டென் ஹவர்ஸ் - ஓர் இரவு; காவல் நிலையம்; மூன்று குற்றங்கள் என வந்திருக்கும் இன்னொரு படம்!

Ten Hours
Ten Hours
Published on

படத்தின் ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி போன்றோருக்கெல்லாம் நன்றி என்று போடுகிறார்கள். ஆமாம் இதுவும் ஓர் இரவில், அதுவும் சாலையிலும் காவல்நிலையத்திலும் நடக்கும் கதை.

ஒரு கிரைம் திரில்லர் அல்லது மர்டர் மிஸ்டரி என்ற ஜானரில் எடுக்க வேண்டும் என்று நினைத்து இறங்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள். அதில் வெற்றி பெற்றாரா பார்க்கலாம்.

இது போன்ற கதைகளில் பலர் மேல் சந்தேகம் வரும். பின்னர் அந்த முடிச்சு ஒவ்வொன்றாக அவிழ்ந்து கடைசியில் குற்றவாளி இவர்தானெனத் தெரிய வரும். ஆனால் இதில் பெண் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலையென மூன்று அம்சங்களையும் இவர் கொண்டு வர வேண்டும். மூன்றும் இணையும் புள்ளியில் குற்றவாளி வெளிப்பட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். படமும் முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் சென்று விடுகிறது. சின்ன சின்ன க்ளூக்களை வைத்துக் கொண்டே துப்பறிந்து வருகிறார் சிபிராஜ். கம்பளிப்பூச்சி, உடைந்து போன பல்புகள், சரடுகள் என வெகுசுலபமாக நெருங்க ஆரம்பிக்கிறார். ஆனால் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வர, சோர்வடைகிறார். 

இவர் தானா? இல்லை. இவர் தான். இல்லையில்லை இவர் தானென அடுத்தடுத்து கண்ணாமூச்சி ஆடுகிறது திரைக்கதை. ஒருகட்டத்தில் நமக்குச் சற்று பொறுமை போய்விடுகிறது. எல்லாம் முடிந்து கடைசியில் இதற்குத்தானென இறுதி முடிச்சு அவிழும்பொழுது ஆச்சரியத்திற்கு பதில் நமக்குச் சப்பென்றாகிவிடுகிறது. இந்தத் திரைக்கதை சற்று பின்னோக்கிச் செல்வது இந்தக் கிளைமாக்சில் தான்.

வில்லனின் அறிமுகமும் இந்தக் குற்றங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணமும் இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகவா கையாளுவார்கள்; என்ன வில்லனோ? என்று தோன்றுகிறது.

நாயகனாகச் சிபிராஜ். திரையில் இவரைப் பார்த்துப் பல வருடங்களானதால் சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் போலத் துப்பறிவதெல்லாம் சரி. ஆனால் முக்கியமான தருணங்களில் தனியாகத்தான் செல்வேன். அந்த இடங்களிலெல்லாம் ஒரு சண்டைக்காட்சி இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்தது தான் தவறு. ஆக்க்ஷன் மோடுக்குப் படம் மாறும்போதெல்லாம் கவனமும் மாறுகிறது. சண்டைக்காட்சிகள் ஓகேவாக இருந்தால் கூட, மிகவும் வசதியாக அமைத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. அவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான் போடும் வில்லன் இவருக்காகக் காத்திருந்து சண்டை போடுவதெல்லாம் ஒட்டவே இல்லை. 

ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களும், டிரைவர்களும் நடந்து கொள்ளும் விதங்கள் குறித்து மக்களுக்குப் பெரிய அபிப்பிராயமில்லை. இந்தப் படத்தில் நடப்பது போலவும் நடக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தால் அவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். 

