மலையாளப் படங்களில் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டே தான் இருக்கப் போகிறது கோலிவுட். இதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள் அவர்கள்.
ஒரு ஆபீஸ். அதில் பணி புரியும் பதினைந்து நபர்கள். அதன் முதலாளி ஆபீஸ் டாய்லெட்டில் கீழே விழுந்து மரணித்து கிடக்கிறார். விபத்து என்று அனைவரும் சொல்லக் கொலை என்கிறார் விசாரணை செய்ய வரும் இன்ஸ்பெக்டர். எது உண்மையென மிகச் சுவாரசியமாகச் செய்திருக்கிறார்கள்.
மலையாளத் கதாசிரியர்களுக்கு கிரைம் இன்வெஸ்டிகேஷன் மேலுள்ள காதல் மாறவே மாறாது போல இன்னொரு தரமான செய்கை.
ஒரு படத்தை மூன்று பகுதிகளாகப் பிரிப்பார்கள். இதில் முதலும் கடைசியும் அட என்று சொல்லும் அளவு இருக்க, அந்த மூன்றாவது பகுதிக்கு இவர்கள் வர எடுத்துக் கொண்ட நேரமும் விளக்கமும் இன்னும் சற்று சரியாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும் .
அதில் காட்டப்படும் காரணங்கள் சிலருக்குப் புரியாமலும் போகலாம். படம் முடிந்து விடும் போலிருக்கிறதே நினைத்துக் கொண்டே இருக்க, வைத்தார்கள் அடுத்த பாகத்திற்கான ஒரு லீட். இதுவும் ஒரு பின்னடைவு. ஒரு படம் பார்த்ததற்கு உண்டான முழுமை இந்தச் சீக்வல் படங்களில் கிடைப்பதில்லை. இந்த நிலை கொஞ்சம் மாறினால் பரவாயில்லை. ஒரு படம் எடுப்பதற்கு இவர்கள் சிரமப்படுகிறார்களா இல்லை முடிக்க முடியாமல் கற்பனை ஊற்றெடுக்கிறதா; ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சன்னி வெய்ன், திலீஷ் போத்தன் தவிர பிற முகங்கள் தெரியவில்லை. ஆனாலும் படம் முடியும்போது அந்தப் பதினைந்து கேரக்டர்களும் மனதில் வந்து விடுவார்கள். அது தான் சாதுர்யமான எழுத்து.
ஒரே லொகேஷன், திரும்பத் திரும்ப அதே கேரக்டர்கள். ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை ஏன் செய்கிறார்கள் என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கம் எனப் படத்தில் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. இன்ஸ்பெக்டராக ரஞ்சித் சஜீவ். கட்டுமஸ்தான ஆளாகக் கச்சிதம். விசாரணைக் காட்சிகள் சந்தேகக் கண்ணோட்டம் அனைவரிடமும் பரவக் காரணமாக இருக்கிறது.
ஆனால் இவர் சட்டென்று ஒரே ஒரு பாயிண்டை வைத்துக் கொண்டு முக்கிய கதாபாத்திரம் (சித்திக்) ஒன்றை அணுகுவதும் அவர் கிட்டத்தட்ட படத்தை முடித்து விடுவதும் என்னடா இது சற்று சுலபமாக முடிந்து விட்டதே இந்த விசாரணை என்ற எண்ணத்தைக் கொண்டு வருகிறது.
முதலில் சொன்னது போல் ஒரே ஒரு ஆபீஸ், இருபது கேரக்டர்கள், இரண்டு கார்கள் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பரபர த்ரில்லரை கொடுத்த இயக்குனர் சம்ஜத் மற்றும் இந்தக் குழுவைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். இதுவரை வரவே வராத கதைக் களம் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஆங்கிலப் படங்களில் அதுவும் KNIVES OUT மற்றும் அகதா கிரிஸ்டியின் ஹெர்குலி பைரேட் துப்பறியும் படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சற்று பழகிய களம்போலத் தான் இருக்கும். முடிவையும் பாதியிலேயே யூகித்து விடுவார்கள். அவ்வளவு ஏன் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த சிவாஜி சூரத்கல் கூட இது போன்ற படம் தான்.
த்ரில்லர், மற்றும் துப்பறியும் படங்கள் பிடிக்குமா. அது போன்ற ரசிகர்களுக்குக் கண்டிப்பாக உற்சாகமாகப் பொழுது போகும். ரத்தம், ஆபாசம் போன்ற அம்சங்கள் இல்லாததால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.