இசையில் 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இசைப் புயலுக்கு இன்று (06 -01-2025) பிறந்தநாள். ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பிறகு இந்திய சினிமாத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ரஹ்மான் இசையுலகில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது இசைக்கு கிடைத்த வரவேற்பில் மாநில மொழிப் படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படங்களாக மாறியது.
1992 இல் வெளியான அவரது முதல் திரைப்படமான ரோஜா தமிழில் 2 லட்சம் கேசட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தது. அந்த திரைப்படத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய ரஹ்மான் மிகப்பெரிய லாபத்தை ஆடியோ நிறுவனத்திற்கு கொடுத்தார். படத்தின் ஹிந்திப் பதிப்பு 28 லட்சம் கேசட்டுகளை விற்று பெரிய சாதனையை படைத்தது. ரோஜா திரைப்படம் இந்திய சினிமாவை உலக அரங்கில் தூக்கி நிறுத்தியது.
இசையுலகில் பல்வேறு சாதனை செய்துள்ள ரஹ்மானுக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விருது வாங்கி குவிப்பதில் ஒரு எந்திரன். மணிரத்னம் இயக்கத்தில் வந்த தனது முதல் திரைப்படமான ரோஜா படத்திலேயே முதல் தேசிய விருது கணக்கை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி விட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் கூட்டணி தொடர்ச்சியாக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அதில் ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய படங்கள் அடங்கும். மின்சாரக் கனவு, லகான், மாம் ஆகியவை அவர் தேசிய விருது பெற்ற மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள்.
ஏ.ஆர் ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த பம்பாய் திரைப்படத்தின் பின்னணி இசை உலக அளவில் ஏராளமான திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டணியில் வெளிவந்த பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே போன்ற திரைப்படங்களின் இசை கேசட் விற்பனைகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இந்தியாவில் அதிக தேசிய விருதுகள் பெற்றவர்களில் ஒருவரான பாடலாசிரியர் வைரமுத்து வாங்கிய 7 தேசிய விருதுகளில் 5, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் கேசட்டுகள் வெளியான அன்றே லட்சக்கணக்கில் மொத்தமாக விற்று தீர்ந்து விடும்.பைரசிக்கு முந்தைய காலம் வரை படத்தின் லாபத்தை ரஹ்மானின் இசையே பெற்றுக் கொடுத்துள்ளது. ரோஜா, ரங்கீலா, பம்பாய், இந்தியன், தில்சே, தாள், ஜீன்ஸ், பாம்பே டிரிம்ஸ், வந்தே மாதரம் போன்ற ரஹ்மானின் ஆல்பங்கள் மிகப் பெரிய அளவில் கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
அந்த காலக்கட்டத்தில் மற்ற படங்களில் பாடல் கேசட்டுகள் 25 ரூபாய்க்கு விற்ற போது ரஹ்மான் இசையில் வந்த கேசட்டுக்கள் ₹45 க்கும் மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த காலக் கட்டத்திலும் போலி கேசட்டுகள் விற்பனை ஒரிஜினல் கேசட்டுக்களை விட 80% வரை அதிகமாக இருந்தது. அப்படி இருந்தும் 200 மில்லியன் கேசட்டுகள் ரஹ்மான் இசையில் விற்பனை ஆகியுள்ளது.
விருதுகள் வாங்கிக் குவிப்பதில் ரஹ்மான் சிறிதும் ஈவு இரக்கம் பார்த்தது இல்லை. உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை 2 முறை பெற்றவர். இசையுலகில் முதன்மை விருதான கிராமி விருதையும் 2 முறைப் பெற்றவர். இந்தியாவின் தேசிய விருதை 7 முறை வென்றவர் இவர் மட்டும் தான். அது மட்டுமல்லாது பிலிம்பேர் மற்றும் பிலிம்பேர் தென்னிந்திய விருதுகளை 33 முறை பெற்றுள்ளார், ஆனால், ரஹ்மான் திரைக்கு வந்தே 33 வருடங்கள் தான் ஆகிறது. IIFA விருதுகளை 16 முறையும் மிர்ச்சி விருதுகளை 19 முறையும் ரஹ்மான் பெற்றுள்ளார். பல வருடங்கள் தொடர்ச்சியாக ரஹ்மான் சிறந்த இசைக்கான விருதை பெற்றுக் கொண்டே இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா , இங்கிலீஷ் , மாண்டரின், இரான் உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.