

கௌரவம் படம் மற்றும் சிவாஜி ரசிகர்களின் கொண்டாட்டம்
“என்னங்க.. கொஞ்சம் நிப்பாட்டுங்க.. இந்த சீனில் உயரமா குண்டா வருகிற நடிகர் நீலு தானே..?” கமலா தன் கணவர் குப்புசாமியிடம் கேட்டார். அவர் டி வியில் யூ ட்யூபில் கௌரவம் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆமாம் கமலா அவரே தான். மிகச் சிறந்த காமெடி நடிகர். டயலாக் டெலிவரி சூப்பரா இருக்கும். இது கௌரவம் சிவாஜி படம் யூ ட்யூபில் இருக்கு. இந்த சீன் என்ன தெரியுமா.. பாரிஸ்டர் ரஜனிகாந்த் ஆகிய பெரிய சிவாஜி தன் வளர்ப்பு மகன் சின்ன சிவாஜி, நாகேஷ், நீலு, ஒய் ஜி மகேந்திரன் இவர்களுடன் ஒரு கொலை கேஸ் விசாரணைக்கு வரும் முன், வீட்டில் ஒரு ஒத்திகை பார்க்கும் சீன். டைரக்டர் வியட்னாம் வீடு சுந்தரம் மிகவும் ரசிக்கும் படி எடுத்து இருக்கார்.
இந்த சீனில் நீலு வேலைக்காரி செண்பகம் ஆக மாக் ட்ரையல் (Mock trial) ஒத்திகையில் நடிப்பார். ஒரு டவலை புடவை சுற்றி அவர் நடந்து போகும் காட்சியில் நமக்கு விலா வலிக்கும் சிரிப்பு.
கமலா – இந்த படம் ஒரு தீபாவளிக்கு வந்துச்சுங்க.
குப்புசாமி – 1973ஆம் வருஷம். நல்ல வரவேற்பைப் பெற்றது. கண்ணன் வந்தான் என்று ஒரு நாடகம் எழுதி நடத்தினார் வியட்னாம் வீடு சுந்தரம். பின் அவரே இயக்கினார் சினிமாவாக.
கமலா - ஏங்க இந்தப் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக வரும் சிவாஜியை ஒரு வைதீக பக்திமார்க்க மைலாப்பூர் அட்வகேட் குடும்பத்தில் அராத்து பேர்வழியாகக் காட்டுவார் டைரக்டர்.
எப்பவும் பெட்காபி மாதிரி ஆல்கஹால் பாட்டில் கையுமா இருப்பார். பைப்பில் புகை பிடிப்பார். பேச்சு கொஞ்சம் ரவுடித்தனமா எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவார்.
குப்புசாமி – அவர் ஒரு நகரின் புகழ்பெற்ற கிரிமினல் லாயர். அவர் பார்க்கும் வழக்குகள் எல்லாம் கொலை கொள்ளை கேஸ்கள் தான். அவர் கிளையண்ட்ஸ் பூரா கொடும் குற்றவாளிகள் தான். அதனால் அவர்களுடன் பழகிப் பழகி சுபாவமே கிரிமினல் வக்கீல்களுக்கு கொஞ்சம் முரடாகத்தான் இருக்கும்.
இதை பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம் மூலம் நன்றாகக் காட்டி இருந்தார் டைரக்டர். அவர் மனைவி பக்தை. அவர் வளர்ப்பு மகன் கண்ணன், தம்பி மகன். மகா பக்தன். வம்பு தும்பு போகாத ஒரு ஜூனியர் லாயர். அந்தப் பாத்திரம் பெரியப்பாவுக்கு அடங்கிய ஒரு சாது பிள்ளை.
நல்ல வேறுபாடு காட்டி இவரா அவர் என வியக்க வைப்பார்.
ஒண்ணு தெரியுமா கமலா..? காவல் நிலையத்தில் இன்சார்ஜ் ஆக இருக்கும் இன்ஸ்பெக்டர் போன்ற அதிகாரிகள் கொஞ்சமும் சாதாரண பாமர மக்களை மதிக்காத மாதிரி தெரியக் காரணமும் இதுவே. அவர்கள் தினசரி பார்ப்பதெல்லாம் பிக் பாக்கெட்டுகள், சட்டத்தை மீறுபவர்கள், குற்றவாளிகள்.
அவர்கள் பார்வையில் படுவதெல்லாம் குற்ற நிகழ்வு, வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களே.. மனதில் என்ன நினைவோ அது தானே வெளியில் தெரியும்.. அகத்தினழகு முகத்தில் தெரியும் அல்லவா.
அந்த முரட்டு சுபாவ பார்வை இல்லாத போலீஸ்… காமெடி போலீஸ் ஆகிவிடுவார் பொது மக்களுக்கு. ஒரு பயம் இருக்க வேண்டும்.
இந்த சீனில் டைரக்டர் வியட்னாம் வீடு சுந்தரம் ஒரு சட்ட நுணுக்கத்தை பாரிஸ்டர் ரஜினிகாந்த் எப்படிப் பிடிக்கிறார் என்பதை காமெடி கலந்த ஒரு சீரியஸான ஆர்குமெண்ட் ஆகக் காட்டுவார்.
சாட்சி வேலைக்காரி செண்பகத்துக்குக் கண் பார்வை சரியாகத் தெரியாது. வீட்டு ஓனர் ஒரு சாட்சி. ஆனால் இடி மழை சத்தத்தில் குற்றம் நிகழ்ந்த அன்று எதுவும் சரியாகக் காதில் விழவில்லை என்பார்.
