Jenma Natchathiram Movie Review
Jenma Natchathiram Movie

விமர்சனம்: ஜென்ம நட்சத்திரம் - ஒரே குழப்பம்!

Published on
ரேட்டிங்(2 / 5)

சமீபத்தில் வெளியான பெரும்பான்மையான பேய் படங்களில் லத்தின் மொழியில் அழைத்தால் மட்டுமே பேய்கள் வருகின்றன. இன்று வெளியாகியுள்ள ஜென்ம நட்சத்திரம் - The beginning படத்திலும் லத்தின் மொழியில் பேய்களை அழைக்கிறார்கள். 'கடவுளுக்கு எதிரானவர்கள்' (Anti christ) என்ற ஒன்லைனில் வெளியாகி உள்ளது ஜென்ம நட்சத்திரம்.

கடந்த ஆண்டு ஒரு நொடி என்ற திரில்லர் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணி வர்மன் ஜென்ம நட்சத்திரம் படத்தை இயக்கி உள்ளார். ஒரு நொடி படத்தில் ஹீரோவாக நடித்த தமன் அக்ஷன் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஒரு பிரபல அரசியல்வாதியிடம் வேலை செய்யும் காளி வெங்கட் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுவதால் அந்த அரசியல்வாதியின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்பு கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு இறந்து விடுகிறார். ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். இப்படி சொல்லும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும்... நீங்கள் யூகித்தது சரிதான் ஹீரோ அண்ட்டீம் செல்லும் அந்த கட்டிடத்தில் பேய், தீய சக்தி என பல வேண்டாத விஷயங்கள் இருக்கின்றன.

பேய் படத்தில் ஹீரோ - ஹீரோயின் தவிர உடன் இருபவர்கள் அனைவரையும் 'பேய் கொன்று விடும்' என்ற பல பேய் படங்களில் லாஜிக் போலவே இந்த படத்திலும் பேய் ஹீரோவின் நண்பர்கள் அனைவரையும் கொன்று விடுகிறது. பேய், அமானுஷ்யம் என்று செல்லும் கதையில் 'ட்விஸ்ட்' என்று நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் 'பேய் காரணமல்ல, மனிதர்கள் தான் காரணம்' என்று ஒரு இடம் வருகிறது. சரி இதை பிடித்து டைரக்டர் வலுவான திரைக்கதை தந்திருப்பார் என்று பார்த்தால், குழப்பத்தை மட்டுமே தந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மாயக்கூத்து - சிறிய பட்ஜெட்டில் நேர்த்தியான படைப்பு!
Jenma Natchathiram Movie Review

ஹாரர் - த்ரில்லர் என்ற இரண்டையும் ஒரே படத்தில் தர முயற்சி செய்து இரண்டில் ஒன்றை கூட சரியாக தரவில்லை டைரக்டர். ஒரு நொடி கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. மாறுபட்ட படமாக இருக்கும் என நம்பி சென்றால் மந்திரம், பேய், மாந்திரீக பூஜை என நாம் பல படங்களில் பார்த்து பழகிய காட்சிகள் 'ரீபிட் மோடில் வந்து, பேய் வந்தா என்ன செய்யும் நமக்கு தெரியுமே' என்ற உணர்வை மட்டும் தருகிறது. படத்தில் பாசிட்டிவான விஷயங்களில் ஒன்று ஒளிப்பதிவு. kG யின் ஒளிப்பதிவில் இரவு நேர லைட்டிங் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

ஹீரோயின் மால்வி மல்ஹோத்ரா மற்ற அனைவரைவும் விட சிறப்பாக நடித்துள்ளார். கனவின் போது பயந்து எழுவது, வயிற்றில் இருக்கும் கருவை காப்பாற்ற போராடும் இடம் போன்ற இடங்களில் நன்றாக நடித்துள்ளார். ஹீரோ தமன் அக்ஷனுக்கு எண்ணிக்கையில் மற்றுமொரு படம் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஓஹோ எந்தன் பேபி - ஓஹோவா? ஓகேவா?
Jenma Natchathiram Movie Review

கடந்த 1991 ஆம் ஆண்டு தக்காளி ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஜென்ம நட்சத்திரம் என்ற படம் வெளியானது. இந்த படத்தை இப்போது தொலைக்காட்சியில் பார்த்தால் கூட சற்று பயம் வரும். 2025 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த ஜென்ம நட்சத்திரம் படம் த்ரிலரா? ஹாரரா? குழப்பம் மட்டுமே வருகிறது! பயம்? ம்ம்ம்ஹும் கொஞ்சமும் வரவில்லை!

logo
Kalki Online
kalkionline.com