தமிழ் சினிமாவின் முதல் படம் எது தெரியுமா? பலரும் அறியாத 5 சுவாரசிய ரகசியங்கள்!

கீசக வதம் முதல் நந்தகுமார் வரை - தற்கால சினிமா ரசிகர்கள் அறிந்திராத தமிழ் திரையுலக வரலாற்று மைல்கற்கள்.
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

இன்று உலக அரங்கில் தமிழ் சினிமா திரையுலகம் பல பெருமைகளுடன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் பல தடைகள் சவால்களை அது கடந்து வந்த ஒப்பற்ற பாதை.

சாதனையாளர்களின் தடம் பதித்த தமிழ் சினிமாவின் வரலாற்றில் சில “முதல்” சாதனைகள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் பலருக்கும் தெரியாது. அதிலும் தற்கால சினிமாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் நிச்சயமாக இவற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

வரலாற்று ஆதாரங்களுடன் 5 தகவல்கள் இதோ:

1. தமிழ் சினிமாவின் முதல் படம் இதுதான்- கீசக வதம்

ஆர். நடராஜ முதலியார் உருவாக்கிய ‘கீசக வதம்’ 1916-ல் தயாரிக்கப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது தென்னிந்தியாவின் ஆரம்பகால முழுநீள ஊமைப் படங்களில் முக்கியமானது.இத்திரைப்படத்தை இயக்கியவர் மற்றும் தயாரித்தவர் ஆர். நடராஜ முதலியார் ஆவார். இவரே தமிழ் சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் silent (ஊமை) திரைப்படம் இதுவே ஆகும்.

மகாபாரதத்தில் இடம்பெறும் கீசகன் - திரௌபதி இடையேயான கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்தில் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் 'இந்தியா பிலிம் ஸ்டுடியோ' என்ற நிறுவனத்தை நிறுவி, இப்படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி சாதனை படைத்தார் நடராஜ முதலியார் என்பது பெரும் சிறப்பு. அப்போது படத்தில் வசனம், ஒலிப்பதிவு எதுவும் இல்லாமல் திரையரங்கில் காட்சிகள் ஓடும்போது, நேரடியாக இசைக்கலைஞர்கள் இசை வழங்குவது வழக்கம் என்பது சுவாரஸ்யமான தகவல்.

2. முதல் தமிழ் பேசும் படத்தின் ரகசியம் தெரியுமா?

எச் . எம். ரெட்டி இயக்கி டி. பி. ராஜலட்சுமி கதாநாயகியாக நடித்த காளிதாஸ் தான் இந்தியாவின் முதல் தமிழ் பேசும் படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1931 அக்டோபர் 31 தீபாவளித் திருநாளில் வெளியான ‘காளிதாஸ்’ பற்றிய சில சுவாரசியமான மற்றும் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் 100% முதல் பேசும் படமாக பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் இப்படம் முழுக்க முழுக்கத் தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் பேசும் படம் என்று அழைக்கப்பட்டாலும், இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் கலந்திருந்தன.

தமிழ், தெலுங்கு, சில இடங்களில் இந்தி ஆகிய மொழிகள் இடம்பெற்றன. கதாநாயகி ராஜலட்சுமி தமிழிலும் கதாநாயகன் பி. வி. ராவ் தெலுங்கிலும் பேசி நடித்துள்ளனர். படத்தின் கதாநாயகி ராஜலட்சுமி தமிழில் பேச, கதாநாயகன் தெலுங்கில் பேசினார். படத்தில் வந்த மற்ற கதாபாத்திரங்கள் இந்தியிலும் பேசியுள்ளனர். அக்காலத்தில் ஒலியைப் பதிவு செய்யும் தொழில்நுட்பம் (Talkie technology) புதியதாக இருந்ததால், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நடிகர்களை வைத்து அன்றைய பம்பாயில் (மும்பை) இந்தப்படம் படமாக்கப்பட்டது. அதனால், பின்னர் முழுமையான தமிழ்ப் பேசும் படமாக ‘காளவரிஷி’ (1932) என்று தகவல்கள் குறிப்பிடப்படுகிறது.

3. தென்னிந்தியா முழுவதும் 101 தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்த சினிமா பற்றித் தெரியுமா?

இன்று ஒரு படத்தை அசால்ட்டாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் வசதி உள்ளது. ஆனால் அன்று புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது என்பதே பெரும் பாடாக இருக்கும். அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள 101 தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது 'உலகம்' எனும் தமிழ்ப் படம்.

1953 ஆம் ஆண்டு எம்.எச்.எம்.மூனாஸ் தயாரிப்பில், எல்.எஸ்.இராமச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கினார்.சித்தூர் வி.நாகையா, டி.இ.வரதன், எம்.வி.ராஜம்மா, பி.எஸ்.வீரப்பா, பி.கே.சரஸ்வதி, டி.கே.பகவதி உள்ளிட்ட அந்தக்கால முன்னணி நடிகர்கள் நடித்த இந்தப் படத்தில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் தாராசிங்கின் குத்துச் சண்டை காட்சிகள், லலிதா மற்றும் பத்மினியின் நடனக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றன.

