

கமலை பின்னுக்கு தள்ளி அதிக தேசிய விருதுகள் பெற்றவர்கள் பட்டியலில் முன்னிலைப் பெற்றார் மம்முட்டி! இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களின் ஒருவராக தமிழ் நடிகர் கமல் புகழப்படுகிறார். 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார். அதன் பின்னர் கமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு 1983 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'மூன்றாம் பிறை' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
அதைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு 'நாயகன்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மீண்டும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்திற்கு, கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்குவார்கள் என்று, ஒட்டு மொத்த இந்திய திரை உலகமும் எதிர்பார்த்தது. ஆனால், அந்த வருடத்திற்கான தேசிய விருது கமலுக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு 'இந்தியன்' திரைப்படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அதேவேளை 80 -களில் மலையாள சினிமாக்களின் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் மம்முட்டி, பின்னர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு 'ஒரு வடக்கன் வீரகதா' திரைப்படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு முதல் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் மம்முட்டிக்கு தேசிய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில வருடங்களில் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த நடிகராக மம்முட்டி முன்னேறினார்.
1994 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற 'மதிலுகள்' மற்றும் 'பொந்தன் மட' ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக இரண்டாவது முறை தேசிய விருது அவர் பெற்றார். 1997 ஆம் ஆண்டு 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தில் நடித்ததற்காக 3 வது தேசிய விருதையும் மம்முட்டி பெற்றார்.அந்த காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்காக 3 முறை தேசிய விருதுகள் பெற்ற நடிகர்கள் பட்டியலில் கமலும் மம்முட்டியும் ஒரே அளவில் போட்டியில் இருந்தனர்.
1997 க்கு பிறகு இருவருக்கும் கால் நூற்றாண்டு காலம் தாண்டியும் தேசிய விருது கிடைக்கவில்லை . ஆனாலும் , இருவரும் இந்திய சினிமாவின் நடிப்பிற்கான மிகச்சிறந்த உதாரணமாக இன்று வரையில் பார்க்கப்படுகின்றனர். கமலின் "வறுமையின் நிறம் சிவப்பு , ஹேராம் , மகாநதி, விருமாண்டி போன்ற திரைப்படங்கள்" சிறந்த நடிகருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
தனியாவர்தனம் , யாத்ரா , கருத்த பட்ஷிகள் , விதேயம் போன்ற திரைப்படங்களில் மம்முட்டியின் நடிப்பு தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும் வகையில் இருந்தது. 1997 ஆம் ஆண்டு முதல் இருவரும் 3 தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களாக பெயர் பெற்றிருந்தனர். 29 ஆண்டுகளுக்கு பின்னர் மம்முட்டி 'பிரம்மயுகம் ’ திரைப்படத்திற்காக 4 வது தேசிய விருதையும் பெற்று கமலை முந்தியுள்ளார். அதேநேரம் கமல் குழந்தை நட்சத்திரமாக பெற்ற விருதையும் சேர்த்தால் 4 விருதுகள் பட்டியலில் வரும்.
கமல்ஹாசன் , நான்காவது தேசிய விருதை வென்ற மம்முட்டியை பாராட்டி தனது X தளத்தில் "என் அன்புக்குரிய @mammukka, உங்களின் நான்காவது தேசிய விருதுக்கு வாழ்த்துகள். தேசிய விருதுகளின் எண்ணிக்கையில் என்னை முந்திவிடுவேன் என்று ஒருமுறை எனக்கு வாக்குறுதி அளித்திருந்தீர்கள். எப்பொழுதும் போலவே, நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்! என் நண்பரே, இன்னும் பல பாராட்டுகளைப் பெற வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்தியாவில் அதிக தேசிய விருதுகள் பெற்ற நடிகர்கள் வரிசையில் அமிதாப் பச்சனுடன் முதலிடத்தை மம்முட்டி பகிர்ந்து கொள்கிறார். சிறந்த நடிகருக்காக 4 தேசிய விருதைகளையும் , சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருது என்று மொத்தம் 5 தேசிய விருதுகளை அமிதாப் பச்சன் பெற்றுள்ளார். நடிகை ஷாபனா ஆஸ்மி சிறந்த நடிகைக்காக 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.