ஹரிதாஸ் முதல் ரத்தக் கண்ணீர் வரை: காலத்தைக் கடந்த தமிழ் சினிமா உணர்த்தும் சமூகச் சத்தியம்!

70 வருட சினிமாக்களும் இன்றைய தலைமுறை பெற்றோர்களின் நிலையும் சொல்வது என்ன?
சமூகக் கண்ணாடி
சமூகக் கண்ணாடிAI Image
Updated on

தமிழ் சினிமா ஒரு சமூகக் கண்ணாடி: ஹரிதாஸ் படமும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

ஹரிதாஸ் - 16.10.1944 ல் தீபாவளி சமயம் வெளியான தியாகராஜபாகவதரின் முக்கியத்துவம் வாய்ந்த படம். மூன்று தீபாவளிகள் கண்டது. 10 வருடங்கள் கழித்து எம் ஆர் ராதா நடித்த ரத்தக் கண்ணீர் 25.10.1954 ல் தீபாவளி சமயம் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டது.

இதெல்லாம் எதுக்கு தெரிந்து என்ன ஆகப் போகுது,

வாஸ்தவம்… ஆனால் அந்தக் காலகட்டத்தில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள் பழக்க வழக்கங்கள். என்ன எதெல்லாம் சமுதாயப் பிரச்னை அப்போது ? என உணர்த்தும் காலக் கண்ணாடி அந்த சினிமாக்கள்.

ஹரிதாஸ் சுதந்திரத்துக்கு முன் வந்த படம். கதை காசி நகரில் நடக்கும் ஒரு ராஜா காலத்து கதை. வைதீகக் குடும்பத்து திருமணம் ஆன ஹரி தன் தீயப் பழக்க வழக்கங்களால் ஒரு துஷ்டப் பெண் நட்பால் தாய் தந்தையரை வீட்டை விட்டு விரட்டி விடுவார்.

பக்தி ஞானமார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பார். தன் வீடு வாசல் அனைத்தையும் இழந்து கட்டிய துணியுடன் மனைவியுடன் ரோட்டுக்கு வந்து விடுவார்.

காட்டில் ஒரு முனிவரை தூஷித்து எட்டி உதைப்பார். கால்கள் முட்டியுடன் நீங்கிவிடும். ஞானம் பிறக்கும். தாய் தந்தையர்க்கு தான் செய்த கொடுமைகளை எண்ணி அழுது மலை உச்சிக்கு தவழ்ந்து போய் விழுவார் மாய்த்துக்கொள்ள.

பகவான் கிருஷ்ணர் அவரைத் தாங்கி நல் வழிப்படுத்துவார். கால்கள் திரும்ப வந்து விடும் கண்ணன் கிருபையால். ஹரி சன்யாசம் மேற்கொள்வார். அந்த துஷ்டப் பெண்ணும் மனம் திருந்தி சன்யாசி ஹரி காலில் விழுந்து துறவு மேற்கொள்வாள்.

படத்தில் தாய் தந்தையரை உயர்த்தி, 'அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்டசராசரம் கண் கண்ட தெய்வம்' என்ற பாடலில் பெற்றோர் உயர்வு சொல்லப்பட்டது. பகவானே கண்ணெதிரில் தோன்றி கூப்பிட, தாய் தந்தைக்கு பணிவிடை செய்யும் ஹரி, 'சற்றுப் பொறு அவர்கள் தூங்குகிறார்கள்' என்பார்.

அறிபவனும் நீ, அறியப்படுபவனும் நீ, அறிந்தவனும் நீயே என கண் எதிரே வந்த குழந்தை கிருஷ்ணரை துதித்து ஆனந்தமாய் பாடுவார்.. 'கிருஷ்ணா முகுந்தா முராரே' என்று. தன் பெற்றோரை மதியாத ஹரியின் மனைவியும் மனம் திருந்தி விடுவார்.