அதோடு அப்போதைய காலகட்டத்தில் சென்னையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளும் படத்தில் இணைக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சாதனைப் படமான உலகம் போதிய வரவேற்பைப் பெறாமல் போனாலும் ஒரு படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு தந்தது இந்தப் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

4. நடிப்பிலும் இயக்கத்திலும் அசரவைத்த முதல் பெண் இயக்குனர்

இந்தியாவின் ஆரம்பகால பெண் இயக்குநர்களில் ஒருவரான டி.பி. ராஜலட்சுமியின் சாதனை இன்றும் முறியடிக்கப்படவில்லை என்பது சிறப்பு.அந்தக் காலத்தில் ஒரு பெண் கேமராவுக்கு முன்பும், பின்னாலும் இருந்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியது மிகப்பெரிய முன்னோடி முயற்சியாக இன்றும் போற்றப்படுகிறது. டி.பி. ராஜலட்சுமி நடிகையாக மட்டுமல்லாமல், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் முன்னோடியாக இருந்தார். இவர் 1936-ல் வெளியான ‘மிஸ் கமலா’ திரைப்படத்தை அவர் தயாரித்து, இயக்கி, திரைக்கதை எழுதி, நடித்தார்.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா

இதனால் இந்தியாவின் ஆரம்பகால பெண் இயக்குநர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றார். பன்முகக் கலைகளில் சகலகலாவல்லியான டி.பி. ராஜலக்ஷ்மி 35க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளதும் சிறப்பு. தமிழ் சினிமாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளுக்காக 1961இல் 'கலைமாமணி' விருது பெற்றார். இவர் முதல் தமிழ்ப் படமான கீசகவதத்திலும் நடித்தது பெருமை.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமாவின் தேன் குரல்: ஜமுனாராணியின் இசைப் பயணம்!
தமிழ் சினிமா

5. தமிழில் பிண்ணனி பாடல் (Playback Singing) வந்த சுவாரஸ்யமான விஷயம்

சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களே படப்பிடிப்பின்போது பாட வேண்டியிருந்தது. இதனாலேயே நன்கு நடிக்கத் தெரிந்தவர்களைவிட நன்கு பாடத் தெரிந்த பாகவதர் போன்றோர் பெரும் புகழ் பெற்றனர். இந்த காலகட்டத்தில் ஏ. வி. மெய்யப்பன் தயாரிப்பில், கேசவ் ராவ் தைபர் இயக்கத்தில் 1938-இல் வெளியான நந்தகுமார் ஒரு மைல்கல் திரைப்படமாகும். குறிப்பாக ‘நந்தகுமார்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பிண்ணனி பாடல் முறையை அறிமுகப்படுத்திய படமாக பல வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் பின்னணி இசை மேதை எஸ். வி. வெங்கட்ராமன் தனது இசைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலமே தொடங்கி புதுமையை புகுத்தி உள்ளார். ஆம். ‘நந்தகுமார்’ படத்தில் லலிதா வெங்கட்ராமன், திரையில் தோன்றிய கதாபாத்திரத்திற்காக பாடலைப் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்தமுறை வளர்ந்து, நடிகர் வேறு — பாடகர் வேறு என்ற நடைமுறை மற்றும் டெக்னாலஜி வசதிகள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியது. தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாகவே பின்னணி இசையும் பாடல்களும் இருப்பது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சூர்யாவின் படத்தை பார்த்துவிட்டு தம்பி கார்த்தி போட்ட மாஸ் பதிவு!
தமிழ் சினிமா

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த டி. ஆர். இராமச்சந்திரன் அறிமுகமான இப்படத்தில் அந்த காலத்திலேயே 'காளியமர்தனம்' போன்ற கிருஷ்ணரின் லீலைகளைக் காட்ட பல ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (Special Effects) மற்றும் தந்திரக் காட்சிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. இவைகளுடன் 1937-ல் வெளியான ‘நவயுவன்’ எனும் திரைப் படம் முதன்முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்டு தமிழ்ப் பட வரலாற்றில் ஒரு வித்தியாசமான சாதனையைப் படைத்தது. இதன் சில காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் நடந்ததாகவும். அதைப் பற்றிய விமர்சனம், படம் பொதுமக்களுக்கு வெளியாகும் தேதிக்கு முன்பே சுதேசமித்திரன் (Swadesamitran ) பத்திரிகையில் வந்ததாக ஒரு வரலாற்றுக் கட்டுரை பதிவு செய்கிறது. முதல் என்பதுடன் அடுத்தடுத்த கட்டங்களில் நமக்குத் தெரியாத பல ஆச்சரியங்கள் தமிழ்த் திரையுலகில் அல்ல கடலில் புதைந்து உள்ளது. அவற்றில் சிறு துளிகள்தான் இங்கு.

முதல் தமிழ் பேசும் படமான 'காளிதாஸ்' திரைப்படத்தில் பிற மொழிகள் கலந்திருந்த பின்னணி மற்றும் பம்பாயில் படமாக்கப்பட்டதற்கான காரணங்களை விரிவாக அறியலாம்.

logo
Kalki Online
kalkionline.com