
நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சினிமா தான். நாள் முழுவதும் உழைத்துக் களைத்தாலும், வார இறுதி நாட்களில் சினிமாவிற்கு சென்று படம் பார்த்தால் பலருக்கும் மன அழுத்தம் சற்று குறையும். இருப்பினும் சினிமா டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருப்பது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்துகிறது.
சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்கச் சென்றால், குறைந்தபட்சம் ரூ.2,000 தேவைப்படும். இதில் பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்ட செலவுகளும் நம்மை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கும். அதிலும் வார இறுதி நாட்களில் டிக்கெட்டுகள் விலை எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால் செலவு அதிகரிக்கும். இந்நிலையில் டிக்கெட் விலையைக் குறைக்கும் நோக்கத்தில் புதிய வரைவு விதிகளைக் கொண்டு வந்துள்ளது கர்நாடக அரசு.
இதன்படி மல்ட்டி பிளக்ஸ் மற்றும் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை வரியே இல்லாமல் அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இருப்பினும் 75 அல்லது அதற்கும் குறைவான இருக்கைகளைக் கொண்ட ப்ரீமியம் வகை திரையரங்குகளுக்கு இந்தக் கட்டணக் குறைப்பு செல்லுபடியாகாது.
சினிமா டிக்கெட் விலை தொடர்பான புதிய வரைவு விதி குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடுத்த 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். சினிமா டிக்கெட் விலையைக் குறைப்பதன் மூலம் பொதுமக்கள் சினிமாவிற்கு செல்வதை மேலும் எளிமையாக்கும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பான் இந்தியப் படங்கள் அதிகளவில் ரிலீஸ் ஆவதால், தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ஓட்டி தளங்கள் பொதுமக்களை திரையரங்கை நோக்கி வர விடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக கூட கர்நாடக அரசு டிக்கெட் விலையைக் குறைக்க முடிவு செய்திருக்கலாம். இருப்பினும் டிக்கெட் விலைக் குறைந்ததில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தான்.
தமிழ்நாட்டிலும் சினிமா டிக்கெட் விலை அதிகம் தான். கர்நாடக அரசைப் போல் தமிழக அரசும் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் இது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.