அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன் உள்ளிட்ட 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டாலும் உலகளவில் ஆஸ்கர் விருது கவுரவமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வழங்கப்படும் இந்த விருதிற்கு உலகளவில் தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. உலகளவில் திரைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு ஒருமுறையாவது ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த விருது இந்தியாவை சேர்ந்த பானு அத்தையா என்பவருக்கு 1983-ம் ஆண்டு காந்தி திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக கிடைத்தது. இதன் மூலம் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கார் விருது பெற்றார். அதனை தொடர்ந்து 2023-ல் RRR படத்திற்காக கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர். இவ்வாறு இந்திய திரைத்துறைக்கு எட்டா கனவாக இருந்த ஆஸ்கார் விருதை நாமும் எட்டிப்பறிக்க ஆரம்பித்து விட்டோம்.
இந்நிலையில் 98-வது ஆஸ்கர் விருது விழா 2026-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார் என்றும் விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது குழுவில் உள்ள உறுப்பினர்கள் உலகளவில் திரைப்பட துறையை சேர்ந்த சிறந்த படைப்பாளர்களை ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்வார்கள். ஆஸ்கர் விருதுக்கு சிறந்த நடிகர், நடிகர்களை தேர்வு செய்வதை போல ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கும் ஆண்டுதோறும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டிலும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யும் குழுவில் புதிய உறுப்பினர்களாக இணைவதற்கு இந்திய திரைத்துறையை சேர்ந்த கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா உள்ளிட்ட 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘சலங்கை ஒலி’, ‘இந்தியன்’ ‘தசாவதாரம்’ போன்ற படங்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கமல்ஹாசனுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு இப்போதும் இருக்கிறது. இந்த ஏக்கத்திற்கு மருந்தாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இனி கமல்ஹாசன் கண் அசைத்தால்தான் ஆஸ்கர் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் பூரித்துப் போயுள்ளனர்.
சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் அழைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தது வருகின்றனர்.
ஆஸ்கர் விருது குழுவில் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘உலகளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கு கிடைத்த தாமதமான அங்கீகாரமே ஆகும். இன்னும் பல உயரங்கள் தங்களை தேடி வரும்" என கூறியுள்ளார்.