‘ஹேப்பி பர்த்டே’ கே.ஜே.யேசுதாஸ் சார்!

K.J.Yesudas
K.J.Yesudas
Published on

தென்னிந்திய திரையுலக இசை வேள்வியில் 80 மற்றும் 90களில் தனது தேன் தடவிய மென்மையான குரலால் ரசிகர்களின் மனங்களை இனிக்கச் செய்து, அதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தவர், இசை ரசிகர்களால் ‘கந்தர்வக் குரலோன்’ என போற்றப்படும் கே.ஜே.யேசுதாஸ்.

இன்று இவரது 85வது பிறந்த நாள். பிரபல திரைப்பட பாடகராகவும் கர்நாடக இசைக் கலைஞராகவும் தனது அளப்பரிய இசை சேவையை 60 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் சாதனைக்கு சொந்தக்காரரான இவரைப் பற்றி ஒருசில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1940 ஜனவரி 10ம் தேதி பிறந்த கேரள மண்ணின் மைந்தனான இவர் சிறு வயதிலேயே தனது தந்தையின் நண்பரான குஞ்சன்வேலு பாகவதரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் இசையைக் கற்றுத் தேர்ந்தார்.

தமிழில் ‘பொம்மை’ என்னும் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், 'கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் இவரது பாடல் முதலில் வெளிவந்தது. இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, வட இந்திய மொழிப் பாடல்களையும் பாடி தேசிய அளவில் பிரபலமான பாடகர் ஆனவர். மேலும், கடல் தாண்டியும் அரபு, மலாய், ஆங்கிலம், இலத்தின் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இனிய குரலால் உலகம் எங்கும் வலம் வந்தவர்.

இதையும் படியுங்கள்:
என் மகன் படம் வெற்றிபெற்றால் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறேன் – அமீர்கான்!
K.J.Yesudas

1965ம் ஆண்டில், சோவியத் யூனியன் அரசாங்கத்தால் சோவியத் ஒன்றியத்தின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டதுடன் கஜகஸ்தான் ரேடியோவில் ரஷ்ய பாடலைப் பாடியது, இவரது குரலின் இனிமைக்குக் கிடைத்த உலக அங்கீகாரம் ஆகும்.

இசைப் பயணத்தில் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் 1980ல் ‘தரங்கிணி’ என்ற பெயரில் ஒரு இசை நிறுவனம் ஆரம்பித்து, அதன் மூலம் தனது திரைப்படப் பாடல்கள், ஆன்மிகப் பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுகளை வெளியிட்டார்.

பிறப்பால் இவர்  கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் எனினும், இந்து கடவுளான ஐயப்பன் மீது கொண்ட தீராத பக்தியினால், ‘ஐயப்பன் பாடல்கள் என்றாலே ஜேசுதாஸ்’ எனும் பெயரைப் பெற்றவர். காரணம், இவர் பாடிய 'அரிவராசனம்' எனும் பாடல் சபரிமலை சன்னிதானத்தின் திறப்பு மற்றும் சன்னிதான நடை சாத்தும் நேரங்களில் பாடப்படுவது தனிப்பெரும் சிறப்பு. இதன் மூலம் இசைக்கு மொழி, மதம் என்று எந்த அடையாளமும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.

பாரம்பரியத்தை அதிகம் நேசிப்பவரான இவர் கூறிய கருத்து, ஒன்று சர்ச்சை ஆனது. அக்டோபர் 2, 2014 அன்று, காந்தி ஜயந்தி அன்று ஒரு பொது விழாவில் பேசிய யேசுதாஸ், ‘பெண்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் ஆடைகளை அணியக் கூடாது. நீங்கள் அடக்கமாக ஆடை உடுத்த வேண்டும். ஆண்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்’ என்று குறிப்பிட்டு, பெண்கள் உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்புகளிடமிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்:
டாக்ஸிக் அலுவலகத்தில் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!
K.J.Yesudas

யேசுதாஸ் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை 8 முறை வென்றதும், தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதை ஐந்து முறை மற்றும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநில விருதை 43 முறை வென்றதும், சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்று விருதுகளை பெருமைப்படுத்தியவர்.

2006ம் ஆண்டில், சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார் எனும் குறிப்பு இவரின் தனிப்பட்ட சாதனையின் ஒரு சிறப்பு.

இவர் பாடிய ‘தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு’ பாடல் வரிகள் நிராதரவான மனிதனின் மன வலியை சொல்வதாகட்டும், ‘வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்’ என்ற தத்துவப் பாடலால் வாழ்வியலை உணர்த்துவதாகட்டும், ‘விழியே கதை எழுது’ என்று காதலில் உருகுவதாகட்டும், ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ நமது மனங்களை வருடுவதாகட்டும் ஜேசுதாஸும் அவரது தேனினும் இனிய குரலும் நம்முடன் என்றும் பயணித்துக்கொண்டேதான் இருக்கும் இசையின் மூலம் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com