரைத்தார்.

இதன்படி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு திரைப்படம் வெளியானது. சென்னை 28 என்ற படத்தின் தலைப்பு ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெங்கட் பிரபுவின் முதல் படமான சென்னை 28 திரைப்படம், அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.

Vaali - Venkat Prabhu
Tamil Cinema
இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக டிரெய்லர் வெளியானது எந்த படத்திற்கு?
Chennai 600028 Movie

சென்னை 28 திரைப்படம் திரையில் 1 வருடத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதோடு பெங்காலி, கன்னடம் மற்றும் சிங்களம் மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டும் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் 2016 இல் வெளியானது. இருப்பினும் முதல் பாகத்தைப் போல், இப்படம் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியைப் பெறவில்லை.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! குறைந்தது சினிமா டிக்கெட் விலை..! அதிகபட்சமே இவ்வளவு தான்..!
Chennai 600028 Movie

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com