தமிழ் சினிமாவின் தேன் குரல்: ஜமுனாராணியின் இசைப் பயணம்!

10 வயதில் தொடங்கி பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை வென்ற ஜமுனாராணியின் சோகமான மறைவு.
ஜமுனாராணி
ஜமுனாராணிAI image
Updated on

கிறங்கடிக்கும் குரலரசி ஜமுனாராணி

'எனக்காகவே நான் உனக்காகவா, காளை வயசு கட்டான சயிசு களங்கமில்லா மனசு, பாட்டொன்று கேட்டேன், இவர் கானா, அந்திமலர் பூத்திருக்கு ஆசைமனம் காத்திருக்கு, சித்திரத்தில் பெண்ணெழுத்தி, எல்லா பாடல்களுக்கும் மேலாக 'மாமா மாமா மாமா', எத்தனை எத்தனை முத்து முத்தான பாடல்கள்...!

இந்த எல்லா பாடல்களும் தன் தேன் குரலில் நமக்கு தந்த இசைராணி ஜமுனாராணி இன்று நம்முடன் இல்லை!

கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி காலை பெங்களூரூவில் அவர் சொந்த வீட்டில் இறைவன் அடி சேர்ந்தார் ஜமுனாராணி!

இதே மாதம் ஜூலை 11 ஆம் அன்று 'இசைக்குயில்' ஜானகி அம்மா கூட காலமானார்! குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இரண்டு பேருமே தெலுங்கு தாய்மொழியாக கொண்ட இசை பறவைகள்; ஆனால் தமிழுக்கு அவர்கள் கொடுத்த பெருமை கொஞ்சமா? அட்ஷர சுத்தமான கவித்துவமான தமிழை இனிமையாக உச்சரித்து ரசிகர்கள் மனதில் ஒரு பாட்டு வசந்தமாகவே வாழ்ந்தார்கள்!

ஒரு இசை பறவையின் பிறப்பு

1938 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் அன்று தமிழ்நாட்டில், நம்ம சென்னையில் பிறந்தவர் தான் ஜமுனாராணி. கே வரதராஜுலு நாயுடு, திரௌபதி தம்பதிகளின் செல்ல புதல்வியாக பிறந்து தாயாரின் வீணை இசை இனிமையால் ஈர்க்கப்பட்டு சின்ன வயதிலேயே பாட்டு முறையாக கற்றுக்கொண்டார் ஜமுனாராணி.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இசை பேராசிரியர் சாம்பமூர்த்தி இசை குழுவில் வீணை இசைத்த அம்மா திரௌபதியைத்தான் முதல் 'குரு' என்று ஜமுனா சொல்வதுண்டு. ஆனால் இயற்கையாக வந்த குரல் இனிமை சங்கதிகள் பிசகு இல்லாமல் பாடுகின்ற திறன், மேலும் ராக அறிவு எல்லாம் கலந்த கலவை தான் ஜமுனாராணி.

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகை, 'சகலகலாவல்லி' என்று எல்லோராலும் போற்றப்பட்ட பானுமதி, ஜமுனாவின் திறமை அறிந்து அவர் சொந்த தயாரிப்பான 'ரத்தினமாலா ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் 10 வயது பாடகியாக பாடவைத்தார். அதற்கும் முன்பு நடிகரும் பாடகருமான நாகைய்யா தயாரித்து இயக்கி தியாகப்ரம்மமாக நடித்த 'தியாகய்யா' என்ற படத்தில் குட்டி ஜமுனா, தன்னை விட 4 வயசு மூத்த பாடகி ஏ பி கோமளா வோடு கலந்து ஒரு ஆனந்தபைரவி ராக பதம் பாடி தன் இசை வாழ்க்கைக்கு தொடக்கமிட்டார்!

1952 இல் வளையாபதி படத்தின் மூலமாக தமிழுக்கு பாட வந்தார். அந்த படம் தான் அமரர் தி எம் சவுந்தர்ராஜனின் முதல் டூயட் பாடல்கள் பாடிய பெருமை பெற்றார் ஜமுனாராணி.

