
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாளுக்குநாள் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இது தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 64,480க்கும், ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.8060க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம்தேதி ரூ.62,320க்கு இருந்த தங்கம் விலை இன்று ரூ. 64,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,160 உயர்ந்துள்ளது. முகூர்த்த சீசனான இந்நேரத்தில், தற்போது தங்கத்தின் விலை நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தங்கம் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும் தங்கத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்கம் முந்தைய காலம் முதல் இன்று வரை தங்கம் கௌரவத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விலை உயர்வால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே மாறி விட்டது தங்கம்.
தங்கத்தில் விலை ஏற ஏற அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏனெனில் இனி தங்கம் விலை குறையாது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்பதால் குடும்ப பெண்கள் முதல் ஐடியில் வேலை செய்யும் பெண்கள் வரை தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யத்தொடங்கி விட்டனர்.
அதுமட்டுமின்றி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவோருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தங்கத்தின் விலையில் 75 சதவீத தொகையை கடனாக பெற முடியும் என்பதால் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி ஆர்பிஐ தகவலின் படி கடந்த ஒரு வருடத்தில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறது. இந்த விலை உயர்வால் தங்கம் வைத்திருப்பவர்கள் ஏதாவது அவசர தேவைக்கு அதை அடமானம் வைத்து பணம்பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் ஏழைகள் தாலிக்கு கூட தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூலி வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஏழைகளில் வருமானம் உயராத நிலையில் தங்கம் விலை மட்டும் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழைகள் மூக்குத்தியாவது தங்கத்தில் வாங்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிராசையாகவே மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏழையாக இருப்பதால் தங்கம் வாங்க வேண்டும் என்ற இவர்களின் சின்ன ஆசை கூட மறுக்கப்படுகிறது. தங்கம் வைத்திருப்பவர்கள் அதை வைத்து அவசர தேவைக்கு கடன் வாங்கலாம், ஆனால் தங்கம் இல்லாத ஏழைகள் கடனுக்கு மாற்றாக என்ன கொடுக்க முடியும்.
தங்க நகையை போட்டு கொண்டு வெளியில் போறவங்களுக்கு நகை திருடர்களால் நகைக்கும், உயிருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலையே உள்ளது. தங்கம் விலை ஏற்றத்தால் நகை திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கு ஏதாவது தளர்வு இருக்கும் என்று பெண்கள் அதிகளவு எதிர்பார்த்த நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை உயர்வை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் இதை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் ஏதாவது முயற்சி எடுத்தால் மட்டுமே ஏழைகளும் தங்கம் வாங்கும் நிலை ஏற்படும்.