Naangal Movie Review
Naangal Movie

விமர்சனம்: 'நாங்கள்' - கண்டிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ள வேறுபாடு!

Published on
ரேட்டிங்(3.5 / 5)

கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகள் மீது செலுத்தும் வன்முறைகளை சொல்லும் படங்கள் பல மேலை நாட்டில் வந்துள்ளது. இந்தியாவில் குறைவுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான வன்முறையை சொல்லும் படமாக வந்துள்ளது 'நாங்கள்' படம்.

திரைப்பட கல்லூரியில் படித்த அவினாஷ் பிரகாஷ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த வாரம் திரைக்கு வர உள்ள இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே ராட்டர்டாம், ஜியோ மாமி, பெங்களூரு போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

1990 கள் காலம் ஊட்டியில் பள்ளி ஒன்றை நடத்தும் ராஜ்குமார் மனைவியை பிரிந்து தனது ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருபவர். இந்த மூன்று ஆண் குழந்தைகளும் பள்ளி செல்லும் போதும், தனது நாயுடன் விளையாடும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் வீட்டிற்கு வரும் போது அஞ்சி நடுங்குகிறார்கள். காரணம் அப்பா ராஜ் குமார். அளவுகடந்த கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி நடக்க வைக்கிறார் அப்பா.

கட்டுபாடு என்ற பெயரில் ஆண் குழந்தைகளை வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வைப்பது, மின்சாரம் இல்லாமல் வீட்டை வைத்திருப்பது, தண்ணீரை வெளியில் இருந்து எடுத்து வர வைப்பது என டார்ச்சர் செய்கிறார். ஒரு கட்டத்தில் வேறு ஊரில் இருக்கும் அம்மாவை தேடி செல்கிறார்கள் குழந்தைகள். தாத்தா உங்களை படிக்க வைக்க முடியாது என்று அப்பாவிடமே திருப்பி அனுப்பி விடுகிறார். மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் மனைவியையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் ராஜ் குமார். குழந்தைகள் என்ன செய்தார்கள் என்று சொல்கிறது நாங்கள்

பரபரப்பான காட்சிகள் இல்லாமல், எந்த ட்விஸ்ட்டும் இல்லாமல் உணர்வின் உரையாடல்களுடன் செல்கிறது படம். அன்புக்கு ஏங்கும், அதே சமயத்தில் குழந்தை பருவத்திற்கே உரித்தான சில சேட்டைகளுடன் நடித்திருக்கிறார்கள் மூன்று சிறுவர்களும். லைவ்வான பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். "என் படத்தில் சொல்ல முடியாத ஒரு மௌனம் இருக்கும் இந்த மௌனத்திற்கும் பின்னணி இசை அமைத்திருக்கிறார் இளையராஜா" என்று மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்:
'வாழை' மாரி செல்வராஜின் முதல் கதை. ஆனால், அவர் அதை தனது முதல் படமாக எடுக்கவில்லை... ஏன்?
Naangal Movie Review

இந்த நாங்கள் படத்தில் வேத் ஷங்கர் சுகவனத்தின் இசையை கேட்கும் போது பாலுமகேந்திரா சொன்ன விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. பல காட்சிகளில் பின்னணி இசை எதையும் ஒலிக்க செய்யாமல், சில நிமிடங்கள் சென்ற பிறகு ஒரு லேசாக ஒரு கவிதை வாசிப்பு போல இசை கருவியை ஒலிக்க செய்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது. எடிட்டிங், திரைக்கதை, ஒளிப்பதிவு, திரைக்கதை என நான்கு விஷயங்களையும் டைரக்டரே செய்து விட்டதால் இதில் தேவையான அம்சங்களை நேர்த்தியாக கொண்டு வந்து விட்டார் டைரக்டர்.

மன ரீதியாக பாதிக்கப்பட்ட அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார் அப்துல். மகன்கள் படிக்க வில்லையே என்று அடித்து விட்டு, சில மணி நேரத்தில் கட்டி பிடித்து அழுவது, மனைவியை ஏற்று கொள்ளாமல் இறுக்கமாக இருப்பது என பல காட்சிகளில் ஒரு கை தேர்ந்த நடிகரை போல் நடித்திருகிறார். மகன்களாக நடித்திருக்கும் மூன்று பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மூத்த பையனாக வரும் மிதுன் மிக நன்றாக நடித்துள்ளார். குழந்தைகள் நம்மில் இருந்து வந்தவர்கள். ஆனால் நாம் நினைப்பதை அப்படியே வாழ்பவர்கள் அல்ல என்று புரிய வைக்கிறது நாங்கள். கண்டிப்பு என்பதே அன்பின் வெளிப்பாடுதான். இது அடக்கு முறையாக மாறி விடக்கூடாது என்று சொல்கிறது இப்படம். பெற்றோர்களுக்கான ஒரு பாடம்.

இதையும் படியுங்கள்:
சிவாஜியின் இந்தப் படம் ஒரு ரூபாய்கூட வசூலிக்காது… ரஜினி சொன்னாராமே!
Naangal Movie Review
logo
Kalki Online
kalkionline.com