இந்த இருவர் சாட்சியங்களில் உள்ள இந்த ஓட்டைகளை வைத்து குற்றவாளிக்கு சாதகமாக்கி விடுதலையும் வாங்கித் தந்து விடுவார். இந்த ஒத்திகையில் அனைத்து கோர்ட் நடவடிக்கைகளும் முடிந்து விடும். நேரே ஜட்மெண்ட் தான். காட்சி அமைப்பு அட்டகாசம். நடிகர்கள் அனைவரும் ஜாம்பவான்கள். பின்னி எடுத்து விட்டார்கள்.
கமலா - ஆனால் சுந்தரராஜன் செய்த கொலைக்குத் தப்பிவிடுவார். செய்யாத ஒரு கொலைக்கு மாட்டிக் கொள்வார் என வரும் படத்தில்.
குப்புசாமி – அந்தக் காலத்தில் கல்கியில் காந்தன் அவர்கள் பட விமர்சனத்தில் இதைத் தான் குறிப்பிட்டு.. ஆக கோர்ட் இரு தடவை தப்பு செய்து விட்டது எனக் குறிப்பிட்டார்.
கமலா – ஆமாங்க.. ஒரு அப்பாவி காதம்பரி என்ற மைனர் பொண்ணைக் கடத்தி வந்து கல்யாணம் பண்ணி கொலை செய்வானாம்.. ஜஸ்டிஸ் போஸ்ட் கிடைக்காத ஆங்காரத்தில் ஒரு லீடிங் கிரிமினல் லாயர் சட்டத்தின் ஓட்டைகளை வைத்து விடுவிப்பாராம்.. அப்புறம் கடவுள்ன்னு ஒருத்தர் இருக்கார் இல்லியா?
குப்புசாமி – ஆமாம் அதுக்குப் பெயர் தான் நேச்சுரல் ஜஸ்டிஸ். குற்றத்துக்கு எப்படியும் தண்டனை வந்தே தீரும். விதைத்த வினையை அறுவடை செய்து தானே ஆகணும். இது தான் இந்தப் படத்தில் டைரக்டர் சொல்லவந்த செய்தி. கர்மா விடாது என்பதே மையக் கருத்து.
'நீயும் நானுமா' பாடல் காட்சியில் ஒரு வயது முதிர்ந்த சீனியர் அரசரும் இளமையான ஒரு அரசரும் செஸ் போர்டில் ராஜாவாக எதி எதிராக நிற்பார்கள்.. அந்த நடை உடை கம்பீரம்… உடல் மொழி வேறுபாடு சிவாஜி சிவாஜி தான்.
இந்தப்படத்தில் சீனியர் பாரிஸ்டர் ரஜனிகாந்த் ஸ்டைலைப் பார்த்துதான் நான் ஸ்டைல் கற்றேன்.. போஸ்கள் தந்தேன் என்பார் சூப்பர் ஸ்டார்.
படத்தில் நடித்த அத்தனை பேரும் ஜெம்ஸ். சூப்பர் பெர்ஃபாமன்ஸ். போலீஸ் அதிகாரியாக வரும் செந்தாமரையை நோஸ்கட் செய்வார் ரஜனிகாந்த். படத்தில் வி கே ராமசாமி வக்கீல்கள் கூடும் அறையில் இருந்து காமெடி பேசுவார். உயிரோட்டமான வசனங்கள்.
கமலா - இந்த படம் வசூலில் வெற்றியா?
குப்புசாமி – நல்ல வெற்றி. நிறைய பரிசுகளை வென்றது அப்படம். பாடல்கள் சிச்சுவேஷனுக்கு ப் பொருத்தமாய் இருக்கும். அதிசய உலகம் என ஜெய்குமாரி ஒரு கேபரே நடனம் போல் ஆடுவார். அந்த ஆட்டம் துள்ளலாக இருக்கும்.
கமலா – இந்த அளவு கடப்பாரை மாதிரி இருக்கிற ரஜினிகாந்த் தோல்வி தாங்க முடியாத ஒரு பாத்திரமா? அவர் மரண கிளைமேக்ஸ் சரியில்லைங்க.
குப்புசாமி – அவர் வளர்ப்பு பிள்ளை கண்ணன் சிவாஜி தான் சொல்வாரே. 'ஒரு நாள் டயம் வாய்தா வாங்கி இருந்தால் புது சாட்சி ஐ எஸ் ஆர் ஆகிய எல் ஐ சி ஏஜெண்ட் விவகாரத்தை நல்லா ஸ்டடி பண்ணி சாட்சியத்தை தூள் தூளாக்கி இருப்பார் பெரியப்பா.. ஆனால் எனக்கா டயம் கொடுக்கிறேங்கிற ஆணவம் அவரை தோல்விக்குத் தள்ளிவிட்டது.'
படத்தில் ரஜினிகாந்த் நாத்திகம் பேசுவார்.. கடவுளை நம்பாதவர்.. தன் தொழில் தான் எல்லாம் என்பவர்… அவரே கடைசியில் ஸ்ரீராமர் படம் முன் தலை வணங்குவார்.. சகுனம் பார்ப்பார் பூனை குறுக்கே ஓடினதும்.
கமலா - எத்தனை தரம் பார்த்தாலும் சில காட்சிகள் சலிக்கலைங்க. அதில் இந்த ஒத்திகை பார்க்கும் மாக் ட்ரையலும் ஒண்ணு.
முன்னணி நடிகர்களின் ஸ்டைல் உருவான விதத்தையும், நடிப்புப் பள்ளிகளாகத் திகழும் பழைய காவியப் படங்கள் தரும் வாழ்நாள் பாடம் குறித்த தெளிவான பார்வையையும் இந்தப் பதிவு உங்களுக்கு வழங்கும்.