ஜமுனாராணி
ஜமுனாராணி

கவியரசர் கண்ணதாசன் மிகவும் விரும்பிய பாடகியாக சேலம் மாடர்ன் தேட்டர்ஸ் வளாகத்தில் வலம்வந்த ஜமுனாராணி , அவரோட சொந்த படங்களில் கூட இணைபிரியா பங்கு வகித்தார்! 1955 இல் வெளியனான 'குலேபகாவலி' படம் ஜமுனாராணியின் பன்முக திறமையை பறைசாற்றியது. குடிபோதையில் ஒரு பெண் தன்னை மறந்து பாடிய 'ஆசையும் என் நேசமும் ரசபாசத்தினால் ஏங்குவதை பாராயை டா ' என்று விக்கி விக்கி பாடிய பாட்டு பல இசை மேதைகளை ஜமுனாவின் பால் ஈர்த்தது.

புகழின் உச்சி தொட்ட பாடகி

1950 களில் தமிழ் திரை இசையில் பல புதுமைகள் செய்த ஜி ராமநாதன், கே வி மஹாதேவன், விசுவநாதன் - இராமமூர்த்தி ஜமுனாவை புகழின் உச்சி தொட வைத்தனர்.

ஜமுனாராணியின் புகழ் ஓங்கி ஒலித்த பாடல் அவர் தன் உயிர் தோழி ஜிக்கியுடன் பாடிய 'யாரடி நீ மோகினி 'பாடல். 'நான் வேண்டுமா தேன் வேண்டுமா' என்று அவர் சிணுங்குவது அலாதியாக இருக்கும்.

கே வி மஹாதேவன் இசையில் 'பொம்மை கல்யாணம்' படத்தில் பாடிய 'நில்லு நில்லு மேகமே' கேட்கவேண்டிய ஒரு பாடல்.

விசுவநாதன் ராமமூர்த்தி இணை, டீ ஆர் மகாலிங்கம் நடித்த 'மாலையிட்ட மங்கை' படத்தில், செந்தமிழ் தேன்மொழியாள் ' என்ற காலத்துக்கும் அழியாத காவிய பாடலை பாட ஜமுனாவை தேர்ந்தேடுத்தனர் என்பதே அவருடைய திறமைக்கு சான்று . 'சபாஷ் மினா ' படத்தில் 'வீணான ஜம்பம் ஏனடி ராசாத்தி' என்று தன் சஹோதரிபோல் ஜமுனா நேசித்த 'இசை அரசி' சுசீலாவுடன் பாடி கலக்கி இருந்தார்!

நகைச்சுவை நடிகரும், பாடகருமான சந்திரபாபுவுடன் 'குங்கும பூவே கொஞ்சும் புறாவே' என்று கொஞ்சிய அவர், தெய்வப்பிறவி படத்தில் எம் என் ராஜம் குரலாகவே மாரி 'தாரா தாரா வந்தாரா' 'காளை வயசு கட்டண சைசு களங்கமில்லா மனசு ' என்று காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் குரலாகவே மாறினார்.

கவலை இல்லாத மனிதன் படத்தில் 'காற்றில் மரம் உறங்கும்', அதேபோல் குமுதம் படத்தில் 'மாமா மாமா மாமா , சிட்டுப்போல பெண்ணிருந்தால் ' என்று இளமை துள்ளலோடு டிஎம் எஸ்ஸோடு பாடிய பாடல் திரையுலகில் அவருடைய இடத்தை நிலையாக்கியது.

பாசமலர் படத்தில் ஜமுனாராணி பாடிய பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்' என்ற பாட்டு அவர் குரலில் உள்ள நெளிவு சுளிவு, சங்கதிகள் பாடிய பாங்கு, எல்லாம் சேர்ந்து அவர் ஒரு குரல் இசை மேதை என்று பறை சாற்றுகிறது.

