Gevi movie review
Gevi movie

விமர்சனம்: கெவி - சாலை இல்லை, மருத்துவமும் இல்லை... ஆனால் தேர்தல் மட்டும் நடக்கும்!

Published on
ரேட்டிங்(3.5 / 5)

நம்மில் பலர் கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு போன்ற பல மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோம். அங்கே மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்பி விடுவோம். அந்த மலைப் பகுதியில் வசிக்கும் மலை வாழ் மக்களை பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இன்னும் தமிழ்நாட்டில் சரியான சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாத பல மலை கிராமங்கள் இருக்கின்றன. இந்த மலை கிராமங்களில் தேர்தல் நேரத்தில் மட்டும் நமது அரசு நிர்வாகம் கடுமையாக போராடி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறதே... இது எப்படி சாத்தியம்?

அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக மலை கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஓட்டு கேட்டு விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த கிராமத்து பக்கம் திரும்பி கூட பார்க்காத ஒரு மலை கிராமத்தில் நடக்கும் கதை தான் கெவி. இந்த படத்தை தமிழ் தயாளன் இயக்கி உள்ளார்.

மணி கண்ணன், பெருமாள் கோவிந்த சாமி, ஜெகன் ஜெயசூர்யா மூவரும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். பேட்டை காளி, மண்டேலா, டு லெட் உட்பட பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் கவனம் ஈரத்த ஷீலா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கதையின் நாயகனாக ஆதவன் அறிமுகம் ஆகி உள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது 'கெவி' என்ற மலைக் கிராமம். சாலை வசதி, மருத்துவ வசதி எதுவும் இந்த கிராமத்தில் இல்லை. மக்கள் பல கிலோ மீட்டர் கீழே நடந்து கொடைக்கானலுக்கு வந்து அதன் பிறகு பெரியகுளம், கம்பம் பகுதிக்கு செல்கிறார்கள். சாலை வசதி வேண்டி போராடுகிறார் நம் ஹீரோ மலையன் (ஆதவன்). இந்த போராட்டத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு வனத்துறை அதிகாரியை தாக்கி விடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் அதிகாரி மலையனை பழி வாங்க நினைக்கிறார். மலையன் மனைவி மந்தாரை (ஷீலா) கர்ப்பமாக இருக்கிறார். ஒரு நாள் மலையன் பெரியகுளம் செல்கிறார்.

திரும்பி வரும் போது தாக்கப்பட்ட அதிகாரி மலையனை பிடித்து தனது ஆட்களுடன் கட்டி வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார். அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் மந்தாரைக்கு பிரசவ வலி வருகிறது. ஊர் மக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவ மனைக்கு போன் செய்து உதவி கேட்கிறார்கள். மருத்துவர் நேரில் வர மறுத்து விடுகிறார். எனவே ஊர் மக்கள் மந்தாரையை ஒரு டோலியில் கட்டி ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்கள். ஒரு பக்கம் மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணி பெண், மற்றொரு பக்கம் அதிகார வர்க்கத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளும் இளைஞன். இந்த இரு சம்பவங்களையும் பரபரப்புடன் நகர்த்தி கொண்டு செல்வது மட்டும் இல்லாமல், இந்த சம்பவங்கள் வழியே அரசின் அவலங்களை கேள்வி கேட்கிறார் டைரக்டர் தமிழ் தயாளன்.

ஜெகன் சூர்யா ஒளிப்பதிவும், பாலசுப்பிரமணியம் பின்னணி இசையும் சேர்ந்து வன மக்களின் சொல்ல முடியாத சோகத்தை கடத்தி வருகிறது. ஷீலா மிக பிரமாதமாக நடித்திருக்கிறார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, வயிற்றில் இருக்கும் குழந்தை பிழைக்க வேண்டும் என்று நினைக்கும் போதும் பிரசவவலியால் துடிக்கும் போதும் ஒரு லைவ் மலைவாழ் பெண்ணை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார். வந்து விட்டார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ஹீரோ ஆதவனின் நடிப்பு இருக்கிறது. "எங்களை பார்த்தா ஏன் உங்களுக்கு அருவருப்பா தெரியுது" என்று அதிகாரியை பார்த்து கேள்வி கேட்கும் போதும், தன் குழந்தை நல்லபடியாக பூமியில் பிறக்க இறைவனை வேண்டும் போதும் நடிப்பில் ஆதவன் ஆஹா என்று சொல்ல வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜென்ம நட்சத்திரம் - ஒரே குழப்பம்!
Gevi movie review

மருத்துவராக வரும் விஜய் டிவி ஜாக்குலின், மருத்துவ உதவியாளராக வரும் திருநங்கை ஜீவா, அதிகாரியாக வரும் சார்லஸ் வினோத் என வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நடிப்பில் தங்களின் பங்களிப்பை சரியாக தந்துள்ளார்கள்.

டோலியில் கர்ப்பிணி பெண்ணை தூக்கி கொண்டு வரும்போது, நாமும் மலையில் நடந்து வருவது போன்ற உணர்வு வருகிறது. படத்தின் இறுதி காட்சியில் தேர்தலுக்கான மின்னணு வாக்கு பெட்டிகள் கெவி கிராமத்திற்கு வருகின்றன. இந்த பெட்டிகளை கழுதைகள் மலையில் சுமந்து வருகின்றன. அரசுகள் தங்களுக்கு தேவை என்றால் கழுதைகளை கூட பயன்படுத்துகின்றன. ஆனால் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதியை செய்து தர இத்தனை அலட்சியம் ஏன்? என்ற கேள்வியை இந்த காட்சி நமக்கு முன் வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஓஹோ எந்தன் பேபி - ஓஹோவா? ஓகேவா?
Gevi movie review

ஒரு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதை சொன்ன 'தண்ணீர், தண்ணீர்', குழிக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதில் அரசின் மெத்தனத்தை சொன்ன 'அறம்', ஒரு கழிப்பறைக்காக 'தவம்' கிடக்கும் 'மண்டேலா' போன்ற படங்களின் வரிசையில் மருத்துவமனைக்கும், சாலை வசதிக்கும் மக்கள் நடத்தும் இந்த போராட்டத்தைசொன்ன கெவி படத்திற்கும் இடம் உள்ளது. நிறைய விருதுகளும் இந்த படத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கெவி - ஒரு வாழ்க்கை போராட்டம்.

logo
Kalki Online
kalkionline.com