
ஹான்ஸ் ஸிம்மர் என்று பெயரைக் கேட்டதும் பலருக்கும் நியாபகம் வருவது கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்களின் வரும் சிறப்பான பின்னணி இசை தான். ஸிம்மரின் சிறப்பே பின்னணியில் அவர் உருவாக்கும் புது விதமான ஒலிகள் தான். மிகவும் அறிவாளி இசையமைப்பாளர் என்று அறியப்படும் அவர், ஒலிகளில் ஏராளமான புதுமைகளை புகுத்தியதால் ஹாலிவுட் திரையுலகம் அவரை கொண்டாடுகிறது.
ஹான்ஸ் ஸிம்மரின் இசையை பெரும்பாலும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானோடு ஒப்பிடுகிறார்கள். இசையை தாண்டியும் இருவரின் வாழ்க்கையில் பல ஒற்றுமைகள் உண்டு. சிறு வயதிலேயே ஹான்ஸ் ஸிம்மரும் தனது தந்தையை இழந்து தாயுடன் வளர்ந்தவர். இவரது தாய் ஒரு இசைக் கலைஞர் என்பதால் , சிறு வயதிலேயே பியானோ வாசிப்பதில் ஸிம்மர் தேர்ச்சி பெற்றார். அவரது தந்தை பொறியியலாளராக இருந்ததால் , சிம்மர்ஸ் இசைக்கருவிகளில் புதிய நுட்பத்தை சேர்த்து , புதிய ஒலிகளை உருவாக்குவதிலும் சிறப்பு பெற்றிருந்தார்.
ஸிம்மரின் அதிக இசையார்வம் காரணமாக பல பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் இசைக்குழுவில் சேர்ந்து தனது திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்தார். ஸிம்மர் எப்போதும் தன் தலையில் புதிய இசையை தான் கேட்பதாக கூறியிருக்கிறார். ஹாலிவுட்டில் பாரம்பரிய முறையில் வாசிக்கப்படும் ஒலிகளை எல்லாம் மாற்றி புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு ஹாலிவுட்டின் ஒலியை மாற்றி அமைத்தவர் ஸிம்மர்.
ஹான்ஸ் ஸிம்மர் 1970 களில் கிரகடோவா இசைக்குழுவில் கீபோர்டுகள் மற்றும் சின்தசைசர்களை வாசிக்கும் பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறிய அவர் விளம்பர ஜிங்கிள்களுக்கும் , ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்து கொண்டிருந்தார். 80- களில் ஹாலிவுட் இசையமைப்பாளரான ஸ்டான்லி மியர்ஸ் உடன் இணைந்து ஸிம்மர் பணிபுரிய தொடங்கினார். 1987 இல் ஸிம்மர் தனியாக இசையமைத்த 'டெர்மினல் எக்ஸ்போஷர்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு ஸிம்மர் இசையமைத்த ரெயின் மேன் திரைப்படம் இசைக்காக ஆஸ்கர் நாமினியில் இடம்பெற்றது.
அவர் இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆஸ்கர் விருதுகளை வென்று கொண்டிருந்தது , அவரும் ஆஸ்கர் விருது அருகிலேயே சென்றிருந்தார் . 1994 ஆம் ஆண்டு தி லயன் கிங் திரைப்படத்திற்கு ஸிம்மர் இசையமைத்ததன் மூலம் முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றார். ஆஸ்கர் விருதைப் பெற்றாலும் அப்போது ஹாலிவுட்டின் அதிக புகழை அவரால் பெற முடியவில்லை. அப்போது ஹாலிவுட்டில் நீண்ட காலமாக ஜான் வில்லியம்ஸ் இசையில் கோலோச்சிக் கொண்டிருந்தார். ஜேம்ஸ் ஹார்னர், என்னியோ மாரிக்கோன் போன்றோரை தாண்டி ஸிம்மர் தனக்கான இடத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் பல பெரிய திரைப்படங்கள் ஸிம்மரை தேடி வர ஆரம்பித்தது. "மிஷன் இம்பாசிபில் 2, கிளாடியேட்டர் , ஹன்னிபால் , பேர்ல் ஹார்பர், தி லாஸ்ட் சாமுராய் "போன்ற திரைப்பங்கள் அவரை ஏணியில் ஏற்றியது. 2005 இல் கிரிஸ்டபர் நோலனுடன் பேட்மேன் பிகின்ஸ் திரைப்படம் மூலம் ஸிம்மர் இணைந்தார். இந்த கூட்டணி ஸ்டீபன் ஸ்பீல்பர்க் - ஜான் வில்லியம்ஸ் , ஜேம்ஸ் கேமரூன் - ஜேம்ஸ் ஹார்னர் கூட்டணிக்கு இணையாக இருந்தது.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த இண்டர்ஸ்டெல்லர் திரைப்படம் மூலம் ஹான்ஸ் ஸிம்மர் அதிகப் புகழை பெற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹாலிவுட்டில் முன்னணியில் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு டூன் திரைப்படம் மூலம் இரண்டாவது ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். இவருக்கும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் நல்ல நட்பு உண்டு.அமெரிக்காவில் உள்ள
ஸிம்மர் ஸ்டுடியோவின் உட்புறத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவும் உள்ளது. நீண்ட காலமாக இருவரும் சேர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக இருந்தது , அது ரன்பீர்கபூர் மற்றும் யாஷ் நடிக்கும் ராமாயணம் திரைப்படம் மூலமாக நிறைவேறிக் கொண்டுள்ளது.