1962 யில் வெளிவந்த 'ராணி சம்யுக்தை' படத்தில் கே வி மகாதேவன் இசையில் அவர் பாடிய 'சித்திரத்தில் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே', என்ற பாடல் சோகத்தின் வெளிப்பாடாக பத்மினியின் நடிப்புக்கு மெருகூட்டியது.

இதையும் படியுங்கள்:
Interview: மெலட்டூர் பாகவத மேளா - கலைமாமணி எஸ்.குமார் அவர்களுடன் ஒரு பிரத்தியேக சந்திப்பு!
ஜமுனாராணி

அந்த கால முன்னணி நடிகைகள் சாவித்திரி, ஜமுனா, வைஜயந்திமாலா, எம் என் ராஜம் , ராஜசுலோச்சனா, சாரதா, அஞ்சலி தேவி, ஜெயலலிதா, சுகுமாரி என்று நீளமான பட்டியலே போகுது ஜமுனாராணி அம்மாவின் பாடல் படலத்தில்!

கவர்ச்சி கன்னிகளுக்கு எல் ஆர் ஈஸ்வரி பாடல் என்ற முறை வருவதற்கு முன்பு ஜமுனாராணி தான் பாடணும் என்ற நிலைமை இருந்தது.

மெதுவாக எல் ஆர் ஈஸ்வரி யுகம் வந்த பிறகு 1960 களின் பிற்பகுதியில் ஜமுனாராணி வாய்ப்புக்கள் குறைய தன் சகோதரனின் அன்பு தங்கையாக அண்ணாவின் மக்களே தன் பிள்ளைகளாக கன்னியாகவே வாழ்க்கை நிம்மதியாக கழித்தார்.

1980 களில் இளையராஜா இசையில் அவரும், எம் எஸ் ராஜேஸ்வரியும் இணைந்து பாடிய 'நான் சிரித்தால் தீபாவளி ' என்று கொஞ்சும் குரலில் பாடியவர் கடைசியாக பிரபல தெலுங்கு நடிகர் , எழுத்தாளர் , தயாரிப்பாளருமான தணிகெல்லா பரணி இயக்கத்தில் 2012 யில் வந்த 'மிதுனம் ' தெலுங்கு படத்தில் 'இவரு கேலிச்சிரிப்புடு ' என்று பாடி இசை வாழ்க்கை நிறைவு செயதார் ஜமுனாராணி .

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
ஜமுனாராணி

சிங்களத்தில் வெற்றிக்கொடி

ஜமுனாராணி என்றாலே சிங்கள தேசத்தில் ஒரு சுசிலா, ஒரு ஜானகி, ஒரு லதா மங்கேஷ்கர் மாதிரி ஸ்ரீலங்கா அரசால் கௌரவிக்கப்பட்ட பாடகியாக 1950 களில் இருந்து 1990 கள் வரை சிங்கள பின்னணி குரல் அரசியாக திகழ்ந்தார் ஜமுனாராணி .2005 ல் ஸ்ரீலங்கா குடிஅரசு தலைவர் மஹிந்த ராஜபக்சே கைகளால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஒரே இந்திய பின்னணி பாடகி ஜமுனாராணி ஆவார். இது தென்னிந்தியாவுக்கே பெருமை.

தமிழுக்கு அவர் செய்த தோண்டு அளப்பரியது . திரையிசை ராணியாக ஜொலித்த அவர்க்கு தமிழ்நாடு அரசு 'கலைமாமணி', கலைஞர் விருது , 2020 யில் புரட்சி தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது என்று பல விருதுகள் கொடுத்தது!

இன்று அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம்! ஆனால் அவர் பாடிய 'எனக்காகவா நான் உனக்காகவா ' பாடல் மாதிரி அவர் இசை நமக்காக வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம் பழம்பெரும் பாடகி ஜமுனாராணியின் அரிய சாதனைகளையும், திரையுலகில் அவர் எட்டிய புகழின் உச்சியையும் பற்றிய முழுமையான வரலாற்றை மனநிறைவுடன் தெரிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com