ஓர் இரவில் அதுவும் ஹைவேயில் நடக்கும் கதைக்களன் என்பதால் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தன்னால் இயன்ற அளவு காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார். இரண்டு பேருந்துகள் ஒன்றையொன்று முந்தும் காட்சி, ட்ரான் ஷாட்களில் படம் பிடிக்கப்பட்டுள்ள துரத்தல்கள் இவர் உழைப்புக்குச் சான்று. இந்தக் காட்சிகளில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோரின் பங்கும் குறிப்பிடத் தக்கது.

இது ஒரு பரபரப்பான திரைக்கதை. இசை அதே வேகத்தில் இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியிடம் சொல்லி விட்டது தான் தாமதம். வாசித்துத் தள்ளியிருக்கிறார் மனிதர். சில இடங்களில் பொருந்தி வந்தாலும் படம் முழுதும் இப்படியா. சில இடங்களில் அமைதியாக இருக்க வேண்டிய தேவை இருந்தாலும் அங்கும் ஏதாவது இசையை நிரப்பியிருக்கிறார். பாடல் எதுவும் இல்லை என்ற கோபம் போல அவருக்கு. 

'கைதி'யையே சற்று பட்டி டிங்கரிங் பார்த்து வெளியான 'மேக்ஸ்' என்னும் கன்னடப் படம் அதன் ஆக்க்ஷன் காட்சிகளிலேயே பெரிதாக ஈர்க்கப்பட்டு வெற்றியடைந்தது. அதே போல் ஓர் இரவில், காவல் நிலையத்திலும், சாலையிலும் நடக்கும் கதை அமைக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர் இளையராஜா நல்ல பெருமாள், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகவே  வந்திருக்கும் படம். ஆனால்  துப்பறியும் கதையா ஆக்க்ஷன் கதையா என்ற முடிவில் அவருக்கிருந்த தடுமாற்றம் திரைக்கதையிலும் முடிவிலும் தெரிகிறது. இவ்வளவு பெரிய விஷயத்திற்காகத் தான் இந்த வேலைகள் நடக்கிறது என்றால் அதற்குண்டான ஸ்டேஜிங் படத்தில் மிஸ்ஸிங். அதனால் தான் படம் முடிந்து வெளியே வரும்போது இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாமோ. ஏதோ மிஸ்சிங்பா என்ற எண்ணத்திலேயே வரவேண்டியிருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
ஜிங்குச்சா - 'தக் லைப்' - இது சானியா மல்ஹோத்ராவிற்கான தேடல் நேரம்!
Ten Hours

ஏகே 47, பாம்கள் என்று போய்க் கொண்டிருக்கும் காலத்தில் காவல் நிலையத்தின் மீதும், நாயகன்மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசிக்கொண்டிருக்கிறார்கள். கொலை செய்தாரெனச் சந்தேகப்படும் ஒருவரிடம் துப்பாக்கியை டேபிளில் வைத்து மிரட்டி விசாரிக்கும் சிபிராஜ் அதை அப்படியே விட்டு விட்டு வெளியில் இன்னொரு விஷயத்தை விசாரிக்கப் போகிறார். முழுப் படத்தில் நமக்குத் தெரிந்த முகங்கள் என்று பார்த்தால் கஜராஜ், திலீபன், சரவணா சுப்பையா போன்றவர்கள் தான். அதிலும் கடைசி இருவர் வரும்போது தான் டைட்டில் கார்டில் அவர்கள் பெயர் பார்த்த நினைவே நமக்கு வருகிறது. அந்த அளவு தான் அந்தப்பாத்திரங்களை எழுதியிருக்கிறார்கள். 

ஊர் முழுதும் குட் பேட் அக்லீ அலை வீசிக்கொண்டிருக்க உங்களை நம்பி வந்திருக்கிறோம் என்று வரும் இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கில் இல்லாவிட்டாலும் ஓ டி டியில்  ஆதரவு தருவார்கள் என்று நம்பலாம். இதே போன்ற கதி தான் சதீஷ் நடித்து வெளியான சட்டம் என் கையில் படத்திற்கும் ஏற்பட்டது.   

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'நாங்கள்' - கண்டிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ள வேறுபாடு!
Ten Hours

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com