

தமிழ்த் திரையுலகில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கம்பீரமான நடிப்பு, நல்ல குரல் வளம் மற்றும் தமிழ் உச்சரிப்பு என சிவாஜியின் திறமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒரு நடிகராக எண்ணற்ற சாதனைகளைப் புரிந்த சிவாஜி, தனது சினிமா பயணத்தை தொடங்கியது நடிகராக அல்ல. ஆம், சிவாஜி கணேசன் டப்பிங் கலைஞராகத் தான் முதன்முதலில் தனது பயணத்தைத் தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் வாங்கிய சம்பளம் வெறும் 200 ரூபாய் தான் என்பது பலரும் அறியாத உண்மை.
பள்ளிக்கூடம் படிக்கும் வயதில், தனது தந்தையுடன் ஒருநாள் வீரபாண்டியன் கட்டபொம்மன் நாடகத்தை காணச் சென்றார் சிவாஜி. அந்த நாடகத்தை கண்ட பின்னர், அவருக்குள் இருந்த நடிகன் வெளிவர தொடங்கினான். நடிப்பின் மீது பேராவல் கொண்ட சிவாஜி கணேசன், வீட்டிற்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீபாலகனா சபையில் சேர்ந்து, மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ராமாயணத்தில் வரும் சீதை கதாபாத்திரமே சிவாஜி கணேசன் முதன்முதலில் ஏற்று நடித்த கதாபாத்திரமாகும். அதன் பிறகு இலக்குவன், பரதன் மற்றும் சூர்ப்பனகை உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய சிவாஜி, தமிழ் சினிமாவிலும் வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார்.
கடந்த 1951 ஆம் ஆண்டில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளில் ‘நிரபராதி’ என்ற படம் வெளியானது. ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய இத்திரைப்படத்தில் முக்காமலா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகனாக நடித்தார். இப்படம் தெலுங்கில் ‘நிர்தோஷி’ என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு, பின்னர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
தமிழில் டப்பிங் செய்யும் போது கதாநாயகனுக்கு தமிழ் தெரியாத காரணத்தால், நல்ல குரல் வளம் கொண்ட தமிழ் டப்பிங் கலைஞரைத் தேடியது படக்குழு. அப்போது இப்படத்தில் நடித்த அஞ்சலி தேவி என்ற நடிகை தான் சிவாஜி கணேசனை டப்பிங் செய்ய பரிந்துரை செய்தார்.
மேடை நாடகங்களில் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசக்கூடிய கணேசன் என்ற ஒரு பையன் இருக்கிறான். இந்தப் படத்திற்கு டப்பிங் கலைஞராக அவன் சிறப்பான முறையில் பணியாற்றுவான் என நடிகை அஞ்சலி தேவி கூறினார். சினிமா வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த கணேசனுக்கு, அஞ்சலி தேவியின் சிபாரிசு, அவருக்கு புது நம்பிக்கையை அளித்தது.
பிறகு கதாநாயகன் முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு டப்பிங் பேச சிவாஜி கணேசனுக்கு சம்பளமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டது.
டப்பிங் பணிகள் தொடங்குவதற்கு முன்பே ரூ.200-ஐ முன்பனமாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்தது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், மீதித் தொகை ரூ.300-ஐ தயாரிப்பு நிறுவனம் சிவாஜி கணேசனுக்கு தரவில்லை.
அவ்வகையில் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பார்த்த முதல் வேலை டப்பிங் கலைஞர்; இதற்காக அவர் பெற்ற முதல் சம்பளம் ரூ.200. இதற்கு அடுத்த ஆண்டே 1952-ல் பராசக்தி என்ற படத்தில் நாயகனாக நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிவாஜிக்கு, முதல் படமே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து, தனி வரலாற்றையே படைத்து விட்டார் சிவாஜி கணேசன்.