விமர்சனம்: ஹவுஸ்மேட்ஸ் - குழப்பத்துடன் ஒரு பேய் படம்!
ரேட்டிங்(2.5 / 5)
கிளாஸ் மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் இருப்பது போல ஹவுஸ் மேட்ஸ் என்று சிலர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் வந்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்.
ராஜவேல் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி நடித்துள்ளார்கள்.
வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தர்ஷன் - அர்ஷா தம்பதிகள் சென்னை வேளசேரியில் உள்ள அப்பார்ட் மென்ட்டில் புது வீடு வாங்கி குடிபோகிறார்கள். சென்ற சில நாட்களில் நாற்காலி தானாக நகர்வது, யாரோ வரைந்து வைத்துள்ள ஓவியம் கண்களில் தென்படுவது என சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதை இறந்து போன ஆத்மாக்கள் தான் செய்கின்றன என நம்பும் தர்ஷனும் அர்ஷாவும் அந்த ஆத்மாக்களை ஒரு கரும்பலகை வழியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
அந்த ஆத்மாக்கள் இது எங்கள் வீடு, இப்போது நடப்பது 2012 ஆம் ஆண்டு என்று சொல்கின்றன. இதை சரி செய்ய இறந்து போனவர்களுக்கு 2012 ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தர்ஷன் சில விஷயங்களை செய்கிறார். அந்த ஆத்மாக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதா? இல்லையா என்று சொல்கிறது மீதிக்கதை.
பேய், அமானுஷ்யம் என்று தொடங்கும் கதை, காமெடி ட்ராக் மாறுகிறது. சரி இனி மேல் சிரிக்கலாம் என்று யோசிக்கும் போது கதை த்ரில்லர் - டைம் ட்ராவல் நோக்கி போகிறது. இறுதியில் செண்டிமெண்ட்டாக முடிகிறது.
அமானுஷ்யம், டைம் ட்ராவல், திரில்லர் இந்த மூன்றில் ஒன்றை டைரக்டர் முழுமையாக தந்திருந்தால் கூட ஹவுஸ் மேட்ஸ் சுவாரசியமாக வந்திருக்கும் இரண்டேகால் மணி நேர படத்தில் மூன்றையும் சொல்ல நினைத்து எந்த ஒன்றையும் சரியாகவும், முழுமையாகவும் சொல்ல தவறி விட்டார் டைரக்டர். பெரும் பான்மையான காட்சிகள் ஒரு அப்பாரட்மெண்ட் வீட்டில் நடக்கிறது. ஒரே போன்ற காட்சிகள் படத்தில் மறுபடி, மறுபடி வருவது சற்று அயற்சியை தருகிறது. இதை தவிர்க்க திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம்.
நடிப்பும், பின்னணி இசையும் படத்தின் பாசிட்டிவான விஷயங்கள். காளி வெங்கட் மனைவியாக வரும் வினோதினி இறந்த தன் மகனை நினைத்து கதறி அழும் காட்சியிலும், இறுதியில் மகன் மீண்டும் வரும் இடத்திலும் நடிப்பில் மறைந்த நடிகை சுஜாதாவை நினைவுபடுத்துகிறார்.
அர்ஷா பைஜூவுக்கு தமிழில் இது முதல் படம். மலையாளத்தில் பல படங்களில் நடித்த அனுபவம் இவர் நடிப்பில் தெரிகிறது. நடிப்பில் பயம், சோகம் இரண்டையும் தாண்டி நடிப்பில் நகைசுவை நன்றாக அம்மணிக்கு வருகிறது.
காளி வெங்கட்டிற்கு 'ஜூனியர் ரெங்காராவ்' என்ற பட்டம் தரலாம் என்று சொல்லும் அளவில் குணசித்திர நடிப்பில் பிரமாதமாக நடிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அழும் போது நம்மை அறியாமல் நமக்கு கண்ணீர் வந்து விடுகிறது.
தர்ஷன் இனி அடுத்து நடிக்கும் படங்களில் ஹோம் ஒர்க் செய்து கொண்டு நடிப்பது நல்லது. பல காட்சிகளில் ஒரே போன்ற முகபாவனையை காட்டுகிறார்.
வித்தியாசமான ஒன்லைனை யோசித்து விட்டு, சரியான casting ( நடிகர், நடிகைகள் தேர்வு) செய்து விட்டு திரைக்கதை அமைப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதால் இந்த ஹவுஸ் மேட்ஸ் நம் மனதில் நிற்க்காமல் போய் விடுகிறார்கள்.