அலுவலகங்கள் சிலவற்றில் வேலை பார்ப்பது என்பது, அலுவலக அரசியல், கிசுகிசு, நெகட்டிவாக பேசுவது போன்ற விஷயங்கள் அங்கு நடப்பதால் போர்க்களத்திற்குப் போகும் உணர்வை மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய இடங்களில் வேலை பார்க்கும்போது நமது எனர்ஜி நம் உடலை விட்டு நீங்குவதோடு, மன அமைதியையும் சீர்குலைத்து விடுகிறது. இத்தகைய இடங்களில் வேலை பார்க்கும்போது செய்யவே கூடாத 5 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது: நம்பிக்கை என்பது டாக்ஸிக்கான இடத்தில் வேலை பார்க்கும்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு தானாக வர வேண்டும். பார்ப்பதற்கு நண்பர் போல இருக்கும் ஒருவர், பல சமயங்களில் நமக்கு எதிரியாக திரும்பி விடுவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவரை நம்பி சில விஷயங்களை நாம் சொல்லும்போது அது நமக்கு எதிராகத் திரும்பிவிடும். எனவே, நம்மைக் குறித்த விஷயங்களை நமக்குள்ளேயே வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
2. பேசுவதில் கவனம்: சில நேரங்களில் நாம் ஒரு அர்த்தத்தில் பேசினால் அதனை வேறு ஒரு அர்த்தமாக மாற்றித் திரித்து சிலர் கூறுவர். அதனால் கேஷுவலாக பேசும் விஷயத்தில் கூட கவனத்தோடு இருக்க வேண்டும். வேலை நேரத்தில் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி கவனச் சிதறல் ஏற்படுத்தும் விஷயங்களில் இருந்து எப்போதுமே தள்ளி இருப்பது மிகவும் நல்லது.
3. கிசுகிசு: அளவுக்கு அதிகமான கிசுகிசுக்கள் டாக்ஸிக்கான வேலை இடத்தில் கண்டிப்பாக இருக்கும். இது பிறரை வீழ்த்த ஒருசிலரால் வைக்கப்படும் பொறியாக இருப்பதால், இதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் வேலை பார்க்கும் அனைவருக்கும் நல்லது. இந்த கிசுகிசுக்களால் மரியாதை கெட்டுப்போவது மட்டுமன்றி, தேவையற்ற வம்புகளைத் தவிர்த்து விடலாம். மன அமைதியுடன் வேலை பார்க்க, அமைதியாக வேலையை மட்டும் பார்ப்பது நல்லது.
4. ஆலோசனை கூறுவதை நிறுத்துங்கள்: யார் ஒருவர் கூறுவதை காது கொடுத்துக் கேட்கிறாரோ அவரிடத்தில்தான் மற்றவரைப் பற்றி புகார் கூறுபவர்கள் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். பிறரைப் புரிந்துகொள்வது நல்லதுதான் என்றாலும் அதில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் யாரேனும் பேச வந்தால் நாசூக்காக அவர்களை விட்டு விலகுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது உணர்ச்சிகளை மொத்தமாக விழுங்கி விடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.
5. அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்: நாம் வேலை செய்யும் இடம் ஆரோக்கியமானதுதானா? இல்லையா? என்பது பல நேரங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கும். நீங்கள் ஒரேமாதிரியான விஷயங்களை செய்கிறீர்கள் அல்லது உங்களுக்கு ஒருசிலர் ஒரே மாதிரியான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் வேறு வேலையை பார்க்க வேண்டியது அவசியமாகும். அது தவிர, அலுவலகத்தில் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறீர்களோ, அதனை ஒரு லிஸ்ட் போட்டு, ‘இதிலிருந்து தப்பிப்பது எப்படி?’ என்று யோசிக்க வேண்டும். கூடவே, உங்கள் மன நலன்தான் உங்களுக்கு முக்கியம் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கூறிய 5 விஷயங்களை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கவனத்தில் கொண்டாலே பல்வேறு பிரச்னைகளை தவிர்த்து விடலாம்.