விமர்சனம்: விவாகரத்துதான் முடிவா? 'தலைவன் தலைவி' சொல்லும் பதில்!
ரேட்டிங்(3.5 / 5)
'கணவன் - மனைவி உறவுன்றது அற்புதமான உறவுன்னு சொல்லுவாங்க, ஆனா இந்த உறவை தக்கவைச்சுகக்க இங்க ஒவ்வொருத்தரும் படாத பாடு பட வேண்டி இருக்கு" என தலைவன் - தலைவி படத்தில் விஜய் சேதுபதி வசனம் சொல்லும் போது ஆண்களில் பலர் தியேட்டரில் கை தட்டுவதை பார்க்க முடிந்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளி வந்துள்ள படம் 'தலைவன் தலைவி'.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள், கணவன் மனைவியாக இருக்கும் ஆகாச வீரனும் (விஜய் சேதுபதி) பேரரசியும் (நித்யா மேனன்). இவர்களுக்கு ஒரு கை குழந்தை இருக்கிறது. ஈகோ காரணமாக இவர்களுக்குள் சிறு சிறு சண்டை வருகிறது. பேரரசி அவ்வப்போது கோபித்து கொண்டு தனது அம்மா வீட்டிற்கு செல்கிறார். இவர்களின் இரண்டு பக்கமும் இருக்கும் உறவுகளும், இவர்களின் ஈகோவிற்கு 'தூபம்' போடுகிறார்கள். இதனால் பேரரசி நிரந்தரமாக தனது அம்மா வீட்டில் தங்கி விடுகிறார்.
ஒரு நாள் ஆகாச வீரனுக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தைக்கு மொட்டை அடிக்க ஒரு மலை கோவிலுக்கு வருகிறார்கள் பேரரசி குடும்பத்தினர். இந்த தகவல் ஆகாச வீரனுக்கு தெரிய வருகிறது. கோபம் கொள்ளும் ஆகாச வீரனும், அவரது குடும்பத்தினரும் தகராறு செய்ய கோவிலுக்கு வருகிறார்கள். அந்த கோவிலில் நடக்கும் விஷயங்கள் தான் இந்த படத்தின் கதை.
கணவன் - மனைவி பிரச்னைக்கு பெரிய காரணம் எல்லாம் தேவையில்லை. சிறிய ஈகோக்கள் தான் விவாகரத்து வரை கொண்டு செல்கிறது என சொல்லி இருக்கிறார் டைரக்டர். படத்தின் திரைக்கதை ஒரு நேர்கோட்டில் பயணிக்காமல், பல்வேறு இடங்களில் மாறி மாறி செல்கிறது. இருந்தாலும் குழப்பம் இல்லாமல் இருக்கிறது.
இந்த திரைக்கதைக்கு தனது எடிட்டிங் மூலம் சிறப்பாக்கி இருக்கிறார் பிரதீப். இதுவரை மலை, காடுகள் என ஒளிப்பதிவு செய்து வந்த சுகுமார் இப்படத்தில் வீடு, ஹோட்டல், கோவில் என சாதாரண இடங்களிலும் தனது பதிவை செய்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் ரசிக்க முடிகிறது. "சாரிடி தெரியாம பண்ணிட்டேன்", என மனைவியிடம் கெஞ்சும் போதும், பிரிந்த மனைவி மீண்டும் சேர வேண்டும் என்பதற்காக பரிகாரம் என்ற பெயரில் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் போதும், அம்மா, மனைவி இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் போதும் நடிப்பில் மாஸாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
பெண்கள் படும் துயரங்களை பற்றிதான் பல படங்கள் பேசி வருகின்றன. ஒரு குடும்பத்தில் அம்மா, மனைவி, தங்கை, மாமியார், மச்சினன் என பலரால் 'பந்தாடப்படும்' ஒரு சராசரி அப்பாவி ஆண் மகனை பற்றி பேசும் படங்கள் மிக குறைவு. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து பல ஆண்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
நித்யா மேனன் பேரரசியாக சிறப்பாக நடித்திருக்கிறார். கணவன் மீது கோபம் கொண்டு அடிக்கும் போதும், பின்னர் கணவனை நினைத்து ஏங்கும் காட்சியிலும் நித்யா ஒரு சராசரி பெண்ணை கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
அம்மாவாக நடிக்கும் தீபா, மாமனாராக நடிக்கும் செம்பன் வினோத் இருவரும் சரியான தேர்வு. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நீண்ட நாட்களுக்கு பின்பு யோகி பாபு தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்திருக்கிறார்.
சிறிது நேரம் ஒதுக்கி கணவன் - மனைவி மனம் விட்டு பேசினால் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று சொல்கிறது தலைவன் தலைவி. தலைவன் தலைவி ஒரு யதார்த்த வாழ்க்கை பதிவு.