அது ஒரு பெரிய இடத்துக் கல்யாணம். பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்!
பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் ஆன்மீகத்தில் அதிகப் பற்றுக் கொண்டிருந்ததால், திருமணத்தை நடத்தி வைக்கத் திருமுருக கிருபானந்த வாரியாரை அழைத்திருந்தார்கள்!
அவரும் தன் உதவியாளர்களுடன் வந்து விட்டார். அவரைக் கண்ட விருந்தினர்கள்,சுற்றி நின்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்...
அப்பொழுதுதான் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் அங்கு வந்தார். வாரியாருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவரை, நண்பர்கள், கல்யாண வீட்டுக் காரர்கள் என்று அனைவரும் உபசரித்து ஓய்ந்ததும், வாரியாரிடம் பேச ஆரம்பித்தார்!
ராதா எதையும் ஓபனாகப் பேசக் கூடியவர் என்பதும், யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாதவர் என்பதும் பிரசித்தம். அவர் நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அனைவரையும் கேள்வி கேட்டுக் கிறங்க அடிப்பதிலும் வல்லவர்.
அருகில் வாரியாரைக் கண்டதும் அவருக்கு ஏக குஷி! அவருக்கே உரித்தான நக்கல் தொனியில் கேள்வியை ஆரம்பித்தார்...
"ஆமாம் சாமி... ஒரு தலை உள்ள நாமெல்லாம் ரெண்டு பக்கமும் நம்ம இஷ்டத்துக்கு ஒருக்களிச்சுப் படுத்துத் தூங்கறோம். ஒங்க சாமீ முருகனுக்கோ ஆறு தலைன்றான்!ஆமாம் போட நீங்கள்லாம் இருக்கீங்க. எப்படி சாமீ முருகனாலே தூங்க முடியும்?நெனச்சுப் பாத்தீங்களா? எனக்குக் கொஞ்சம் பதில் சொன்னா நல்லாருக்கும்!" என்று கேட்டுவிட்டு எகத்தாளமாகப் பார்த்தார்.
கூடி நின்று இதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும், வாரியாரின் உதவியாளர்களும் திகைத்துப் போயினர். வாரியாரை, இந்தக் கூட்டத்தில் இக்கட்டில் மாட்டி விடுகிறாரே என்று நடிகவேள் மீது, உதவியாளர்களுக்கு உள்ளூறக் கோபம். அதை வெளியிலும் காட்டிக்கொள்ள முடியவில்லை அவர்களால்!உள்ளுக்குள்ளேயே குமைந்தனர்.
ஆனால் வாரியாரோ புன்சிரிப்பு மாறாமல், அங்கு சென்று கொண்டிருந்த மணப்பெண், மற்றும் மாப்பிள்ளையின் தந்தைகளை அருகில் அழைத்தார். எதற்கு என்று மற்றவர்களுக்குப் புரியவில்லை. நிமிடத்தில் ஓர் இறுக்கம் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது!
"என்ன கல்யாண வேலையில ரொம்ப பிசியா? ராத்திரி நிம்மதியா தூங்கினீங்களா?" என்றார் வாரியார்! சாமியை வணங்கி விட்டு அவர்கள் சொன்னார்கள்...
"எங்க சாமி தூங்கறது? விடிஞ்சா கல்யாணம்; எல்லாம் நல்லபடியா நடக்கணுமே அப்படீங்கற பயத்ல படுத்தாலும் தூக்கம் வர்ல. நாங்க ஒழுங்காத் தூங்கிப் பல நாளாச்சு," என்றார்கள் கோரசாக!
இப்பொழுது வாரியார் ராதா பக்கம் திரும்பி, புன்முறுவல் மாறாமலே கூறினார்...
"பாருங்க! ஒரு கல்யாணம் பண்ற இவங்களே பல நாளாத் தூங்கல! பல கோடி கல்யாணத்தை நடத்தி வைப்பவன் எம்பெருமான் முருகன். அது மட்டுமா? எத்தனை கோடி விண்ணப்பங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடம்! அவனுக்குத் தூங்க ஏதுங்க நேரம்?" என்றார்!
சுற்றியிருந்தவர்கள் சுவாமிகளின் விளக்கத்தைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தனர்! ராதாவின் முகத்தில் ஈயாடவில்லை!