

சினிமாவில் நடிகைகளுக்கான இடம் என்பது ஒரு சில ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக திருமணத்திற்கு பின்பு கதாநாயகிகள் பலரும் நடிக்க வருவதில்லை. அப்படியே அவர்கள் நடிக்க வந்தாலும் கதாநாயகி வேடம் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
ஒரு சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும், கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். அவ்வகையில் திருமணத்திற்குப் பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமையாததால் நடிப்பில் இருந்து விலகினார் நடிகை ரோஜா. இருப்பினும் சினிமாவில் இருந்து ரோஜா முழுவதுமாக ஒதுங்க, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் கேட்ட ஒரு கேள்வி தான் காரணம்.
1990-களின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. 1992 இல் செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரோஜா. இதற்குப்பின் சூரியன், ராஜ முத்திரை, மக்களாட்சி, வள்ளல் மற்றும் ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் தவிர்த்து, மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார் ரோஜா. சினிமா தவிர்த்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இளைய தளபதி விஜய் நடித்த நெஞ்சினிலே திரைப்படத்தில் ‘உன் தங்க நிறத்துக்குத் தான்’ என்ற பாடலுக்கு நடிகை ரோஜா நடனமாடிருந்தார். அதன்பிறகு காவலன் திரைப்படத்தில், விஜய்க்கு மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காவலன் படத்தில் ரோஜா நடிக்க வந்த போது, விஜய் கேட்ட ஒரு கேள்வியால் தான் அவர் நடிப்பிலிருந்து முழுவதுமாக ஒதுங்க நினைத்துள்ளார்.
காவலன் படப்பிடிப்புக்கு நடிகை ரோஜா வந்த போது, நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது, “மேடம் நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா! இயக்குநர் சொன்ன போது கூட நான் நம்பவில்லை. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாங்கள் இன்னும் உங்களை கதாநாயகியாகத் தான் பார்க்கிறோம்” என்று விஜய் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் கோபிசந்த்க்கு மாமியாராகவும் ஒரு தெலுங்கு படத்தில் ரோஜா நடித்துள்ளார். அவரும் நடிகை ரோஜா சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதை அறிந்து, வியப்படைந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களே வியப்படைந்த காரணத்தால் தான், இனி அம்மா மற்றும் மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்த முடிவெடுத்தார் நடிகை ரோஜா.
இருப்பினும் பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த வாய்ப்பைப் போல், தரமான கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவையும் ரோஜா எடுத்தார். இதுவரை 3 நந்தி விருதுகளையும், தமிழக அரசின் திரைப்பட விருது ஒன்றையும் வென்றுள்ளார் ரோஜா.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் ரோஜா. தற்போது ஆந்திர அரசியலில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் நடிகை ரோஜா, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.