பறந்து போ - மிதுல் குழந்தையா? சிவா குழந்தையா? பல சமயங்களில் எழும் சந்தேகம்!

குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ள மறுக்கும் அப்பாக்கள். அவர்களுக்குக் கடத்தப்படும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்குறித்த இன்னொரு படம்.
Paranthu Po Movie
Paranthu Po Movie
Published on

காதல் மனைவி (கிரேஸ் ஆண்டனி), ஒரே மகன் (மிதுல் ரயான்) இவர்களுடன் வாழ்ந்து வரும் சிவா. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வீட்டில் அடைபட்டுக் கிடைக்கும் மகனுக்கு வீடே சிறை போலத் தோன்றுகிறது. தன்னுடைய வேவ் போர்டு, வீடியோ கேம்கள், கம்பியூட்டர் எனச் சிறு உலகம் அவனுக்கு, ஒரு கட்டத்தில் கடன்காரனிடமிருந்து தப்பித்து ஓடும் சிவாவும் அவரது மகனும் ஒரு நீண்ட பயணம் போக நேர்கிறது. அந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள்மூலம் இவர்களுக்கிடையில் ஏற்படும் மனமாற்றம் இவை தான் கதை.

ராமின் இந்த உலகம் சற்று வித்தியாசமானது. இதுவரை பார்த்த இறுக்கமான படங்களை மட்டுமே நினைத்து உள்ளே நுழைபவர்களுக்குச் சற்று வித்தியாசமான அனுபவம் உறுதி. தங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது அவர்களுடன் செலவழிக்கப்படும் தருணங்களைத் தானே தவிர மின்னணு சாதனங்களையோ விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள்களையோ கிடையாது. கடன்காரனிடமிருந்து தப்பித்துப் பயணம் போகும்போது இவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள். சிவாவின் தாய் தந்தையரைத் தவிர. அதுவும் சிவாவின் மகனின் பார்வையில். காட்டின் நடுவில் உள்ள மண்டபத்தில் வசிக்கும் பிச்சைக்காரர், சிவாவின் பள்ளிப் பருவ ஈர்ப்பான அஞ்சலி, அவரது கணவர் அஜூ வர்கீஸ், மகன், சிவாவின் மகனின் வகுப்புத் தோழியின் குடும்பம் அனைவரும் நல்லவர்களே.

அனைவரும் நல்லவர்கள் என்று படம் பார்ப்பது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் படத்தின் ஓட்டத்தில் இவர்கள் இது தான் முக்கியம் என நினைத்துக் கடத்த நினைப்பது தான் பிரச்சினை. காட்சிகள் பாடல்களாய் விரிவது ஒரு கட்டத்தில் சுவாரசியமாக இருந்தாலும் அது நீண்டு கொண்டே செல்வது சில சமயங்களில் அலுப்பையும் எரிச்சலையும் ஊட்டுகிறது. ஒரு படத்தின் கதையை உணர்வுப்பூர்வமாகக் கடத்துவதற்கான காட்சிகளும் வசனங்களும் மிக முக்கியம். இரண்டு வரிகள் கொடுக்கும் அழுத்தத்தை ஒரு பாடல் எல்லா நேரமும் கொடுக்காது. பட ஓட்டத்திற்காக எடுக்கப்பட்ட பாடல்களைத் தான் மிகப் பெரிய வேகத்தடையாக நம்மால் பார்க்க முடிந்தது.

சிறுவனின் செயல்கள் சில சமயம் சிரிப்பை மூட்டினாலும் சில சமயம் அவன் நடந்து கொள்வது நிச்சயம் ஏற்புடையதல்ல. அப்பாவை மரத்தில் தொங்க விட்டு ஏணியைத் தள்ளிவிட்டு ஓடுவது. நினைத்த நேரம் நினைத்த இடத்தில் காணாமல் போவது. தாத்தா பாட்டி மீது காரணம் இல்லாமல் கோபம் கொண்டு அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று அடம் பிடிப்பது... இதெல்லாம் குழந்தைத்தனம் என்று எடுத்துக் கொண்டாலும் இதைத் திருத்த வேண்டாமா? பல சமயங்களில் இவன் குழந்தையா அல்லது சிவா குழந்தையா என்ற அளவு அப்பாவியாக இருக்கிறார் சிவா. அந்தச் சிறுவன் மட்டுமல்ல இவரும் எதையுமே தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை.