(இந்த சீனை நான் யூட்யூப் மூலம் டி வியில் பார்த்த போது என் வீட்டு அம்மணி தன் முகவாய்க் கோண ஒரு பழுப்பு காட்டிப் போனார் என்னிடம்)

“இந்த ஹைதர் காலத்துப் படத்தையும் பார்க்க ஆள் இருக்குன்னா அது நீங்க தான்.”

(முக்கியமாய் பாகவதர் தாய் தந்தை கால் பாத பூஜை பண்றது அம்மணிக்கு பார்க்க பற்றிக்கொண்டு வந்தது எனத் தோணியது.)

சமூகக் கண்ணாடி
சமூகக் கண்ணாடி

ரத்தக்கண்ணீர் மோகனும் இன்றைய தலைமுறையும்: மாறாத மனித மனங்களின் சமூகக் கண்ணாடி

1954 ல் ரத்தக்கண்ணீரில் எம் ஆர் ராதா நடிக்கும் பாத்திரம் மோகனசுந்தரம். அந்த மோகன் ஃபாரின் ரிடர்ன். இந்திய கலாச்சார நாகரீகப் பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்யும் துன் மார்க்கன். அவனுக்கு அப்பா கிடையாது. வயதான அம்மா புடவை கட்டி இருப்பதையும் கிண்டல் செய்வான்.

“ஒரு கவுன் போட்டு இருக்கியா.. உன்னை அம்மான்னு சொல்ல வெட்கமா இருக்கு”, என்பான்.

அந்தத் தாயும் சகித்து ஒரு கல்யாணம் பண்ணி வைத்து விடுவாள் சொந்தத்தில். வந்த மனைவி ஒரு அப்பாவி. கணவனை எதிர்த்துப் பேசாத ஒரு கோழை. மோகனுக்கு ஒரு துஷ்டப் பெண் நட்பால் சொத்தை இழந்து தீராத நோய் பீடிக்கும். அந்த துஷ்டப் பெண் மோகனை மாடிப் படியில் காலால் நெஞ்சில் எட்டி உதைத்து போலீஸை வரவழைத்து விரட்டி விடுவாள்.

பணக்கார மோகன் பிச்சைக்காரனாய் தெருவுக்கு வந்து விடுவான். பார்வையும் போய்விடும். தவறை உணர்ந்து மனம் திருந்தி தன் மனைவியை நண்பன் கையில் ஒப்படைத்து இளைஞர்களுக்கு புத்தி சொல்லி இறப்பான். 1954 காலகட்டத்தில் இது மாபெரும் புரட்சி எனக் கருதப்பட்டது. சென்ஸார் எப்படி அனுமதித்தது என வியந்தார்கள்.

இதெல்லாம் பழைய படங்கள் போடும் டிவி சேனல்களில் பார்த்து முடித்தது சார். என்ன புதுசா சொல்ல வர்றீங்க..இப்ப போய் என்ன அலசல் வேண்டி இருக்கு..!

72 வருடங்கள் ஓடி விட்டன.. மனிதன் மாறாமல் அப்படியே இருக்கிறான். இன்றைய இளைஞர்களின பெரும்பான்மை மன நிலை பெற்றோரைப் பற்றி அப்படியே தான் உள்ளது. இல்லை இல்லை இன்னும் தாழ்ந்து விட்டது.

அமெரிக்க கலாச்சாரம் பற்றி மார்க்ட்வைன் சொன்னார்..” இங்கு அமெரிக்காவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்றாகவே கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்”

இங்கே மட்டும் என்ன வாழுதாம்.

பையன் பிளஸ் 2 படிக்கிறான்.. பின் எஞ்சினீயரிங் படிக்கிறான். வெளி நாடு செல்கிறான். அங்கே படிப்படியாக வேலைகள் மாறி ஒரு நல்ல பதவி வகித்து வருகிறான். வாடகை தரக் கட்டுபடியாகவில்லை என லோன் போட்டு வீடு வாங்கிவிட்டான்.

பத்து வருடங்கள் போயின..

எப்போதாவது வந்து போகிறான் இந்தியாவுக்கு குறைந்த நாட்கள் விசிட்.

