HBD ரம்யா கிருஷ்ணன் - ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்ட ஒரே வில்லி!

Ramya Krishnan
Ramya Krishnan
Published on

எந்த ஒரு திரைப்படத்திலும் கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவுக்கான முக்கியத்துவம் வில்லனுக்கு கொடுத்திருப்பார்கள். சில நேரங்களில் வில்லன் கதாபாத்திரம் வலுவாக அமையாவிட்டால் கூட அத்திரைப்படத்தின் வரவேற்பு குறைவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முதலாக முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடித்து ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தன்னுடைய 13 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இவரை அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது படையப்பா தான்.

பொதுவாக பெண் கதாபாத்திரங்களை மிகவும் மென்மையாகவே காட்டப்பட்டு வந்த சினிமாவில் முதன்முறையாக ஒரு பெண்ணை அதிகம் கோபப்படுபவளாக , திமிர் பிடித்தவளாக, அகம்பாவம் கொண்டவளாக சித்தரித்த படம் படையப்பா. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு என்று தனியாக எதிரிகளே இருக்க மாட்டார்கள். திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய புள்ளியாக நீலாம்பரியே இருப்பார். திரைப்படத்தின் மொத்த கதையும் நீலாம்பரியை சுற்றியே  பின்னப்பட்டு இருக்கும். படையப்பா என்ற திரைப்படம் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வன் என்ற நாவலின் ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான் என்று ஒரு கருதும் உண்டு .

திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை பழிவாங்கும் உணர்ச்சி சற்றும் குறையாத ஆக்ரோஷமான பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். அதுவரை சாதாரண நடிகையாக இருந்த இவரை மாபெரும் நடிகையாக அடையாளம் காட்டியது அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான். படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 1999 இல் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் இன்று வரை மக்களால் அதிகமாக ரசித்துப் பார்க்கப்படக்கூடிய ஒரு எவர்கிரீன் திரைப்படமாக இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நிச்சயமாக இந்த நீலாம்பரி கேரக்டரை சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ARM - 'அஜயன்டே ரண்டாம் மோஷனம்'!
Ramya Krishnan

பக்தி படங்களிலும் அதிகமாக நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ராஜகாளியம்மன், அன்னை காளிகாம்பாள் போன்ற பக்தி திரைப்படங்களின் மூலமும் இவர் மக்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றார். பாட்டாளி, பஞ்சதந்திரம்,பட்ஜெட் பத்மநாதன் போன்ற திரைப்படங்களும் ஓரளவுக்கு நல்ல  வரவேற்பை பெற்றன.

படையப்பா திரைப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு மிகச் சிறந்த திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 2015 இல் வெளியான பாகுபலி படத்தை சொல்லலாம். கம்பீரமான குரல் வளமும், சிறப்பான ஆளுமையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்த ராஜமாதா என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கும். இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம் என்று ராஜமாதா ஒலிக்கும் வசனங்கள் இன்றளவும் மீம்ஸ்களில்  அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

திரைப்படங்களைத் தாண்டி சின்னத்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் அன்றைய காலகட்டங்களில் தொகுத்து வழங்கிய தங்கவேட்டை என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அன்றைய காலகட்டங்களில் தகதக தங்க வேட்டை என்று அவர் உச்சரிக்கும் அந்த உச்சரிப்புக்காகவே அதிகப்படியான ரசிகர்கள் இருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
எனது அம்மாவின் மேல் ஒரு மூட்டைப் பணத்தை கொட்டினேன் – நடிகர் லிவிங்ஸ்டன்!
Ramya Krishnan

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனாலும் சில படங்களும் சில  படத்தின் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே எவர்கிரீன் காட்சிகளாக நிலைத்து நின்று விடுகின்றன. அப்படி நீலாம்பரியாகவும், ராஜமாதாவாகவும்  ரசிகர்களின் மனதில் சிறப்பாக இடம் பிடித்த இந்த திமிர் அழகி நீலாம்பரியின் திரை பயணங்கள் மென்மேலும் தொடரட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com