
உலகின் மின்னல் வேக மனிதர் எனும் புகழைப் பெற்றவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். வேகம் என்றாலே இன்று பலருக்கும் இவரது ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு தடகளத்தில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார் உசேன் போல்ட். ஓட்டப் பந்தயத்தில் சரித்திரம் பேசும் சாதனைகளைப் புரிந்த உசேன் போல்ட், முதலில் கிரிக்கெட் விளையாட்டில் தான் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இவர் எப்படி தடகளத்தில் சாதித்தார் என்பது பலரும் அறியாத தகவல்.
தடகளத்தில் உசேன் போல்ட் தடம் பதித்த கதை இன்று வரலாறாக மாறியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டில் தடகளத்தில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
விளையாட்டு வீரர்களின் திறமையைக் வெளிக் கொண்டு வருவதில் பயிற்சியாளரின் பங்கு மிக அதிகம். உசேன் போல்டின் திறமை உலக அரங்கில் வெளிப்படுவதற்கும் பயிற்சியாளரின் அறிவுரை தான் மிக முக்கிய காரணம். உசேன் போல்டிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட். இளம் வயதில் அவரும் கிரிக்கெட் விளையாடவே ஆசைப்பட்டார். அதற்கேற்ப போல்ட் முதலில் கிரிக்கெட் பயிற்சியைத் தான் மேற்கொண்டார்.
உசேன் போல்ட் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இவரது ஓட்டத் திறனைக் கண்டு வியந்தார் அவரது பயிற்சியாளர். கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், தடகளத்தில் கவனம் செலுத்தினால் உனக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என பயிற்சியாளர் தான் உசேன் போல்டிற்கு அறிவுரை கூறினார்.
பயிற்சியாளரின் அறிவுரைப்படி, இவர் தடகளத்தில் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். அயராத உழைப்பு, இடைவிடாத பயிற்சி மற்றும் பயிற்சியாளரின் முழு ஒத்துழைப்பு ஆகியவை தான் உசேன் போல்டிற்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது. அதன்பிறகு உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் படைத்த சாதனைகளை இந்த உலகமே அறியும்.
உசேன் போல்டின் தந்தை தீவிரமான கிரிக்கெட் ரசிகர். போல்ட் கிரிக்கெட் வீரராக இருந்து, ஓட்டப்பந்தய வீரராக சாதித்தவர். கிரிக்கெட்டின் தீவிர ரசிகரான போல்டிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.
உங்களுக்கு மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்குங்கள் என உசேன் போல்டிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. இதற்கு பதலளித்த போல்ட், “எனது கனவு கிரிக்கெட் அணியில் எப்போதும் விராட் கோலிக்கு இடமுண்டு. அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். மேலும் எனது அணியில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் ஆகியோருக்கு இடம் கொடுப்பேன். இவர்கள் இருவரும் மிகச்சிறந்த ஃபீல்டர்கள்.
நான் சிறு வயதில் இருந்தே சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் அம்புரோஸ் ஆகியோரை பார்த்து வளர்ந்துள்ளேன். எனது கிரிக்கெட் பயிற்சியாளரின் அறிவுரையைக் கேட்டு தான் நான் கிரிக்கெட்டில் இருந்து தடகளத்திற்கு மாறினேன்” என்று உசேன் போல்ட் கூறினார்.