பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது மகனின் படம் வெற்றிபெற்றால் புகைப்பழக்கத்தை விட்டுவிடுவேன் என்று கூறியிருக்கிறார். இப்படிக்கூட ப்ரோமோஷன் செய்யலாமா என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அமீர்கான் இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான நபர். பல ஹிந்தி படங்களில் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக லால் சிங் சத்தா மற்றும் Forrest gump போன்ற படங்களில் நடித்தார்.
அமீர்கான் மகன் ஜுனைத் கான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகளான குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ்யப்பா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து இவரும் சாய் பல்லவியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தன. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் நடிகர் அமீர் கான் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் “மொபைல் போன்களால் நம் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை குஷி கபூரை பார்த்தபோது ஸ்ரீதேவியை பார்த்ததாக உணர்ந்தேன். இந்த படம் வெற்றி பெற்றால் நான் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுவேன்” என கூறியுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்படிக்கூட படத்திற்கு ப்ரோமோஷன் செய்யலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இப்படிதான் சில மாதங்களுக்கு முன்னர் ஷாருக்கானும் கூறியிருந்தார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்த நாள் முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுவதாக கூறினார். அவர் தினமும் கிட்டத்தட்ட 100 சிகரெட்டுகளை பிடிப்பாராம்.
இருவரும் எந்த காரணத்திற்காக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும், இது அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.