ஏதாவது விசா, பிரச்சினை, உள் நாட்டு கெடுபிடி எனச் சொல்லி மெதுவாக வருவதை நிறுத்தி விடுகிறான். இங்கு வயதான தாய் தந்தையருக்கு மேலும் வயதாகிறது. சிலர் முதியோர் இல்லம் எனும் திறந்த வெளி சிறைச்சாலையில் பிள்ளை ஆலோசனைப் படி விலங்கிட்டுக் கொள்கிறார்கள்.

கொடுங் குற்றவாளிக்கும் சிறையில் இருந்து விடுதலை ஒரு நாள் உண்டு. இந்த தாய் தந்தையருக்கும் விடுதலை உண்டு.. அது சிவலோகப் பதவி தான்.

யாரேனும் ஒருவர் போய்விட்டால் அந்திமக் காரியங்களை யாரோ செய்ய லேப்டாப்பில் நேரடி ஒளி பரப்பு செய்யச் சொல்லி அங்கே அழுகிறான்.

அந்தக் காலத்தில் வசதியான குடும்பங்களில் ஏதேனும் துக்கம் நிகழ்ந்து விட்டால் ஜமீன் தார் அல்லது பெரும் பணக்காரர் என்ன செய்வார் தெரியுமா.. தன் நோயுற்ற அல்லது உடல் பலவீனமான மனைவி அழுதால் உடம்புக்கு ஆகாது என கூலிக்கு அழுவதற்கு ஆள் வரவழைப்பார். கூட்டமாய் வந்து அழுவார்கள் ஒரு கோஷ்டி.

இதையும் படியுங்கள்:
தேசிய விருது பட்டியலில் கமலை பின்னுக்கு தள்ளி புதிய மைல்கல்லை எட்டிய மெகா ஸ்டார் மம்முட்டி..!!
சமூகக் கண்ணாடி

ஒரு வடிவேல் காமெடியில் குங் ஃபூ வீரர்(போக்கிரி படம்) இவர் காதலில் தோற்றதுக்கு அழ வேண்டும். ஆனால் அழ மாட்டார். அவர் வீரத்துக்கு அது இழுக்கு.

அதுக்குன்னு ஒரு பையன் பின்னால் அமர்ந்து அழுவான். கை காட்ட காட்ட வேகமாக அழுவான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு.

ரத்தக்கண்ணீர் மோகன் தாயார் மறைந்து விடுவாள். ஈமக் கிரியை செய்ய நண்பன் அழைப்பான். துஷ்டப் பெண் வீட்டில் இருக்கும் மோகன் “இடுகாடு வரை கார் போகுமா” எனக் கேட்பார்.

இந்த மனநிலை தான் இப்போது வெளி நாடு வாழ் இளைஞர்களிடம் இருக்கு. ரத்தக் கண்ணீரும் ஹரிதாஸும் பழைய படங்கள் இல்லை. வருஷா வருஷம் மக்களின் வாழ்க்கைகளில் ரீ மேக் ஆகும் புதிய படங்கள் தான்.

இதையும் படியுங்கள்:
எம்.ஜி.ஆர் - பத்மினி அண்ணன்-தங்கையாக நடித்த ஒரே படம்!
சமூகக் கண்ணாடி

தமிழ் சினிமாவில் எத்தனையோ பதை பதைக்க வைக்கும் காட்சிகள் உண்டு. இது தான் முத்தாய்ப்பு. ஹரி தாய் தந்தைக்கு பாத பூஜை செய்கிறார். இக்கால இளைஞர்கள் பாத பூஜை செய்ய வேண்டாம். ஒரு வார்த்தை பேசினால் போதுமே. நல்லா இருக்கீங்களா.. சாப்பிட்டீங்களான்னு.

இத்தொகுப்பை வாசிப்பதன் மூலம், பழைய காலத் திரைப்படங்கள் காட்டிய தார்மீக விழுமியங்கள் எப்படி இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் அப்படியே தொடர்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, நமது குடும்ப உறவுகளைப் பேணிக் காக்கும் விழிப்புணர்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com