
தன்னுடைய குறும்பு சிரிப்பாலும், வசீகர தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
2003-ம் ஆண்டு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுல பயணத்தை தொடங்கிய ஹன்சிகா, 2007-ம் ஆண்டு தேசமுதுரு என்ற படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படவுலகில் கால் ஊன்றினார்.
அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னனி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 டிசம்பர் 4ம்தேதி சோஹைல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
தனது தோழியின் கணவரையே ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவும், சோஹைல் முன்னாள் மனைவி ரிங்கியும் நெருங்கிய தோழிகள் என்று செய்திகள் வெளியானதை அடுத்து, சோஹேலும் ஹன்சிகாவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். ஹன்சிகா தன்னுடையே தோழிக்கே துரோகம் செய்துவிட்டார் என அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கூட ஆகாத நிலையில் சமீபகாலமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே இந்தி ஊடகங்களில் ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து அதிகளவில் பேசப்பட்டு வந்தது.
அதுமட்டுமின்றி ஹன்சிகா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாகவும் , தற்போது மும்பையில் உள்ள தனது தாயுடன் வசித்து வருவதாகவும், அதற்கு கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினைதான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஹன்சிகா விவாகரத்து உறுதி தான் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வரும் நிலையில், இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக ஹன்சிகா வாய்திறக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது, விவாகரத்து செய்தியை உறுதிப்படுத்துகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஹன்சிகா நீக்கியுள்ளார். விவாகரத்து என்று வதந்திகள் பரவிவரும் நிலையில் ஹன்சிகாவின் இந்த செய்கை அதற்கெல்லாம் தூபம் போடுவது போல அமைந்துள்ளது.
இதன் மூலம் ஹன்சிகா, சோஹைல் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியான நிலையில், ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுகுறித்து எந்தத் தகவலையும் இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமான விவாகரத்து செய்தி குறித்து இருவரும் அறிவிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
ஹன்சிகா மோத்வானி கடைசியாக தமிழில் இயக்குனர் சபரி & குரு சரவணன் இணைந்து இயக்கிய ‘கார்டியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.