விமர்சனம்: ஓஹோ எந்தன் பேபி - ஓஹோவா? ஓகேவா?
ரேட்டிங்(2.5 / 5)
ஒவ்வொரு கால கட்டத்திலும் காதல் என்ற விஷயத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய இளைய தலைமுறை காதல் பற்றி என்ன புரிதல்களை கொண்டுள்ளது என சொல்ல வந்துள்ள படம் ' ஓஹோ எந்தன் பேபி '. விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிருஷ்ணகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார் ருத்ரா. புதிய படம் இயக்க வாய்ப்பு தேடி பல்வேறு சினிமா கம்பெனிகளுக்கு செல்கிறார். பிரபல ஹீரோவாக இருக்கும் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார் ருத்ரா.ருத்ராவின் கதையில் திருப்தி அடையாத விஷ்ணு விஷால் வேறு ஏதேனும் கதை இருந்தால் சொல்லும்படி கேட்கிறார். ருத்ரா சிறிது யோசித்து தனது வாழ்க்கையில் நடந்த காதல் அனுபவத்தை கதையாக சொல்கிறார்.
டைரக்டர் மிஷ்கினிடம் உதவியாளராக இருக்கும் போது ருத்ராவிற்கு மிதிலாவின் நட்பு கிடைக்கிறது. இந்த நட்பு காதலாக மாறுகிறது. தனது தாய் மாமாவின் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மிதிலாவிற்கு ருத்ராவின் காதல் ஆறுதல் தருகிறது. ஆனால் ஒரு நாள் ஒரு பிரச்சனை வரும் போது தனது தாய் மாமாவின் வன்முறை குணம் ருத்ராவிடம் இருப்பதை பார்க்கிறார் மிதிலா. இதனால் மனமுடைந்த மிதிலா ருத்ராவை விட்டு பிரிக்கிறார். இந்த காதல் அனுபவத்தை விஷ்ணு விஷாலிடம் கதையாக சொல்கிறார் ருத்ரா. இதை கேட்கும் விஷ்ணு "இந்த கதையில் நான் நடிக்கிறேன். ஆனால் உன் காதலி இப்போது எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து, இன்று உன் காதலி ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வா. அதன் பிறகு தான் நான் உனக்கு கால்ஷீட் தருவேன்" என்று கண்டிஷன் போடுகிறார். வேறு வழியில்லாமல் ருத்ராவும் தன் காதலி மிதிலாவை தேடி போகிறார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு, சிறப்பான கதாபாத்திர அறிமுகம் என நன்றாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி???முதல் பாதியின் சிறந்த விஷயங்களை தக்கவைக்க விட்டு விட்டது. பிரிந்த காதலியை தேடி செல்லும் ஒன் லைனில் இப்போது பல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த படங்களை பார்த்த அனுபவம் நமக்கு இருப்பதால் காதலன் - காதலி எப்படியும் இறுதியில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சற்று வித்தியாசமாக திரைக்கதையை நகரத்தி இருந்தால் முழு படமும் சுவாரசியமாக வந்திருக்கும். சினிமா ஷூட்டிங் வழியாக தனக்குள் இருக்கும் காதலை புரிய வைக்க முயற்சி செய்வது , மிஷ்கின் செய்யும் அறிவுரை போன்ற விஷயங்கள் பெரிதாக ஒர்க் அவட் ஆகவில்லை. ஒரு நல்ல காதல் திரைப்படம் என்பது படம் முடியும் வரை காதல் உணர்வை பார்வையாளர்கள் மனதில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த படத்தில் காதல் உணர்வு படம் முழுவதும் நீட்டிக்க வில்லை.
இருந்தாலும் 'ஓஹோ எந்தன் பேபி ' நன்றாக நடிக்க தெரிந்த ஒரு ஹீரோவை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளது. ருத்ரா பள்ளி மாணவனாகவும், காதலி ஏமாற்றும் போது துவண்டு போவதும், பெற்றோர்கள் சண்டை போடும் போது கண்டு கொள்ளாமல் செல்வதும் என அனுபவம் பெற்ற நடிகனை போல் நடிதுள்ளார்.
ஹீரோயின் மிதிலா முதலில் சற்று அந்நியமாக தெரிந்தாலும் யதார்த்தமான காதல் நடிப்பால் நமது மனதில் நுழைந்து விடுகிறார். நல்ல ஒன் லைன், பொருத்தமான ஹீரோ - ஹீரோயின் போன்ற பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், ஒரு சரியான திரைகதையை டைரக்டர் அமைக்க தவறி விட்டதால், 'ஓஹோ எந்தன் பேபி' படம் 'ஓகே'தான்.