

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு குறையே இல்லாத வகையில் பலர் உள்ளனர். காலத்திற்கேற்றவாறு புதிய காமெடி நடிகர்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் காமெடி நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு காமெடி நடிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு சில நடிகைகள் காமெடி கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தாலும், அவர்கள் ரசிகர்களை கவரும் அளவிற்கு செயலாற்றவில்லை என்பது தான் நிதர்சனம். அவ்வகையில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு, காமெடி நடிகைகளில் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியவர் கோவை சரளா.
சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் மனோரமா காமெடி நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக காமெடி நடிகர் நாகேஷ் உடன், இவர் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. காமெடியில் கலக்கிய மனோரமா கூட, முதலில் தான் ஒரு காமெடி நடிகையாக வலம் வருவார் என்று நினைத்திருக்க மாட்டார்.
ஏனெனில் காமெடி தனக்கு ஒத்து வராது என நினைத்திருந்தார். ஆனால் "உங்களுக்கு காமெடி கதாபாத்திரம் சரியாக இருக்கும்' என மனோரமாவிற்கு வழிகாட்டியதே ஒரு மாபெரும் கவிஞர் தான் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பு நிறுவனமான கண்ணதாசன் பிலிம்ஸ், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தை தயாரித்தது. இந்தப் படத்தை ஜி.ஆர்.நாதன் இயக்க, டி.ஆர்.மகாலிங்கம், மனோரமா, மைனாவதி, காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பண்டரிபாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை தொடங்குவதற்கு முன்பு கவிஞர் கண்ணதாசன் காமெடி காட்சிகளில் நடிப்பதற்காக மனோரமாவை அணுகினார். அப்போது தனக்கு காமெடி எல்லாம் ஒத்து வராது என அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். ஆனால் மனோரமாவைப் பார்த்து “நீ சிரிப்பு நடிகையாக நடித்தால் சரித்திரம் படைப்பாய்” என கவிஞர் கண்ணதாசன் ரத்தினச் சுருக்கமாய் சொன்னார். அதற்குப் பின்பு தான் மனோரமா மாலையிட்ட மங்கை படத்தில் காமெடி நடிகையாக நடித்து அசத்தினார்.
இந்தப் படத்தில் மட்டுமல்ல அதற்குப் பின், பல படங்களில் நடிகை மனோரமா காமெடி காட்சிகளில் பிரம்மாதமாக நடித்து அசத்தினார். அன்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது போலவே, மிகச் சிறந்த காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்தார் நடிகை மனோரமா. அவ்வகையில் மனோரமாவின் திரைப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததில், கவிஞர் கண்ணதாசனுக்கும் மிக முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.
சினிமா துறையில் 1,000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் சாதனை படைத்த மனோரமா நடித்த முதல் திரைப்படம் இதுதான். மாலையிட்ட மங்கை படத்திற்கு முன்பு வரை எழுத்தாளராக மட்டுமே இருந்த கவிஞர் கண்ணதாசன், பாடல் ஆசிரியராக புகழ் பெற்றதும் இந்தப் படத்தில் தான். இப்படத்தில் கண்ணதாசன் எழுதிய 15 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றன.
காமெடி நடிகையாக மட்டுமின்றி, பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்திய மனோரமா, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்