விமர்சனம்: கேங்கர்ஸ் - கொடுத்த காசுக்கு ஒர்த்தா? இல்லையா?
ரேட்டிங்(3 / 5)
தலைநகரம், வின்னர் என்று பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த சுந்தர். சி - வடிவேலு கூட்டணி இப்போது 'கேங்கர்ஸ்' படத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறது.
ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் சுஜாதா (கேத்ரின்) போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்கிறார். அந்த பள்ளிக்கு புதிதாக உடற்பயிற்சி ஆசிரியராக வருகிறார் சரவணன் (சுந்தர் C).
அங்கே மற்றொரு உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கும் சிங்காரம் (வடிவேலு) சுஜாதாவை ஒரு தலையாக காதலிக்கிறார். யாரோ முகம் தெரியாத ஒருவர் வில்லன் வகையறாக்களை அடித்து துவைக்கிறார். இதற்கெல்லாம் காரணம் சிங்காரம்தான் என்று எண்ணும் வில்லன் கோஷ்டி சிங்காரத்தை டார்சர் செய்கிறது. "நான் அவ்வளவு ஒர்த் இல்லங்க" என்று கதறுகிறார் சிங்காரம் (வடிவேலு).
இதற்கிடையில் வில்லனிடம் இருக்கும் 100 கோடி பணத்தை தான் திருடப்போவதாக சொல்கிறார் சரவணன். சரவணனுடன் சிங்காரம், சுஜாதா இன்னும் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள் இந்த கேங்கர்ஸ்கள் சேர்ந்து பணத்தை திருடினார்களா இல்லையா என்று கதை செல்கிறது.
சுந்தர்.C படத்தில் லாஜிக் இருக்காது. இந்த படத்திலும் லாஜிக் இல்லை. இதோடு சேர்த்து இந்த படத்தில் முதல் பாதி வரை விறுவிறுப்புஇல்லை. சுந்தர்.C தான் இயக்கி, நடித்த பல படங்களின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் வடிவேலு பத்தாண்டுகள் முன்பு நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளை போலவே காட்சிகளை வைத்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாதி ஓரளவு நம்மை சிரிக்க வைக்கிறது. படத்தில் கடைசி 20 நிமிடம் தியேட்டரில் நடப்பது போல் வரும் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. வடிவேலுவும், பகவதியும் பெண் வேஷம் போட்டு கொண்டு அடிக்கும் லூட்டி நன்றாக உள்ளது.
'வடிவேலு - சுந்தர் C கூட்டணி' என்று ப்ரோமோட் செய்தார்கள். படத்தில் வடிவேலு, பகவதி, முனீஸ்காந்த், சந்தான பாரதி இவர்களுடன் கூட்டணி சேர்ந்து சிரிக்க வைக்கிறார். மாறுவேடம் போட்டு கொண்டு வில்லன் வீட்டிற்குள் சென்று மாட்டி கொள்ளும் போது வடிவேலு செய்யும் காமெடி 'அலப்பறை'!
சுந்தர்.C இப்படத்தில் நகைச்சுவை வடிவேலு கூட்டணியிடம் தந்து விட்டு தான் ஆக்ஷனில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கிறார். கேத்தரினுக்கு கிளாமராக பாடல்களில் வருவது நடனம் ஆடுவது தவிர பெரிய வேலை ஒன்றும் இல்லை. கம் பேக் தந்தார் வடிவேலு என்று சொல்வதை விட, வடிவேலு தான் நடித்த பல படங்களை ரீ கால் பண்ண வைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
சத்யாவின் இசையில் பாடல்களில் வரிகள் புரிய வில்லை என்றால் கூட பின்னணி இசை நன்றாக உள்ளது. சுந்தர்.C தான் இயக்கும் படங்களின் பாடல் காட்சியில் ஒன்றிலாவது தன் மனைவி குஷ்புவை காண்பித்து விடுவார். இந்த படத்தில் குஷ்புவை காண்பிப்பதற்கு பதிலாக சின்னத்தம்பி படத்தில் இடம்பெறும் 'தூளியிலே ஆட வந்த, நீ எங்கே என் அன்பே' பாடல்களை இடம் பெற செய்து தன் மனைவியை நினைவு படுத்துகிறார்.
கேங்கர்ஸ் படத்தின் முதல் பாதியை பொறுமையாக கடந்து விட்டால் இரண்டாம் பாதியின் நகைச்சுவையை ரசிக்கலாம்.