கணவன் மனைவியாக இருந்தாலும் கடைசி அரை மணி நேரம் தவிர இவர்கள் காதலும் தாம்பத்தியமும் தொலைப்பேசி வழியாகவே கடத்தப்படுகிறது. ஆனால் அது பல சமயங்களில் அழகாகவும் யதார்த்தமாகவும் நிகழ்கிறது. சாத்தானே சாத்தானே என்று காதல் கணவனை அழைக்கும் இடங்கள் குறும்பு.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 3BHK - வீடில்லை... வாழ்க்கையின் போராட்டம்!
Paranthu Po Movie

சில காட்சிகளே வந்தாலும் அஞ்சலியும் அஜூ வர்கீஸும் கச்சிதம், விஜய் யேசுதாஸ் வரும் காட்சிகள் படத்தின் நீளத்தைக் கூட்ட மட்டுமே உபயோகப்பட்டுள்ளதோ?! இந்த இடத்தில் தான் படத்தில் பாடல்களை உபயோகப்படுத்தியதற்குப் பதிலாக அழுத்தமான வசனங்களை எழுதிக் கடத்தி இருக்கலாம்.

குழந்தைகளின் உலகம் அழகானது அவர்களைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ளத் தயாராக இருப்பதில்லை. எனப் பெற்றோர்களை மட்டுமே சுட்டிக் காட்டும் தருணத்தில் இந்தப் படத்தில் வரும் சிறுவனைப் போல நிஜத்தில் நடந்து கொள்கிறார்களா. தங்களது மொபைல், லேப்டாப், பி எஸ் 4/5, இதைத் தாண்டி இவர்களுக்கு ஓர் உலகம் இருக்கிறதா. தங்களுடைய சொந்தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவாவது அவர்களுக்கு நேரமிருக்கிறதா. இதைச் செய்யாததால் பெற்றோர்களுக்கு மட்டும் பங்கில்லை. அவர்களுக்கும் உண்டு என்பதை எப்போது உணர்வார்கள் யார் உணர்த்துவார்?

தான் சம்பாதித்ததில் ஒரு கணிசமான தொகையை உடன் பணி புரிபவர் குடும்பத்திற்குக் கொடுக்கிறார் கிரேஸ். இவர்களும் ஒரு நாகரிகமான அடுக்குமாடிக்குடியிருப்பில் நல்ல வசதியோடு தான் இருக்கிறார்கள். இதில் பணக்கஷ்டம் என்று தப்பித்து ஓடுவது நகைச்சுவைக்கும் கதைக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Heads of State - சிரிப்புக்கும் ஆக்க்ஷனுக்கும் அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் உத்தரவாதம்!
Paranthu Po Movie

தனக்கு உணர்ச்சிப்பெருக்குள்ள படங்கள் மட்டுமே எடுக்கத் தெரியும், வேறு எதுவும் வராது என நினைத்தவர்களுக்கு என்னால் இப்படியும் படம் எடுக்க முடியும் என்று தனக்கும் நிரூபித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம். ஒரு சிறுவனின் பார்வையில் இந்தப்படம் செல்கிறது என்றால் கடைசியில் வரும் தந்தையர்களுக்கான அறிவுரை வாய்ஸ் ஓவர் எதற்கு?

கவனிக்கத் தக்கப் படம் என்ற வகையில் இதை வரவேற்கலாம். ஆனால் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத படமா இது என்றால் பதில் இல்லை என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com