Freedom Movie
Freedom Movie

விமர்சனம்: FREEDOM - அகதிகளின் வலி நிறைந்த வாழ்க்கையின் பின்னணியில், ஒரு திரில்லர் படம்!

Published on
ரேட்டிங்(3.5 / 5)

நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதுரில் படுகொலை செய்யபட்டார். இந்த படுகொலை நடந்த பின்பு தமிழ் நாட்டின் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த பல இலங்கை தமிழர்கள் விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் 'Freedom'.

சசி குமார், லிஜா மோல் நடித்துள்ள இப்படத்தை சத்திய சிவா இயக்கி உள்ளார். அது 1991 ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவு. இலங்கையில் உள் நாட்டு போர் நடக்கும் நிலையில் அங்கே உள்ள தமிழர்கள் பலர் அடைக்கலம் வேண்டி தப்பித்து நமது ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். வருபவர்களை நமது தமிழ் நாடு அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கிறது. இப்படி வந்தவர்களில் மாறனும் (சசி குமார்) செல்வியும் (லிஜா மோல்) கணவன் -மனைவி. செல்வி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

Freedom Movie - M. Sasikumar - Lijomol Jose
Freedom Movie - M. Sasikumar - Lijomol Jose

இந்த சூழ்நிலையில் ராஜீவ் காந்தி தமிழ் நாட்டில் ஒரு மனித வெடி குண்டால் கொல்ல படுகிறார். இந்த குண்டு வெடிப்பிற்கும், அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ளும் தமிழ் நாடு காவல் துறை, முகாமில் இருக்கும் சிலரை 'இரண்டு நாட்களில் விசாரணை செய்து விட்டு  திருப்பி அனுப்பி விடுகிறோம்,' என்று வேலூர் கோட்டை சிறைக்கு அழைத்து செல்கிறது. அங்கே அகதிகளை மிகவும் கொடுமையான முறையில் அடித்து சித்தரவதை செய்கிறது. இரண்டு நாட்களில் திருப்பி அனுப்புகிறோம் என்று சொன்ன அரசு தரப்பு,  ஐந்தாண்டுகள் வரை அனுப்பவில்லை.

அகதிகளின் குடுபத்தினர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இவர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்பும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய அரசு மறுக்கிறது. வேறு வழி இல்லாமல் அகதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். சிறை அறையிலிருந்து வேலூர் கோட்டை அகழி வரை குழி தோண்டி 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று தப்பிக்க திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை அகதிகளின் வலி நிறைந்த வாழ்வியல் பின்னணியில், ஒரு திரில்லர் வகை படமாக சொல்லி இருக்கிறார் சத்ய சிவா.

1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த உண்மை சம்பவங்ககளின் அடிப்படையில்  சிறிது கற்பனையும் கலந்து இப்படத்தை தந்துள்ளார் டைரக்டர்.  ராஜீவ் காந்தி படுகொலை, ஒற்றை கண் சிவராஜன், ஸ்ரீ பெரும்புதூர், என நமக்கு தெரிந்த விஷயங்களுடன் தொடங்கும் கதை அகதிகளின் வாழ்வு, அனுபவிக்கும் கொடுமைகள் என நமக்கு தெரியாத விஷயங்களையும் சொல்கிறது.  'நாம் சுற்றுலா செல்லும் போது பெருமையாக பார்க்கும் வேலூர் கோட்டைக்குள் இப்படி ஒரு  மனிதர்களின் போராட்டம் இருக்கிறதா?' என்று யோசிக்க தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
பறந்து போ - மிதுல் குழந்தையா? சிவா குழந்தையா? பல சமயங்களில் எழும் சந்தேகம்!
Freedom Movie

ஆர்ட் டைரக்டர் உதயகுமார் திரையியில் உருவாக்கிய இந்த வேலூர் கோட்டை ஒரு கேரக்டர் போல் படம் முழுவதும் வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், 'எப்படியாவது அகதிகள் தப்பித்து ஏதாவது நாட்டில் நிம்மதியாக இருக்கட்டும் நம்ம ஊர்ல இருந்து கஷ்டப்பட வேண்டாம்' என்று  நாம்  எண்ணும் அளவில் மிக சிறப்பாக காட்சிகள் உருவாக்க ப்பட்டுள்ளன. கிப் ரானின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.

சசிகுமார் மிக சிறப்பாக நடிக்கிறார். போராட்ட குணம் கொண்ட ஒரு இலங்கை தமிழனாக ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்துள்ளார் சசி. இன்னொரு ரேவதி என்று சொல்லும் அளவிற்கு லிஜா மோல் மிக சிறப்பாக நடித்துள்ளார். கர்ப்பிணியாக நடிக்கும் போதும், அதிகாரியிடம் நியாயம் கேட்கும் போதும், பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். சிறையில் இருப்பவர்கள், காவல் துறை அதிகாரி, வயதான அகதியாக நடிக்கும் பேராசிரியர் மு.ராமசாமி என அனைவருமே சரியான தேர்வுகள்.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் சசிகுமாரின் ‘ஃபிரீடம்’ - ‘டூரிஸ்ட் பேமிலி’-ஐ மிஞ்சுமா?
Freedom Movie

நமது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்ளும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்த போது, இந்த தமிழ் மண் அவர்களை எப்படி மோசமாக நடத்தியது என்று பதிவு செய்துள்ள படம் Freedom.

logo
Kalki Online
kalkionline.com